Sunday, October 2, 2016

காவிரி சிக்கல்

காவிரி சிக்கல்:
---------------------
ஒரு முன்னாள் பிரதமர் உச்சநீதிமன்றத் தீர்ப்பைக்கண்டித்து உண்ணாநிலை என்கிறார்.

கர்நாடக அரசு கூட்டுகின்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மூன்று மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள். 

கண்டிக்கத் திராணியற்ற, கையாலாகாத  இந்த நாட்டின் பிரதமர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்று என்று தன் கட்சியைச்சேர்ந்த முதலமைச்சருக்குக் 
கட்டளையிட வக்கற்று ஊர்சுற்றும் சோனியாவும் ,இராகுலு

தமிழ்நாட்டிற்கு சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு கடந்த 10 நாட்களில் மூன்றாவது முறையாக காலில் போட்டு மிதித்திருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்திருக்கிறது. இவை எதுவுமே இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கோ, கூட்டாட்சி தத்துவத்திற்கோ வலிமை சேர்ப்பவையல்ல.

காவிரி சிக்கல் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு,‘‘காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகம் மதித்து தான் ஆக வேண்டும். அவ்வாறு செய்ய கர்நாடகத்திற்கு கடைசி வாய்ப்பு தருகிறோம். இந்த ஆணையை செயல்படுத்த கர்நாடக அரசு மறுத்தால் அதை செயல்படுத்த வைப்பது எப்படி? என்பது எங்களுக்கு தெரியும்’’ என்று எச்சரித்திருந்தது. அதற்கு பிறகும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாத கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம், ஆலோசனை என பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் தர முடியாது என்று கூறியிருக்கிறது. அதுமட்டுமின்றி, காவிரி சிக்கலில் கடந்த 10 நாட்களில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் கர்நாடகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும், அவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரி மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற ஆணை  தவறானது என்றும் கூறி மறு ஆய்வு செய்யக் கோரியிருக்கிறது. கர்நாடகத்தின் இந்த நடவடிக்கைகள் உச்சநீதிமன்றத்திற்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் விடப்பட்டச் சவால்கள் என்பதில் ஐயமில்லை.

கர்நாடகத்தின் அணுகுமுறை இப்போது தான் இப்படி என்றில்லை. கடந்த இரண்டு வாரங்களாகவே அம்மாநிலம் உச்சநீதிமன்றத்துடன் மோதலை கடைபிடித்து வருகிறது. காவிரி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு  6000 கன அடி வீதம் 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு செப்டம்பர் 20&ஆம் தேதி ஆணையிட்டது. அதை கர்நாடகம் நிறைவேற்றாத நிலையில், கடந்த 27ஆம்  தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கர்நாடகத்தை மன்னித்த நீதிபதிகள், அடுத்த 3 நாட்களுக்கு அதே அளவு தண்ணீரை திறக்க ஆணையிட்டனர். ஆனால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதித்த கர்நாடக அரசு, அதையும் நிறைவேற்றவில்லை. அதன்பின் நேற்று முன்நாள் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது தான் கர்நாடகத்தை நீதிபதிகள்  கடுமையாக எச்சரித்திருந்தனர். ஆனால், அதற்கும்
பயனில்லை.

கர்நாடகத்தில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அம்மாநிலத் தலைவர்கள் பேசிய கருத்துக்கள் இந்தியாவின் ஒற்றுமைக்கு உலைவைக்கக் கூடியவை. உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்கக் கூடாது; தமிழகத்திற்கு ஒருபோதும் தண்ணீர் வழங்கக் கூடாது என்று அக்கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டிருக்கிறது. மற்றொருபுறம், இந்தியாவின் பிரதமராக இருந்த தேவகவுடா அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக நடந்து கொள்வதற்கு பதிலாக கன்னட இனவெறி குழுவின் தலைவராக மாறி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பெங்களூருவில் சாகும்வரை உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். சட்டத்திற்கு எதிரான இப்போராட்டத்திற்கு அம்மாநில முதல்வர் சித்தராமய்யா நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருக்கிறார். இவை அனைத்தும் எந்த சட்டத்தை மதித்தும், எந்த தார்மீக நெறிமுறையையும், தர்மத்தையும் பின்பற்றியும் செய்யப்படுகின்றன என்பதை மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அமைதியையும், போர்நிறுத்த உடன்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என்று அண்டை நாடுகள் முதல் ஐ.நா. வரை வலியுறுத்திய போதிலும் அதை மதிக்காமல், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை தூண்டிவிட்டு வருகிறது பாகிஸ்தான். அதனால் தான் அந்நாட்டை Rogue  Nationஎன விமர்சிக்கின்றனர். கர்நாடகமும், பாகிஸ்தானைப் போலவே அரசியல் சட்ட வல்லுனர்கள், உச்சநீதிமன்றம் என யாருடைய அறிவுரையையும் மதிக்காமல் தமிழகத்திற்கு உரிமைப்படி தர வேண்டிய தண்ணீரை தராமலும், தமிழர்களின் உடைமைகளை சூறையாடியும் Rogue  State என நிரூபித்து வருகிறது. இதை மத்திய அரசும் வேடிக்கைப் பார்ப்பது தான் வேதனையளிக்கிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டிருந்தால் 12 நாட்களில்  தமிழகத்திற்கு 6 டி.எம்.சி தண்ணீர் கிடைத்திருக்கும். ஆனால், கர்நாடகம் தண்ணீர் திறந்து விடாததால் தமிழகத்திற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இந்த அநீதிக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார்த்தைக் கூட உதிர்க்கவில்லை. கடந்த 10 நாட்களில் கர்நாடக அணைகளின் நீர் இருப்பு 26 டி.எம்.சியிலிருந்து 33.22 டி.எம்.சியாக உயர்ந்திருக்கிறது. நேற்றைய நிலவரப்படி கர்நாடக அணைகளுக்கு வினாடிக்கு 7316 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதைக் கொண்டு தமிழகத்திற்கு தாராளமாக தண்ணீர் கொடுத்திருக்கலாம் எனும் போது, அவ்வாறு செய்யாதது ஏன்? என கர்நாடகத்தை  பிரதமர் கேட்டிருக்க வேண்டாமா? மேலாண்மை வாரியத்திற்கு தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகியவை உறுப்பினர்களை அறிவித்துவிட்ட நிலையில், கர்நாடகம் மட்டும் உறுப்பினரை அறிவிக்கவில்லை. இதை பிரதமர் கண்டித்திருக்க வேண்டாமா? யாருக்கும் சாதகமாக பேசாமல் ஒதுங்கியிருப்பது நடுநிலையல்ல... நியாயத்தின் பக்கம் நிற்பது தான் நடுநிலை என்பதை அறியாதவரா பிரதமர்? 

கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, செப்டம்பர் 29 ஆம் தேதி வழக்கறிஞர் ~பாலி நாரிமனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், “உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 27 ஆம் தேதி தண்ணீர் திறக்க உத்தரவிட்டவுடன், 28 ஆம் தேதி கர்நாடக மாநில அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினேன். அதில் மத்திய அமைச்சர்கள் மூவர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். செப்டம்பர் 23 இல் கர்நாடக சட்டமன்றமும், சட்ட மேலவையும் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், கர்நாடக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் அதே முடிவில் உறுதியாக இருக்கிறோம். செப்டம்பர் 29 ஆம் தேதி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு, காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கூடிய சூழல் இல்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளேன். இந்த விபரங்களை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சித்தராமையாவுக்கு வழக்கறிஞர் ~பாலி நாரிமன் பதில் கடிதம் எழுதினார். அதில், “கர்நாடக அரசுக்காக நான் வழக்காடினாலும், நானும் நீதியை நிலைநாட்டும் நீதிமன்ற அதிகாரி என்பதை நீங்கள் உணர வேண்டும். தண்ணீர் திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்து இருக்கின்றது. நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும். நீங்கள் அனுப்பி உள்ள கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். ஆனால், கர்நாடக மாநிலத்தின் சார்பில் எந்தக் கருத்தையும் நான் முன்வைக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பில், “கர்நாடக மாநிலத்தின் சார்பில் வழக்காடிய மூத்த வழக்கறிஞர் ~பாலி எஸ்.நாரிமன், தாக்கல் செய்துள்ள மேற்கண்ட இரண்டு கடிதங்கள் இடம் பெற்றுள்ளன. மத்திய அரசு வரும் 4ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். முதலில் இதற்கான ஒருங்கிணைப்பாளரை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். இந்த வாரியத்தில் இடம் பெறும் காவிரி நீர்ப்பாசன மாநிலங்களான கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் பிரதிநிதிகளை நியமனம் செய்ய வேண்டும். சட்டத்தையும், நீதிமன்றத்தையும் மதிக்காத கர்நாடக அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. அரசியல் சாசனப் பிரிவு 144ன்படி மத்திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து நடக்க வேண்டும். இந்தியக் கூட்டாட்சியில் ஒரு மாநிலமாக அங்கம் வகிக்கும் கர்நாடகா, நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் இருக்க முடியாது. கர்நாடக அரசின் இந்தப் போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. கர்நாடக அரசுக்கு இறுதி எச்சரிக்கையாக ஒரு வாய்ப்பை வழங்குகிறோம். வரும் 1ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரைக் காவிரியில் திறந்துவிட வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

2014 ஆம் ஆண்டு டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் வீட்டில் நடந்த சதி ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். காவிரியின் குறுக்கே ராசிமணல், மேகதாட்டு ஆகிய இரு இடங்களில் தடுப்பு அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி தேவையில்லை. அணையைக் கட்டும் பணிகள் தொடங்கலாம் என்று மத்திய அமைச்சர்கள் பச்சைகொடி காட்டினர்.மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார், சதானந்த கவுடா, ரமேஷ் சந்தப்பா ஜீகாஜிநாசி ஆகிய மூன்று பேரும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றது கண்டனத்துக்குரியது
காவிரி சிக்கலில் மத்தியரசு இனியும் அமைதியாக இருப்பது சரியானதாக இருக்காது. உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடகத்திற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். அதேபோல், கர்நாடகத்தின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். கர்நாடக அரசு வழிக்கு கொண்டுவர எதை செய்ய வேண்டுமோ, அதை மத்திய அரசு செய்ய வேண்டும்.

#காவிரிசிக்கல்
#cauveri


No comments:

Post a Comment

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things that makes you sad.

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things th...