Wednesday, February 25, 2015

மீளுமா ஐரோப்பிய யூனியன்? பண்டைய கிரேக்கத்திற்கா இந்தநிலை....?







கிராமப்புறங்களில் வாழ்ந்து கெட்ட வீடு என்று, பெரிய இடிபாடுகள் கொண்ட வீட்டைக் காட்டிச் சொல்வதுண்டு. ஐரோப்பாவைச் சேர்ந்த பிரிட்டன், போர்த்துக்கீசு, பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகள் தன்னகத்தே பல காலனி நாடுகளைக் கொண்டு உலகவரலாற்றில் தன் சர்வவல்லமை காட்டியது.

ஜனநாயகமும், ஆட்சிமுறையும் கிரேக் ஏதேன்சில் நகர அரசுகளாகப் பிறந்து ரோமில் வளர்ந்து  இங்கிலாந்தில் கோலோச்சிய அரசியல் கோட்பாடுகள் உலகத்துக்கு வழிகாட்டின. ஜனநாயகம், குடியரசு, தேர்தல், சட்டத்தின் ஆட்சி என்ற தத்துவங்கள் அங்கு தழைத்தோங்கின.
இன்று ஐரோப்பிய யூனியன் பொருளாதார சிக்கல்களில் மாட்டிக்கொண்டு குழப்பத்தில் நடைபோடுகின்றது. 

கிரேக்கம், ரோம் நாகரீகங்கள் இன்றைக்கும் உலக வரலாற்றில் கீர்த்தி பெற்றவையாக உள்ளன. இத்தகு பழமைவாய்ந்த கிரீஸ் இன்றைக்கு கடன்சுமையால் தத்தளிக்கின்றது. கடன்கொடுத்த ஐரோப்பிய யூனியன் நாடுகள், ஐ.எம்.எஃப் போன்றவை கடுமையான நிபந்தனைகளை கிரீசுக்கு விதித்தது.

அந்த நிபந்தனைகளால், கிரீஸ் அரசு ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது. பணியிலிருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஊதியமும் குறைக்கப்பட்டு, ஓய்வூதியம் வழங்குவதும் நிறுத்தப்பட்டன. வருமானவரி கடுமையாக கூடுதலாக்கப்பட்டது. மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளும், மானியங்களும் நிறுத்தப்பட்டன.

கிரீஸ் நாட்டில் உள்ள  “சிரிசா என்ற கம்யூனிஸ்ட் இயக்கம் அரசின் மீதான மக்களுக்கு இருக்கும் வெறுப்பைப் பயன்படுத்திக்கொண்டு போராட்டங்களை அங்கு நடத்தின. ஐரோப்பிய யூனியனும், ஐ.எம்.எஃப்-ம் கிரீஸ் மீது விதித்த பொருளாதாரக் கட்டுப்பாடு நிபந்தனைகளைத் தளர்த்த சிரிசா போராடியது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிக்கன நடவடிக்கைகளைக் கைவிடுவோம் என்றும், வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்குத் திரும்ப வேலை கொடுப்போம் என்றும் வாக்குறுதிப் பிரச்சாரங்கள் செய்ய, கிரீசில் சிரிசா ஆட்சிக்கு வந்தது.  


ஆட்சிக்கு வந்தவுடன் சிரிசா இடதுசாரி அரசு, ஐரோப்பிய யூனியன், மற்றும்  ஐ.எம்.எஃப் கட்டுப்பாடுகளை தளர்த்தி, திரும்பவும் நிதி உதவி தங்கள் நாட்டுக்கு அளிக்கவேண்டுமென்று கோரிக்கை வைத்தது. சிரிசா ஆட்சியாளர்கள், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நிதிஅமைச்சர்களின் முன்னிலையில், ஐரோப்பிய யூனியன் நிதிஅமைப்புகளோடு பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தின. ஆனாலும் இச்சிக்கல்களில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், இன்றைய கிரீஸ் அரசு ஐரோப்பா யூனியன் தங்களுக்கு உதவவில்லை என்றால், ரஷ்யாவையும், சீனாவையும் தங்களுக்கு உதவ வேண்டி நாடுவோம் என்று சொல்லியிருக்கின்றது. கிரீசில் உள்ள இடதுசாரி அரசு ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேரவும் தயார் என்று தெரிவித்துள்ளது. கிரீசுக்கு ஜெர்மனியும் நெதர்லாந்தும் தான் அதிகப்படியான உதவிகளை இதுவரைக்கும் செய்துள்ளது.

ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடி மிகுந்த நிலையில், அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற நாடுகள் பாதிக்கப்படும் என்ற கருத்துகள் நிலவுகின்றன. ஸ்பெயின் நாட்டிலும், இடதுசாரி சக்திகள் ஒருமுகமாகத் திரண்டு, மக்களின் ஆதரவைப் பெற்று வருகின்றது.
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பொருளாதாரச் சிக்கலினால் பொதுவுடமைக் கட்சிகள் தங்கள் ஆளுமையை நிலைநாட்டிக் கொள்வார்களோ என்று தற்போதைய ஐரோப்பிய யூனியன் அரசுகள் அச்சப்படுகின்றன.

உலகத்தையே ஆட்டிப்படைத்த இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுக்கல் போன்ற பலநாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய கண்டத்தின் ஆளுமை ஆட்டம் காண்கின்றது. ஒருபக்கம் பொருளாதார நெருக்கடிகள் மறுபக்கம் பொதுவுடமைக் கட்சிகளின் வளர்ச்சி என பல பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ளது ஐரோப்பியநாடுகள்.

ஜனநாயகத்தின் தொட்டில்கள் என வர்ணிக்கப்பட்ட கிரேக்கம், இத்தாலி; நாடாளுமன்றத்தின் தாய் எனச் சொல்லப்படுகின்ற இங்கிலாந்து; தொழிற்புரட்சி, ரஷ்யப்புரட்சி, மறுமலர்ச்சிப் போராட்டங்கள் (Renaissance) , மதச்சீரமைப்பு (Reformation) எனப் பலகளங்கள் கண்டு அகிலத்திற்கு அரசியல் கொள்கைகளையும், நெறிமுறைகளையும் பரப்பிய ஐரோப்பாவுக்கா இப்படி ஒரு சீர்குலைவு?

வரலாற்று மாணவர்களுக்குத் தெரியும், ஒரு நாட்டையோ, ஆளுமையையோ அறிய முற்படும்பொழுது சம்பந்தப்பட்டவர்களின் ஏற்ற இறக்கம் (Rise and Fall ) என்றுதான் கற்பதுண்டு.

இந்த ஏற்ற இறக்கங்கள் அரசியல் மாற்றங்களினாலோ, போரினாலோ, உள்நாட்டு கலவரங்களினாலோ, தேசிய இனப்பிரச்சனைகளாலோ, பொருளாதாரச் சரிவுகளினாலோ ஏற்படும். அரசியல் தத்துவத்தில் நிகழ்வதும் இதுவே. இன்றைக்கு  ஐரோப்பிய யூனியன் சிக்கல்களிலிருந்து தப்புமா என்பதுதான் உலகநாடுகளின் பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. 

-கே. எஸ். இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

ஷோ கம்யூன் வாழ்வு…. என்றார். #polyamoryயும் #molecule எனும் சொல்லை சேர்த்து #polycule அழைக்கப்படுகிறது,இதற்கும் open relationship

ஓஷோ  கம்யூன்  வாழ்வு….  என்றார். #polyamoryயும் #molecule எனும்  சொல்லை சேர்த்து #polycule அழைக்கப்படுகிறது,இதற்கும் open relationship-என மே...