Thursday, December 10, 2020

 #ஞாபகம்_வருதே.................

———————————————————-








அந்தக் காலத்தில் 9,10,11 (எஸ்.எஸ்.எல்.சி )பள்ளி வகுப்புகள் என்று இருந்தது. 1950,60களில் கழக உயர்நிலைப் பள்ளி என்று அழைப்பார்கள். அப்போது ஒரு தாலுகாவுக்கு இரண்டு, மூன்று பள்ளிகள் இருந்தன.
பின், 1960களில் உயர் நிலைப்பள்ளி என்று அழைக்கப்பட்டது. இப்போது சொல்லப்படுகின்ற மேல்நிலைப்பள்ளி, அதாவது பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் 1970களில் தொடங்கியது.
நான் உயர்நிலைப் பள்ளியில் பாளையங்கோட்டை புனித சவேரியார் பள்ளியில் சேர்க்க முற்பட்டபோது, அது அந்நிய பிரதேசமாக அப்போது என் மனதில் பட்டதுமட்டுமில்லாமல், கிராமத்திலேயே வாழ்ந்ததால் கிராமத்திலிருந்தே படிக்க வேண்டும் என்ற பிடிவாதத்தினால், எங்கள் கிராமத்துக்கு அருகேயுள்ள திருவேங்கடம் என்ற பேரூராட்சியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில், 9,10,11, அதாவது எஸ்.எஸ்.எல்.சி படித்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. அப்போது தமிழ், ஆங்கிலம் பாடநூல்கள், திருச்சி, கீதா பிரஸில் அச்சடித்து, தமிழகத்திலுள்ள எஸ்.எஸ்.எல்.சி மாணவர்களுக்கு சென்னை, மதுரை, பல்கலைக்கழகம் என அச்சிட்ட அட்டையுடன் இருக்கும். அப்போது, சென்னை, அண்ணாமலை, மதுரை பல்கலைக்கழகங்கள்தான் தமிழ்நாட்டில் இருந்தன.
தமிழ், ஆங்கிலப் பாடப் புத்தகங்கள் நீண்ட பெரிய சைஸில் பச்சை, ரோஸ் கலரில் அட்டை இருக்கும். அந்தந்த வட்டாரங்களுக்கு ஏற்றவாறு சென்னை, மதுரை பல்கலைக்கழகத்தின் லோகோ இருக்கும். ஆங்கிலத்தில் அன்றைக்கு படித்த The Happy Prince(Oscar Wilde), The Solitary Reaper மற்றும், தமிழில் சுத்தானந்த பாரதியார் கவிதைகள், நாவலர் சோமசுந்தருடைய கட்டுரைகள்,போன்றவைகள் இன்றைக்கும் நினைவுகள் வருகின்றன. வித வித மான இங்க் பேனாவில்தான் தேர்வு எழுத வேண்டும்.
எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ் நோட் புத்தகம் அளவில் கலிக்கோ அட்டையில் பத்து, பனிரெண்டு பக்கங்கள் அடங்கிய கைப்பட எழுதிய சான்றிதழ்கள்தான் அப்போது. படித்த பள்ளியின் தலைமையாசிரியர் கையொப்பம், தந்தையார் கையொப்பம் இருக்கும். எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் மட்டும் பெற்ற மார்க்குகள் சிகப்பு மையில் எழுத்துகளில் இருக்கும்.
கிராமத்திலிருந்து பள்ளிக்கு சில நேரங்களில் காலம் சைக்கிளில் செல்வதுண்டு, நடந்தும் செல்வதுண்டு. வீட்டை விட்டு 8 மணிக்கு கிளம்புவோம். வகுப்புகள் 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கிவிடும். பரந்த வெளியைக் கொண்ட நான் படித்த திருவேங்கடம் உயர்நிலைப்பள்ளி ஊரைவிட்டு சற்று வெளியே இருந்தது. கபடி விளையாட மணல் நிரப்பப்பட்ட கபடி மைதானம். அதைப்போல பூப்பந்து விளையாடுவதற்காக கட்ட வலைகள் கம்பிகள் உள்ள மைதானம் இன்றைக்கும் நினைவுக்கு இருக்கின்றது.
மைதானத்தில் புளியமரங்கள் இருக்கும். இந்த படத்திலிருந்து இருக்கின்ற மாதிரி அந்த புளியமரங்களிலிருந்து விழும் புளியம்பழத்தை, அதனுடைய மேல் ஓடை உடைத்து வாயில் முழுமையாக போடாமல், நாக்கில் சற்று தொட்டு பார்த்து சாப்பிட்டால், அவ்வளவு சுவையாக இருக்கும். கொடுக்கா புளி இலந்தைபழம், நாவல் பழம் இவையெல்லாம் இயற்கையாகவே கிடைத்தது.
மதிய உணவுக்கு வீட்டிலிருந்து சட்னியுடன் இட்லிபொடிதோசை, புளிசாதம், தேங்காய் துவையல், பொறித்தகூழ்வத்தல்வடகம், தயிர்சாதம், நார்த்தங்காய் அல்லது எலுமிச்சை ஊறுகாய், வறுத்த மிளகாய் என மதியம் 1.30 மணிக்கு சாப்பிட்ட அந்த சுவைக்கு நிகர் எங்கும் இருப்பதில்லை. பள்ளிக் கூடத்தின் அருகே நாட்டுப்புற தெய்வமான பேச்சியம்மன் கோயிலில், பெரிய கல்மண்டபம் இருக்கும். விசாலமான, காற்றோட்டமான அந்த மண்டபத்தில் வகுப்பு தோழர்ளுடன் அமர்ந்து பக்கத்து கிராமங்களிலிருந்து வருகிற சகாக்களிடம் பேசிக் கொண்டே சாப்பிடுவது, அப்படியே திருவேங்கடம் கடைத் தெருவில் போய் ஒவ்வொருவரும், கிடைக்கின்ற குச்சி ஐஸ், பஞ்சுமிட்டாய், கருப்பட்டி மிட்டாய், சேவு போன்ற தீனிகளையும் வாங்கி சாப்பிடுவது வாடிக்கை.
அப்போதெல்லாம் ஐம்பது பைசாவே அதிகம். ஐம்பது பைசாவில், தனக்கு மற்றும் உடன் வரும் நண்பர்களுக்கு வாங்கி கொடுத்துவிட்டு மீதி 25 பைசா கையிலிருக்கும். அப்போது தலைமையாசிரியராக இருந்த முக்கூடல் அருகேயுள்ள கல்லூர் கே.வி.முத்துசாமி ஐயர், புதுபட்டி ஏ.குருசாமி, நாகர்கோவிலைச் சேர்ந்த சிவன்பிள்ளை, வில்லுசேரி வி.எஸ்.கந்தசாமி, சாயமலை பெரியசாமி, தமிழாசிரியர் மயில்வாகனம், மற்றொரு தமிழாசிரியர் சைவபழமாக திகழ்ந்த சங்கரன்கோவில் கோமதி அம்மாள் கோயிலில் தேவாரம், திருவாசகத்தை சொல்லி தந்த ரத்னவேல் போன்ற பல ஆசான்கள் எல்லாம் மறக்க முடியாது. பிற்காலத்தில் இவர்களை பார்க்கும்போது, பத்திரிகையில் உங்களை பற்றி செய்திகளை பார்க்கும்போது எங்களுடைய மாணவர் என்ற பெருமை வரும் சந்தோஷப்படுவோம் என்று என்னிடம் சொல்வார்கள். ஆசிரியர்களை அன்றைக்கு தாய் தந்தையாரைப் போல சற்று பயத்தோடு கூடிய மரியாதையோடு பார்த்தோம்.
அப்போது உயர்நிலைப்பள்ளியில் படிப்பவர்களுக்கு சாதி, மதம் வேறுபாடு இருந்ததில்லை. வகுப்புகள் வெறும் தரையில் நடந்தாலும் சரி, பெஞ்சில் அமர்ந்து நடந்தாலும் சரி காலில் செருப்பு அணிந்து வந்து இருந்திருந்தால், இயற்கையாகவே செருப்புகளை வெளியே கழட்டிவிட்டு செல்லும் குணம் இயற்கையாகவே எங்களிடம் தொற்றிக் கொண்டது.
அன்றைக்கு தேடல், அறிதல் என்பது தேனீ போல இயங்க வேண்டுமென்ற ஒரு ஆர்வம் இருந்தது. தினமணியில் கட்டுரைகள் வருவதுபோல நாமும் ஒருநாள் கட்டுரைகளை எழுத வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதின் விளைவாக இன்றைக்கு தினமணியில் கட்டுரைகளைஎ எழுதும் கனவு நிறைவேறியது. பள்ளிக்கு செல்வது, சக மாணவர்களுடன் உட்கார்ந்து பேசுவது, சாப்பிடுவது என்பது ஒரு மகிழ்ச்சியான காலம்.
பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பும்போது புளியமரம், கொடுக்கா புளி, நாவல்பழம், இலந்தை பழம் போன்றவற்றை எந்தவிதமான தயக்கமும், தடையும் இல்லாமல் பறித்து உண்டபோது அந்த வயதுக்கு அது பேரின்பமாக திகழ்ந்த நினைவுகள். காமராஜர், ஜெபி,கல்வியமைச்சர் பக்தவச்லம், போன்றோர்கள் வரும்போது ஒரு அதிசய காட்சி போல மனதில்பட்டது. அவர்களிடம் முந்திக் கொண்டு ஆட்டோகிராப் வாங்க செல்வோம். திருநெல்வேலிக்கோ,, மதுரைக்கோ, செல்லும்போதுதான் ஆட்டோகிராப் புத்தகம் வாங்க முடியும். சங்கரன்கோவில், கோவில்பட்டி, ராஜபாளையத்தில் ஆட்டோகிராப் புத்தகம் கிடைக்காது. பல வண்ணங்கள் அடங்கிய தாளில் நீட்ட வடிவில் கிடைக்கும்.
அந்த வயதில் வெளிநாட்டு அஞ்சல் தலைகளை ஆர்வமாக சேகரித்து வந்தேன். இலங்கை, ஆப்பிரிக்க நாடுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளின் கிட்டதட்ட 500,600 அஞ்சல் தலைகளை ஆறாம் வகுப்பிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி வரை பெரும் சொத்தாக பேணி காத்து வந்தேன். கல்லூரியில் பியூசி சேர்ந்தவுடன், அந்த மாதிரியான ஆர்வங்கள் குறைய தொடங்கின. அதற்கு பிறகு புதிய படங்கள் என்ன வருகின்றது என்ற நகரமயமாக்கல் என்னை வேறு திசைக்கு திருப்பிவிட்டது.
புளியம்பழம், நாவல்பழம், கொடுக்காப்புளி, இலந்தைபழம் அன்றைக்குள்ள அளவு எளிதாக கிடைப்பதில்லை. ஊர் பக்கங்களில் கூட மெனக்கெட்டு அதை பெற முயற்சி எடுக்க முடியாத இன்றைய வாழ்க்கைப் போக்கு. கால சக்கரம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. என்னோடு படித்தவர்கள் எத்தனையோ பேர், தாய் தந்தையாகி, ஒரு சிலர் பாட்டன், பாட்டியாகவும் ஆகிவிட்டார்கள். இதில், இரண்டு, மூன்று பேரின் மரணம் வெகுவாக என்னை பாதித்தது. வாழ்க்கையில் இவையாவும் நமக்கான மகிழ்ச்சியை தருகின்ற ஆறுதல் மட்டுமில்ல, நம்முடைய கவலைகளிலும் பல்வேறு சூழ்நிலைகளில் நமக்கு ஏற்படுகின்ற எதிர்வினைகளையும் மறக்க இந்த நினைவுகள் மனதுக்கு மாமருந்தாக இருக்கும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
7-12-2020.

No comments:

Post a Comment

*If you're not making mistakes. Then you're not making decisions*

*If you're not making mistakes. Then you're not making decisions*. You know success seems to be connected with action. Successful pe...