Tuesday, November 26, 2019

பிரபாகரனை சந்தித்தோம்- கல்கி ப்ரியன்-


இன்று பிரபாகரன் பிறந்த நாள்.
1986ம் வருடம் டிசம்பர் மாதம் முதல் வாரம் "கல்கி"க்காக அவரை மூன்று மணி நேரம் பேட்டி கண்டது நினைவு அடுக்குகளில் பசுமையாக நிலைத்திருக்கிறது.
நாங்கள் (உதவி ஆசிரியர் இளங்கோவன்,நான்  மற்றும் சந்திரமௌலி) கேட்ட 32 கேள்விகளுக்கும் எந்தவித பதட்டம், தடுமாற்றமின்றி தெளிந்த நீரோட்டமாய்  அமைந்த பதில்கள். ஆங்கிலக் கலப்பில்லாத ஈழத்தமிழ் பிரவாகம்.
கூட இருந்த பாலசிங்கம் மட்டுமே அவ்வப்போது ஆங்கிலத்தை  பயன்படுத்தினார்.
இந்திய அரசு பிரபாகரனை தங்கள் கொள்கைக்கேற்றபடி வழி நடத்த வேண்டுமென்று அவருக்கு பல அழுத்தங்களைக் கொடுத்துவந்த நேரம் அது. தமிழக அரசால் புலிகளிடமிருந்து பறிக்கப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களை உண்ணாவிரதமிருந்து திரும்பப் பெற்றார் பிரபாகரன். 
இந்த சூழலில் "அகிம்சை போராட்டத்தின் மூலம்  காந்தி இந்திய விடுதலையை பெற்றுத் தந்தது போல  நீங்களும் ஈழத்தில் முயற்சி  செய்யலாமே?" 
என்பது எங்கள் கேள்விகளில் ஒன்றாக இருந்தது.
அதற்கு பிரபாகரன் பதில்:
"உண்மைதான். ஆனாலும் காந்தியடிகளின் அகிம்சை போராட்ட முறைதான் வெற்றி பெற்றது என்று சொல்ல முடியாது.  இந்தியர்களின் சுதந்திர எழுச்சியைக் கண்ட ஆங்கிலேயர்கள் இந்த அகிம்சை முறை தோல்வியுற்றால் எதிர்காலத்தில் இவர்கள் ஆயுதமேந்தவும் தயங்கமாட்டார்கள் என்பதை உணர்ந்திருப்பார்கள். அதைத்தான் நேதாஜி போன்றவர்கள் உணர்த்தினார்கள். இது காரணமாகத்தான் தங்கள் காலனி ஆதிக்கத்தின் கீழுள்ள நாடுகளுக்கு ஆங்கிலேயர்கள் விடுதலை கொடுக்க முன் வந்தார்கள். அப்படித்தான் நாங்கள் கருதுகிறோம்." அவரது பேட்டியில் இறுதியாக பிரபாகரன் அழுத்தமாகச் சொன்ன ஓரு விஷயம்:"எங்களுக்கு இங்குள்ள(தமிழகம்) அனைவரும் ஓன்றுதான்.எனவே தயவு செய்து இங்குள்ள அரசியலோடு எங்களை தொடர்பு படுத்தாதீர்கள்."

அந்த காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்ட பேட்டி அது.

அந்தப் பேட்டியோடு வந்த பெட்டிச் செய்தியில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.அதற்காக என்னிடம் திரு.பழ.நெடுமாறனும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் கோபப்பட்டார்கள்.

இந்தப் பேட்டிக்குப் பிறகு  உளவுத்துறை டி.ஜி.பி. மோகன்தாஸ் எங்கள் ஆசிரியரை சந்திக்க விரும்பினார். ஆசிரியரும் நானும் அவரைச் சந்தித்தோம். விடுதலைப்  புலிகள் மீது மத்திய,மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் பின்னனியை அவர் விளக்கினார். இது குறித்து பின்னொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.
- கல்கி ப்ரியன்.

No comments:

Post a Comment

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things that makes you sad.

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things th...