Wednesday, June 3, 2015

கழுகுமலை வெட்டுவான் கோயில்

இன்றைய (03-06-2015)  தினமணி நாளிதழில் “வெட்டுவான் கோயில்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள தலையங்கப் பக்க  கட்டுரை.









வெட்டுவான் கோயில்

  தமிழகத்தின் வீரம் சொரிந்த நெல்லைச் சீமையில் கோவில்பட்டி-சங்கரன்கோவில் சாலை மார்க்கத்தின் இடையே அமைந்த பழம்பெரும் ஊர் கழுகுமலை.  நாளந்தா, தட்சசீலம் போன்ற ஆதியில் அமைந்த கலாசாலைகள் போன்று சமண கலாசாலை அமைந்த இடம்.  சிலகாலம் சமணம், பௌத்தம், இறுதியாக சைவம் என்ற மாற்றங்களோடு அமைந்த பேரூர்தான்  இந்த கழுகுமலை.

பருத்தி அரவை ஆலைகளும், தீப்பெட்டி உற்பத்தி தொழிலும், மாட்டுத் தாவணிகளும், சத்திரங்களும், மடங்களும் கோவிலும் அமைந்த இவ்வூரில் செய்யப்படும் தின்பண்டமான ‘காரச்சேவும்’, ‘பட்டர்சேவும்’,  ‘கருப்பட்டிப்பாகு மிட்டாயும்’    சுவைமிகுந்தது. சைவ தலமான இவ்வூருக்கு தினமும் நூற்றுக்கணக்கில் பயணிகள் வருகின்றனர்.

 சர்வோதயத்திற்கும், பூமிதான இயக்கத்திற்கும் கரிசல் மண்ணின் கேந்திர பகுதியாகும். வினோபாவும், ஜெயப்பிரகாஷ் நாராயணனும் நேசித்த ஊராகும்.
 பண்டைக்காலத்தில் இவ்வூர் நெற்சுரநாடு என்று அழைக்கப்பட்டது. இதன் வடக்கே இன்றைய வெம்பக்கோட்டை என்ற பகுதி வெண்பைக்குடி என்ற நாடும், கிழக்கே எட்டையபுரம் என்ற எல்லைகளுக்கு மத்தியில் பாண்டிய, நாயக்க அரசர்களின் ஆட்சியும், பின் ஆங்கிலேயர்கள் காலத்தில் இவ்வட்டாரத்தில் விளையும் பருத்தியை வாங்கும் வணிக மையமாக இருந்தது.

இவ்வூருக்கு கழுகாசலம், தென்பழனி, சம்பாதி சேத்திரம், கஜமுகபர்வதம், பவணகிரி, உவணகிரி, அரைமலை, திருநெற்சுரம், பெருநெற்சுரம் என்று பழங்காலப் பெயர்கள் அமைந்திருந்ததற்கான சான்றுகள் உள்ளன. ராமாயண காலத்தில் சம்பாதி என்ற கழுகு வடிவமான முனிவர் தனது சாப விமோசனத்துக்காக ஆம்பல் நதியில் நீராடி முருகப்பெருமானை வணங்கி, சாப விமோசனம் பெற்றதாகவும் கழுகுவடிவ முனிவர் பூஜித்த தலம் கழுகாசலம் என்று பெயர் பெற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்டியார் இந்தக் கழுகுமலையை நோக்கி காவடி ஏந்தி நடை பயணமாக வந்தபோது பாடிய பாடலே காவடிச்சிந்து. கழுகுமலையின் சிறப்பை தன்னுடைய பாக்களில் சொல்லியுள்ளார்.

“கதலி கழுகுசூழ் வயற்குளே அளி
இசையை முரலமா வறத்தில் மீறிய
கழுகுமலைமா நகர்க்குள் மேவிய பெருமானே” என்று அருணகிரி நாதர் கழுகுமலையை  திருப்புகழில் பாடியுள்ளார்.

இந்த தலத்தில் கழுகாசல மூர்த்தியாக சிவசுப்பிரமணியர் விளங்குகின்றார். ஆறுகரங்கள் ஒருதலையுடன் போர்க்கோலத்தோடு காட்சி அளிக்கும் கழுகுமலை தலத்தை மகாகவி பாரதியார் பாடியுள்ளார்.  தெப்ப நீர்நிலையும் மரங்களும் நிறைந்த ரம்மியமான அழகிய ஊர் கழுகுமலை. இப்போது அமைதியிழந்து போக்குவரத்து வாகனங்கள் இடத்தையும் பிடித்துக்கொண்டு நடமாடவே சிரமமாக இருக்கின்றது.

இவ்வூரின் வரலாற்றைச் சொல்லும் கழுகுமலைக் கல்வெட்டுகள் பிரதானமானது. இதன் சுத்துவட்டாரத்திலும் நாலாட்டின்புத்தூர், வானரமுட்டி, சாயமலை கல்வெட்டுகளும் பல வரலாற்றுச் செய்திகளை சொல்கின்றன.

கழுகுமலையின் வடகிழக்கு அடிவாரத்தில்  அமைந்துள்ளது வெட்டுவான் கோயில். மோனோ லித்திக்  முறையில் ஒரே பாறையில் வெட்டி இக்கோயிலை உருவாக்கியிருக்கிறார்கள். அதனாலேயே ‘வெட்டுவான் கோயில்’ என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய வடிவமைப்பில் தமிழகத்திலேயே வெட்டுவான்கோயில் ஒன்றுதான் என்பதுவே கழுகுமலையின் சிறப்பு ஆகும்.

இந்தியாவிலேயே கழுகுமலையைத் தவிர, மராட்டிய மாநிலம் எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவில் மட்டுமே, இப்படி மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட  குடைவரைக் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை யானைமலையில் உள்ளது போலவே கழுகுமலையில்  7ம் மற்றும் 8ம் நூற்றாண்டுக் கால சமணர் சிற்பங்கள் உள்ளன.   மலைச்சரிவிலுள்ள பாறையில் கடைசி சமண தீர்த்தங்கரர்களான வர்த்தமானர் உட்பட இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களும் தலைக்கு மேற்பகுதியில் முக்குடைகளுடன் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளது.

இச்சிற்பங்களை உருவாக்கியவர்களின் பெயர்கள் வட்டெழுத்தில் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டுள்ளது. பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் இச்சிற்பங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மலையில் அமைந்துள்ள சிறுசிறு குகைகளில் சமணர் பள்ளிகள் அமைத்து  சமண மதக் கருத்துகளைப் போதித்திருக்கிறார்கள்.

இறந்து போன குடவர், சீடர், தாய்,  தந்தை, மகன், மகள் முதலிய பலரின் நினைவாக இவ்வுருவங்கள் செய்யப்பட்டுள்ளன. சமணத் துறவிகள் குரவர்கள் என்றும் குரவடிகள் என்றும் அழைக்கப்பட்டனர். பெண் துறவிகள் குரத்தியார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் சீடர்கள் ஆணாக இருப்பின் மாணாக்கர் என்றும் பெண்ணாக இருப்பின் மாணாத்தியர் என்றும் அழைக்கப்பட்டனர்.

மொழி, பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த வரலாற்று சின்னங்கள், கல்வெட்டுகள் தமிழகம் முழுவதும் உள்ள மலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் திருச்சி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற பல இடங்களில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான சமணர்கால குகைகள், குகை கோயில்கள், சிற்பங்கள் வரலாற்றை கூறும் வண்ணத்தில் அமைந்துள்ளன. பிராமி மற்றும் வட்டெழுத்துகள் போன்ற ஆரம்பகால தமிழ் எழுத்துகளும் இங்குள்ள கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

சமய இறையாண்மைமிக்க இடமாகவும், கலைக் கருவூலமாகவும் திகழும் கழுகுமலை, உலக மரபுச் சின்னங்களின் பட்டியலில் இடம் பெறக்கூடிய வகையில் சிற்பக் கலையை தன்னகத்தே கொண்டுள்ளது.
எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் மற்றும் மாமல்லபுரம் சிற்பக் கோவில் ஆகியனவற்றைக் காட்டிலும் கழுகுமலை வெட்டுவான் கோயில் தனிச்சிறப்பு மிக்கது. காரணம் கழுகுமலை கடினமான பாறை அடுக்குகளால் ஆனது. இவ்விடத்தில் சிற்பங்களைச் செதுக்கியிருக்கிறார்கள் என்றால் முன்னோர்களின் உழைப்பும், தொழில்நுட்பமும் வியப்பிற்குரியதாகும். இப்பாறைகள் எண்ணற்ற புடைப்புச் சிற்பங்களைக் கொண்டுள்ளது.

முன் காலத்தில் கழுகுமலையில், மங்கல ஏனாதி என்னும் தானைத் தலைவர் இருந்தார். அவருடைய சேவகர்கள், பாண்டியன் மாறஞ்சடையன், ஆய் மன்னன் கருநந்தன் மீது படை எடுத்தபோது, பாண்டியனுக்காகச் சென்று, அருவி ஊர் கோட்டையை அழித்து, போரில் மாண்டனர். அவர்களுக்காக நிலம் அளித்த தகவலை  “குசாக்குடி கல்வெட்டு” தெரிவிக்கிறது.

அக்கல்வெட்டு, தற்போது மதுரை திருமலைநாயக்கர் மகாலில் உள்ளது.  ‘திருமலை வீரர்’, ‘பராந்தக வீரர்’ எனும் பெயர் பெற்ற படைகள், பாண்டியன் பராந்தக வீரநாராயணன் காலத்தில் இவ்வூரில் இருந்தது பற்றிய குறிப்புகளும் உள்ளன. கோட்டாறு மிழலூர், வெண்பைக் குடி (வெம்பக்கோட்டை) முதலிய 32க்கும் மேற்பட்ட ஊர்களில் வாழ்ந்த சமணப் பெரியார்கள் இங்கு வந்து, இவ்வுருவங்களைச் செய்திருக்கிறார்கள்.

எட்டி, எனாதி, காவிதி முதலிய சிறந்த தமிழ்ப்பட்டங்கள் பெற்றவர்களும் இச்சிற்பங்களைச் செய்வித்துள்ளனர். தச்சர், வேளாண், குயவர், கொல்லர், முதலிய பல தொழில்கள் புரிவோரும் இங்கு பணிபுரிந்துள்ளனர். குணசாகரபடாரர் என்னும் சிறந்த சமணப் பெரியாரும் இன்னும் பல 'வயிராக்கியர்'களும் இங்கு வாழ்ந்துள்ளனர்.

வெட்டுவான் கோயிலில் இருக்கும் சிற்பங்கள் மிகவும் எழிலாக, அழகாக செதுக்கப்பட்டு உள்ளது. சிவன், திருமால் அமர்ந்திருக்கும் சிலைகளுக்கு அருகிலிருக்கும் சிம்மம், யாளி, தேவகன்னியர் சிலைகள், கோயில் முகப்பில் சிவனும் பார்வதியும் அந்நியோன்யமாக பேசிக்கொண்டிருப்பதைப் போன்ற சிலைகளின் நேர்த்தி பிரம்மிக்கத் தக்கது.

விமானத்தின் மேற்குத்திசையில் நரசிம்மரும், வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர். அதன் நான்கு மூலைகளில் நந்தி சிலைகளும், இவற்றுக்குக் கீழே யாளி வரிகளும், கபோதகமும் உள்ளன.  முற்றுப் பெறாத இந்தக் கோயிலில் சிகரம் மட்டும் பூர்த்தியான நிலையில் காணப்படுகின்றது.

மலையின் ஒருபகுதியில் 7.50 மீட்டர் ஆழத்துக்குச் சதுரமாக வெட்டி அதன் நடுப்பகுதியைக் கோவிலாகச் செதுக்கியிருக்கிறார்கள். உட்பகுதியில் கருவறையும், அர்த்த மண்டபமும் அமைந்துள்ளது. விமானத்தில், உமா மகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா ஆகிய வடிவங்கள் காணப்படுகின்றன.

கழுகுமலையில் அமைந்துள்ள வெட்டுவான் கோயிலில்தான் இந்திய கட்டிடக் கலை வரலாற்றிலேயே முதலாவதாக மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது. ஜைன தீர்த்தங்கரர்கள் சிற்பங்கள் அமைந்துள்ள இக்கோயில்  அமைந்துள்ள இடம் வரைக்கும் கௌதமபுத்தர்  தமது புத்தமத கொள்கைகளை பரப்புவதற்காக வந்திருக்க வேண்டும் என சரித்திர ஆராய்ச்சியாளரான து.அ.கோபிநாத ராவ் குறிப்பிடுகின்றார்.  இலங்கைக்கு பௌத்தத்தைப் பரப்பச் சென்றவழியில் சங்கமித்ரை கழுகுமலைக்கு வந்ததாகவும் செவிவழிச் செய்திகள் உள்ளன.

கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்ட கோயில்களைப் போல பாறைகளைக் குடைந்து கோயில்கள் அமைக்க சமணர்கள் பெருவிருப்பம் கொண்டவர்களாக இருந்திருக்க வேண்டும். எல்லோரா குகையிலுள்ள இந்திர சபையும், ஜகந்நாத சபையும்,  கி.பி 800- 1100 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இவை இரண்டும் ஆரம்பகால திராவிட பாணியில் அமைந்த கலைவடிவங்களாகத் திகழ்கின்றன. கழுகுமலை வெட்டுவான் கோவில் குறித்து ஏ.ஆர்.கணபதி அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார்.

கழுகுமலையின் அடிவாரத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோயில் உள்ளது. இதன் மூலவர் இருக்கின்ற இடமும் ஒரு குடைவரையாகவே அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் தெப்பக்குளத்தில், பால் போன்ற நிறத்தில் நல்ல குடிநீர் கிடைப்பதால் ஊர் மக்கள் அதையே குடிநீராக அண்மைக்காலம் வரையிலும் பயன்படுத்தி வருகிறார்கள்.

வெட்டுவான் கோயில் குறித்த சுவாரசியமான கதைகள் பல கோவில்பட்டி, சிவகாசி, சாத்தூர், சங்கரன்கோவில், இராஜபாளையம் பகுதியில் உலவி வருகிறது. பாண்டியநாட்டில் மிகவும் புகழ்பெற்ற சிற்பி ஒருவன் இருந்தான். அவன் சிலை செய்யும் கலைநேர்த்தியைக் கண்டு இவன்தான் தெய்வச்தச்சன் மயனோ என்று அனைவரும் வியந்தனர். அவனுக்கு ஒரு மகன் இருந்தான். இருவரும் ஒருநாள் திருவிழாவிற்கு சென்றனர். கூட்டத்தில் மகன் தொலைந்து போய்விட்டான். தேடி அலைந்து அழுதுபுலம்பினான். மகன் கிடைக்கவில்லை. அதன்பிறகு இம்மலையில் சமணத்துறவிகளின் சிலைகளைச் செய்து கொடுத்துக் கொண்டு அங்கேயே தங்கிவிட்டான்.

திடீரென்று ஒருநாள் மலையின் கீழ்பகுதியில் கல்செதுக்கும் ஒலி கேட்டது. மேலே வந்தவர்கள் இந்தச் சிற்பியிடம் ‘கீழே ஒரு இளம் சிற்பி சிலை செதுக்குகிறான். எவ்வளவு அழகாக செதுக்கிறான் தெரியுமா? பார்த்துக் கொண்டேயிருக்கலாம். அவ்வளவு அழகு’ என்றனர். அவனைப் பற்றி வருபவர்களெல்லாம் புகழ இவனுக்கு வெறுப்பு அதிகமாகியது.

ஒருநாள் தன் கையிலிருந்த பெரும் உளியை இளம்சிற்பி இருக்கும் திசையை நோக்கி வீசினான். உளிபட்டு அந்த இளம் சிற்பி ‘அப்பா’ என அலறி விழுந்தான். போய் பார்த்தால் திருவிழாவில் காணாமல் போன அவனுடைய மகனின் தலையைத்தான் உளியால் வெட்டியிருக்கிறான். அங்கு அவன் செதுக்கிய சிற்பங்களை பார்த்து மலைத்து நின்றான். பிறகு தன் மகனை எடுத்து அழுதுபுலம்பினான். இதனால் இக்கோயில் பணி பாதிலேயே நின்றுவிட்டது என்று முடிகிறது அந்த செவிவழிக் கதை.

தென் தமிழகத்தின் எல்லோரா என்றழைக்கப்படும் கழுகுமலையில், பல நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை நடுவண் மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ளவேண்டும்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபொழுது வைகோ அவர்கள் கூட்டணிக்கட்சிகளில் ஒரு தலைவராக இருந்தார். நான் அவரிடம் பிரதமரிடம் நமது கழுகுமலைக்கு சிறப்பு நிதியைத் தரச் சொல்லுங்கள். வெட்டுவான் கோயிலைச் சீரமைத்து கழுகுமலைக்குப் பெருமை செய்யலாம் என்றேன். உடனே வாஜ்பாய் அவர்களிடம் இதுகுறித்துப் பேசியவுடன் கழுகுமலைக்கு சுமார் மூன்றுகோடி ரூபாய் வரை 1999காலகட்டத்தில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு செய்தது.  அந்தசமயத்தில் ஆந்திராவில் உள்ள போச்சம்பள்ளிக்கும் பேரூர் சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

உலகம் முழுவதும் ஏறக்குறைய 911 இடங்களை பண்பாடு மற்றும் இயற்கை மரபுச் சின்னங்களாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அதே போன்று கழுகுமலையையும் பண்பாட்டு மரபுச் சின்னமாக அறிவித்தால் தமிழகத்தின் பெருமை ஓங்கும்.  இப்படி  தமிழ் கலாச்சாரத்தை பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயிலை கண்டுகொள்ளாமல் இருக்கின்றோம். இதன் தரவையும் தொன்மையையும் பறைசாற்ற வேண்டியது தமிழர்களின் கடமையாகும்.



-கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
03-06-2015.




No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...