Friday, January 29, 2016

சில வழக்குகளும், சில நினைவுகளும்

இன்று (29.1.2016), வழக்கறிஞர் நண்பர் பாஸ்கர் என்னிடம் தொலைபேசியில் பேசும்போது, கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவி மோனிஷாவின் சந்தேக மரணத்தை குறித்து மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்றைக்கு நடந்த வழக்கு வாதங்களைப் பற்றி கூறினார்.

அந்த வழக்கு வாதத்தின்போது, 1992ல் கோவில்பட்டி விவசாயிகளின் மீது அன்றைய அதிமுக அரசாங்கம் துப்பாக்கிச் சூடு நடத்தி எத்திராஜ் நாயக்கர், இருதய ஜோசப் ரெட்டியார் இரண்டு பேர் சாகடிக்கப்பட்டனர் என்றும் அப்போது அரசாங்கம் இவர்கள் நோயினால் இறந்தார்கள், துப்பாக்கிச் சூட்டினால் இறக்கவில்லை என்று மாநில அரசாங்கம் தவறாக சொன்னதை கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் புதைத்த இருதய ஜோசப் ரெட்டியார் உடலை தோண்டி மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று நான் பொதுநல வழக்கு தொடுத்தபோது, அதை விசாரித்த நீதிபதி கே.எஸ். பக்தவத்சலம், புதைக்கப்பட்ட இருதய ஜோசப் ரெட்டியார் உடலைத் தோண்டி திரும்ப பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.  இந்த உத்தரவுதான் மறு பிரேத பரிசோதனை செய்வதற்கு முதல் முதலாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த முதல் வழக்காகும்.  நான் நடத்திய இந்த பொது நல வழக்கின் தீர்ப்பை கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு மோனிஷா வழக்கிலும் முன்னுதாரணமாக எடுத்து சொன்னது நாம் செய்த பணிக்கு திருப்தியான பயன் கிட்டியுள்ளதே என்று மனதில் பட்டது. 

கிட்டதட்ட சுமார் 40 ஆண்டுகால வழக்கறிஞராக என்னென்ன பொதுநல வழக்குகள் தொடுத்தோம் என்று சற்றே சிந்தனையில் ஆழ்ந்தபோது வரிசைப்படியாக வழக்குகளை பட்டியலிட்டபோது....

1. 1975ல் அவசர நிலை காலத்தில் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டம் (தூத்துக்குடி உட்பட) தற்போதுள்ள விருதுநகர் மாவட்டம் அப்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தது; இப்பகுதிகளில் விவசாயம் பொய்த்து வறட்சியாக குடிநீர் இல்லாமல் மக்காச் சோளத்தை உணவாக உண்ணவேண்டிய நிலையில் கிராமத்தில் மக்கள் இருந்தனர்.  அது மட்டுமல்லாமல் வருவாய்த் துறை அதிகாரிகள் விவசாயிகள் வீட்டில் இருந்த பண்டபாத்திரங்கள், கதவுகளைக் கூட கடன் ஜப்தி நடவடிக்கைக்காக பிடுங்கிச் சென்றனர். இவ்வாறான துயரமான நிலையில் ஜப்தி நடவடிக்கைக் கூடாது என்று பொதுநல வழக்கு தொடுத்தும், அதன்பின் கடன் நிவாரண சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு நிவாரணங்களை பெற்றுத் தந்த நிகழ்வுகள் எல்லாம் 40 ஆண்டுகளுக்கு முன்னால்.

2. 1983ல் நாட்டில் உள்ள நதிகளை தேசியமயமாக்கி கங்கை, காவிரி, தாமிரபரணி, குமரி நெய்யாறோடு இணைத்தும் மேற்கு நோக்கி பாயும் கேரள நதிகளின் உபரி நீரை தமிழகத்திற்கு திருப்பவும், கேரளாவில் உள்ள அச்சன்கோயில்-பம்பை, தமிழகத்தில் உள்ள வைப்பாறோடு இணைக்க வேண்டும் என்ற வழக்கிலும் 2012ல் ஏப்ரல் 27ம் தேதி உச்சநீதிமன்றத்தில் 30 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பைப் பெற்றதும்....

3. 1984 கட்டத்தில் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள கண்ணகி கோவிலுக்கு சித்திரா பௌர்ணமி அன்று தமிழக பயணிகள் செல்ல முடியாமல் கேரள அரசு அந்த பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு கேரள காவல்துறை பாதுகாப்பில் இருந்தது. அங்கு சென்ற தமிழர்களை கேரள காவல்துறையினர் தாக்கி, விரட்டியடித்தனர்.  தமிழக எல்லையில் உள்ள கண்ணகி கோட்டத்திற்கு தமிழர்களே செல்லமுடியவில்லை என்று வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தேன். அதனால் கேரள காவல்துறையினருடைய அத்துமீறலை தடுக்க தீர்வும் கிடைத்தது.

4. வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேய அரசு தூக்கிலிட்டது. அதே வீரபாண்டியன் வாரிசு கொலை வழக்கில் தூக்குக் கயிறை முத்தமிட மூன்று நாட்கள்தான் இருந்தன. திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் குருசாமியின் தூக்கு தண்டனையை உறுதி செய்தன. அப்போதைய குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டியும் குருசாமியின் கருணை மனுக்களை மூன்று முறை நிராகரித்துவிட்டார்.  இப்படியான நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசான குருசாமி நாயக்கரை மூன்று நாட்களில் எந்தவித மனுக்கள் இல்லாமல் பாளையங்கோட்டை சிறையிலிருந்து அவர் அனுப்பிய தந்தியை மட்டும் வைத்துகொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி, அவருடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக்கினேன். இது நடந்தது 1984ல்.  இந்தியாவில் குடியரசுத் தலைவரால் கருணை மனுக்கள் மூன்று முறை நிராகரிக்கப்பட்டபின் ஒரு தூக்கு தண்டனை கைதியை காப்பாற்றியது வரலாற்றில் இதுதான் முதல் வழக்கு.

5. சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை 1984 காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் தனியாருக்கு விற்க முற்பட்டபோது அதை பொதுநல வழக்கு தொடுத்து தடுத்தவனும் அடியேன்தான்.  இப்போதும் அந்த ஆலையை தனியாருக்கு விற்க இருக்கின்ற நிலையில், அதை தடுக்கக் கூடிய வகையில் பொதுநல வழக்கு மதுரை உயர்நீதிமன்ற பெஞ்சில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

6. 1985ல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணித் தலைவர் பாலசிங்கம், ஈழத் தமிழ் தலைவர்களான சந்திரகாசன், டாக்டர் சத்தியேந்திராவை சென்னையிலிருந்து எந்தவித முகாந்திரமும் இல்லாமல் நாடு கடத்தியபோது, வழக்கு தொடுத்து திரும்பவும் அவர்களை சென்னைக்கு 24 மணி நேரத்தில் வரவழைத்ததெல்லாம் எண்ணும்போது எப்படி குறுகிய காலத்தில் சட்டப்படியான நடவடிக்கையில் இவர்களை இந்தியாவுக்கு திரும்ப வரவழைத்தோம் என்பதை இன்றைக்குக்கும் நினைத்தாலும் பிரமிப்பாக இருக்கிறது.

6. 1989ல் கூடங்குளம் அணு மின்சார திட்டம் வந்தபோது, அப்போதே இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்தேன். ஆனால் அந்த பணி மந்தமாகி நிறுத்தி வைக்கப்பட்டது.  திரும்பவும் பணிகள் துவங்கியபோது, 2011 கால கட்டங்களில் கூடங்குளம் அணுமின் திட்டம் கூடாது என்று ரிட் மனு மூலமாக பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்முதலாக தொடுத்தவனும் அடியேன்தான்.

7. 1991ல் உச்சநீதிமன்றத்தில், விசாரணை கைதிகளுக்கும் வாக்குரிமை வேண்டும் என்று பொதுநல வழக்கும் தொடுத்தேன்.  குற்றவாளிகளே தேர்தலில் போட்டியிடும்போது விசாரணை கைதிகளுக்கு ஏன் வாக்குரிமையை தடுக்க வேண்டும் என்பதுதான் அந்த வழக்கின் நோக்கம்.  தேர்தல் சீர்திருத்தத்தில் விசாரணை கைதிகள் வாக்களிக்க பரிசீலனையில் இருந்ததால் அந்த வழக்கு திரும்ப பெறப்பட்டது.

8. காவல்நிலைய சாவுகள் காவல்துறையின் அத்துமீறலைக் குறித்தும் பொதுநல வழக்குகளும் தொடுத்துள்ளேன்.

9. 1996ல் தேவ கவுடா பிரதமர் ஆனார்.  காவிரி நடுவர் மன்றம் கூடாது என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவர் தொடுத்த வழக்கில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரியை பிரதிவாதிகளாக சேர்த்து ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த ரிட் மனுவில் காவிரி நடுவர் மன்றத் தலைவர் சித்தகோஸ் முகர்ஜி தமிழக சுற்றுப்பயணத்தின்போது தமிழக அரசு அவருக்கு மரியாதைகளும், கோவில்களுக்கு சென்றபோது பூர்ண கும்பங்களும் வழங்கியதை திரு கோஸ் ஏற்றுக்கொண்டார். எனவே அவரை காவிரி நடுவர் மன்றத்தில் அமர தகுதி அற்றவர் என்று வழக்கும் தொடுத்துவிட்டு பிரதமர் ஆகிவிட்டார்.  ஒரு பிரதமராக இருப்பவர் இந்தியாவில் உள்ள தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி மாநிலங்களை எதிரிகளாக சேர்த்து வழக்குத் தொடுத்தவர் எப்படி அந்தப் பதவியில் அமர முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். இதை கேள்விப்பட்ட உடன், அவசர அவசரமாக தேவ கவுடா தான் தொடுத்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்டார்.  அந்த வழக்கு நீடித்திருந்தால், அவர் பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர் என்று Quo Warranto அன்றே பிறப்பிக்கப்பட்டிருக்கும்.

10. 1999ல் தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க தலைவர் கலைஞர் அவர்களின் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி நீண்டகாலமாக நாடாளுமன்ற ஒப்புதலுக்கு வைக்காமல் இருந்தபோது, அதை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைத்து, அந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு தமிழகத்தில் சட்டமன்றத்தில் மேலவை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

11. நள்ளிரவில், ஜெயலலிதா அரசால் மனித உரிமைகளையெல்லாம் மீறி கொடூரமாக தலைவர் கலைஞர் கைது செய்யப்பட்டபோது, திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் தமிழகத்தில் 50 ஆயிரம் பேரை கைது செய்து தமிழக சிறைகளில் அடைத்தனர். 24 மணி நேரத்தில் மாநில மனித உரிமை ஆணையத்தில் நான் மனுவைத் தாக்கல் செய்து கைது செய்யப்பட்ட 50 ஆயிரம் திமுகவினரை உடனே விடுதலை செய்ய பணிகளை ஆற்றினேன்.

12. கர்நாடகாவில் நடந்த ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா தீர்ப்புக் கொடுத்தாரே, அந்த வழக்கை சென்னை நீதிமன்றத்திலிருந்து கர்நாடகா நீதிமன்றத்திற்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் அடிப்படையில் நான் எடுத்துக்கொண்ட முயற்சிதான்.  அப்போது டெல்லியில் வழக்கறிஞர் மோகன் இந்த வழக்கில் ஆஜர் ஆனார். வழக்கு ஆவணங்களை தயார் செய்தார்  (வழக்கு எண் Transfer Petition-Criminal No. 77&78 of 2003).  இதை யாரும் இப்போது நினைத்து பார்ப்பதில்லை.  மறைந்த முரசொலி மாறன் அவர்கள் திமுக பொதுக்குழுவில் இதற்காக என்னை பாராட்யதுண்டு. இப்போது இதை நன்கு அறிந்தவர் மத்திய அரசு உயர் அதிகாரியாக இருந்த அகிலன் ராமநாதன் அவர்கள்தான். அவர் எங்காவது என்னை சந்தித்தால் இதைப் பற்றி என்னிடம் குறிப்பிடுவதுண்டு.  மற்றவர்கள் யாரும் இது குறித்து நினைப்பதும் இல்லை. நன்றி பாராட்டுவதும் இல்லை.

13. வீரப்பன் வழக்கில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், கர்நாடக தமிழர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் மைசூர் சிறையில் வாடினர். அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. இது குறித்து 2006ல் தேசிய மனித உரிமை ஆணையத்தில் நான் மனுவைத் தாக்கல் செய்தபின், மைசூர் சிறைக்கே இந்த பிரச்சினையை ஆய்வு செய்ய ஒரு குழுவை தேசிய மனித உரிமை ஆணையம் அனுப்பியது. அதன்பின் நிலைமைகள் சீராயின.

முடியாது, சட்டப்படி சாத்தியமில்லை, சிரமம் என்று சொல்லப்பட்ட இப்படியான வழக்குகளை சட்டப்பூர்வமாக நடத்தி நியாயமான தீர்ப்பை பெற்றது, குறிப்பாக குருசாமியின் தூக்கு தண்டனையை நிறுத்தியது, பிரேத மறு பரிசோதனை, கங்கை, காவிரி, தாமிரபரணி, குமரி நெய்யாறு இணைப்பு போன்ற வழக்குகளை தொடுத்தபோது நண்பர்களே என்னை ஏளனம் செய்தார்கள். அதை மீறி எடுத்துக்கொண்ட விடாமுயற்சிகள் பலனளித்தன.

மனித உரிமை மீறல்கள், விவசாயிகள் பிரச்சினை, சுற்றுச் சூழல் சிக்கல்கள், ஈழத் தமிழர் பிரச்சினைகள், விடுதலைப் புலிகள் சம்பந்தமான வழக்குகள், அதன் தலைவர் பிரபாகரன் பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு வழக்கு, தமிழகத்தின் உரிமைகளும், நீர் ஆதாரங்கள், தேர்தல் சீர்திருத்தங்கள், போக்குவரத்து நெரிசல் குறித்த வழக்குகளும் என இப்படி எண்ணற்ற பொதுநல வழக்குகளும், வழக்குமன்ற பணிகளும் பெரிய பட்டியலாகிவிடும். உரிய வழக்கு எண்கள், உரிய ஆவணங்களோடு, வழக்கு மனுக்களையும், நீதிமன்ற ஆணைகளையும் தனியாக தொகுத்து ஒரு நூலாக வெளியிட இருக்கிறேன்.  யார் நினைக்கிறார்களோ, நினைக்கவில்லையோ, மனதிற்கு சரியென்று படுகின்றது.  செய்கின்ற பணியில் மகிழ்ச்சி கிடைக்கின்றது. அவ்வளவுதான்.

No comments:

Post a Comment

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things that makes you sad.

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things th...