———————————————————-
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் - சிவகாசி இடையே உள்ள ஆலங்குளம் கிராமத்தில் சிமென்ட்ஸ் உற்பத்திக்குத் தேவையான கனிம வளங்கள் இருப்பது 1966-இல் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இப்பகுதியில் சிமென்ட் தொழிற்சாலை தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் காமராசர் காலத்தில் நடைபெற்றது.
அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ரா. கிருஷ்ணசாமி நாயுடு, எஸ்.ஆர். நாயுடு, இராஜபாளையம் அன்னமராஜா போன்றோர் இதற்கு துணையாக இருந்தனர். சிவகாசி, இராஜபாளையம் பகுதிகள் மிளகாய், பருத்தி, கரும்பு, சோளம், நெல், வாழை முதலான பயிர்கள் விளைந்த கரிசல் பூமி. பட்டாசு, அச்சுத் தொழில்களும், நெசவுத் தொழிலும் இங்கு பிரதானமாக இருந்தன.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்குப் பின்னர், 1967-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் துணைத் தலைவராகயிருந்த பெ. சீனிவாசன், முன்னாள் அமைச்சர் காளிமுத்து, அழகுத் தேவர் ஆகியோரின் வேண்டுகோளின்படி, முதல் அமைச்சராக இருந்த மு. கருணாநிதி TANCEM நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு சிமென்ட் தொழிற்சாலையினை 1970-ஆம் ஆண்டு தொடங்கிவைத்தார்.
இந்த தொழிற்சாலைக்காக அப்பகுதி மக்களிடமிருந்து ஏறத்தாழ 2,000 ஏக்கருக்கும் மேலாக நிலங்களை, ஏக்கர் ஒன்றுக்கு 200 முதல் 300 ரூபாய் விலைக்கு மாநில அரசு கையகப்படுத்தியது. சிமென்ட் தயாரிப்புக்கு மூலப் பொருள்களான சுண்ணாம்புக் கல், படிம கல் போன்ற தாதுக்கள் இங்கு பூமிக்கடியில் நிரம்பியிருந்தது.
சுமார் 200 ஆண்டுகளுக்குத் தேவையான மூலப்பொருள்கள் கிடைக்கும் என்பதைக் கணக்கில் கொண்டு ஆலங்குளத்தில் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.
நாளொன்றுக்கு 1,200 டன் சிமென்ட் உற்பத்தி செய்யத் தொடங்கிய இந்த ஆலை, பழைய தொழில்நுட்பத்தில் அதாவது, ரங்ற் ல்ழ்ர்ஸ்ரீங்ள்ள் முறையில் சிமென்ட் உற்பத்தி செய்ய வடிவமைக்கப்பட்டது.
இம்முறையில் மூலப்பொருள்களைக் கூழாக்கி சிமென்ட் தயாரிப்பதால் சிமென்ட் தூசி அதிகமாக வெளியேறும். மற்றொரு முறையான Dry process முறையில் மூலப்பொருள்கள் உலர்ந்த நிலையிலே அரைத்து சிமென்ட் தயாரிக்கப்படும். இந்த முறையில் தூசுகள், மாசுகள் அதிகம் வெளியேறுவதில்லை.
நாளடைவில், Wet process முறையின் காரணமாக சிமென்ட் தூசு அதிக அளவில் ஆலங்குளம் வட்டாரத்தில் பரவியது. தூசுகள் ஊரெங்கும் பரவி சுவாசிக்கும் காற்று மாசுபட்டதோடு, நீர்நிலைகளில் அடர்சாம்பலாய் தூசுகள் படிந்ததால் கால்நடைகளும் பாதிக்கப்பட்டன.
கடைகளிலுள்ள தின்பண்டங்களில்கூட சிமென்ட் தூசுகள் படிந்தபடியிருந்தன. ஆலங்குளம் சுற்றுவட்டார மக்களை சுவாச நோய், தோல் நோய், இருமல், சளி போன்ற நோய்கள் அதிக அளவில் பாதித்தன. சிறு குழந்தைகளை பிரைமரி காம்ப்ளக்ஸ் நோய் தாக்கியது.
சிவகாசி, இராஜபாளையம் வட்டாரமே ஆலைத் தூசியினால் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால், மருத்துவமனைக்கு மக்கள் படையெடுக்கத் துவங்கினார்கள். சிமென்ட் மாசு காற்றில் கலந்து பரவியதன் காரணமாக விளைநிலமாக இருந்த கரிசல் மண் சாம்பல் நிறமாக மாற்றமடைந்தது. பயிர்களின் பூக்கள் காயாகாமலே வாடின.
வழக்கமாக இருபது குவிண்டால் விளைந்த மிளகாய்ப் பயிர்கள், இந்த மாசினால் ஒரு குவிண்டால் விளைச்சலைக் கூடத் தொட முடியவில்லை. பருத்திச் செடிகள் தரையோடு தரையாய் சாய்ந்தன. எங்கும் சிமென்ட் தூசிமயம்.
இதுகுறித்து கரிசல் பகுதி எழுத்தாளர்களான கி. ராஜநாராயணன், மேலாண்மை பொன்னுசாமி போன்றோர் கதைகளும் எழுதியுள்ளனர்.
1976-இல், இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள், ஆலை நிர்வாகத்தினரிடம் இப்பிரச்னையைத் தெரிவித்தனர். ஆலையில் இருந்து வரும் நச்சுத்தன்மை கலந்த புகையை சுத்திகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆலைக்காக நிலங்களை வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதில்கூட நிர்வாகம் முறையாக நடந்துகொள்ளவில்லை. நச்சுத்தன்மை கொண்ட புகையை கட்டுப்படுத்த வேண்டுமென மக்கள் மீண்டும் கோரிக்கை வைத்தனர். ஆனாலும் அதிகாரிகள் பாராமுகமாக இருந்தனர்.
ஒரு நாளைக்கு சுமார் 1,200 டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படும் ஆலையில், 150 முதல் 170 டன் வரை சிமென்ட் தூசியாக வெளியே செல்கிறது. இதனால், சுமார் 20 கி.மீ. சுற்றளவில் உள்ள 35 ஆயிரம் ஏக்கர் நிலம் மாசுபட்டது.
ஆலங்குளத்தில் இருந்து 20 கி.மீ. தூரத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்திலுள்ள சிலைகளில் கூட இந்த சிமென்ட் தூசிகள் படிந்து பாதிப்பை ஏற்படுத்தின.
இறுதியாக, 1978-இல் இராஜபாளையத்தில் பொதுமக்களோடு அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் இறங்கின. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எச்.எம்.எஸ். தொழிற்சங்கம் ஆகியவை மட்டுமல்லாமல், விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடு, சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த பெ. சீனிவாசன் போன்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.ஜி.ஆர் முதலமைச்சராக் இருந்தபோது, 5-4-1978-இல் ஏ.ஆர். மாரிமுத்து (காங்.), சோ. அழகர்சாமி (இ.கம்யூனிஸ்ட்), சுப்பு (தி.மு.க) ஆகியோரால் சட்டப்பேரவையில் இது குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக தூசிகளைத் தடுக்க சில இயந்திரங்கள் வாங்கப்பட்டன. ஆனால், அந்த இயந்திரம் தொடர்ந்து இயக்கப்படாததால் திரும்பவும் அதே துயரநிலை.
இந்நிலையிலே, 1986-இல் தூசியினை நிறுத்தும் வரை ஆலை இயங்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் ஒரு பொதுநல வழக்குத் தொடர்ந்தேன். அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டு ஆலை இயங்கி வருவதால் இதை மூட உத்தரவிடக்கூடாது என்று வாதாடினார்.
நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இவ்வழக்கு, 1997-இல் தலைமை நீதிபதி. கே.ஏ. சாமி, நீதிபதி கனகராஜ் ஆகியோர் முன்பாக இறுதி விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு 1986-ஆம் ஆண்டில் இருந்தே நிலுவையில் உள்ளபோதும், சிமென்ட் ஆலை நிர்வாகம் ஆலையில் இருந்து வெளியாகும் மாசுகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காததையும், நிலக்கரி எரிக்கப்படும் இடத்தில் இருந்து வெளியாகும் மாசுகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காததையும், வாரியம் பிறப்பித்த எந்த உத்தரவையும் ஆலை நிர்வாகம் அமல்படுத்தாதையும், 1988-ஆம் ஆண்டு முதல், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அங்கீகாரத்தைக் கூட புதுப்பிக்காததையும் அப்போது உயர்நீதிமன்றத்தில் நான் சுட்டிக்காட்டினேன்.
வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஆலையின் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை கவனத்தில் கொண்டு ஆலை நிர்வாகத்திற்கு கால அவகாசம் அளிக்க முடிவு செய்தார்கள். பின்னர் 1997 மார்ச் மாதம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் ஆலை மூடப்பட்டது.
ஆனால், அபரிமிதமாகக் கிடைக்கும் மூலப்பொருள்களும் 2,000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து ஆண்டுக்கு 4 லட்சம் டன் உற்பத்தி செய்யும் ஆலை, சிமென்ட் தட்டுப்பாட்டினைக் காரணம் காட்டி அதே ஆண்டு மே மாதம் மீண்டும் திறக்கப்பட்டது.
வளமான கரிசல் விளை நிலங்கள் சிமென்ட் தூசுகளால் சாம்பல் மயமாயின. விவசாயமும் முற்றிலுமாக அழிக்கப்பட்ட நிலையில், ஆலங்குளம் சிமென்ட் தொழிற்சாலையினை மாநில அரசு தனியாருக்கு விற்பனை செய்ய கடும் முயற்சி எடுத்துவருகிறது.
சிவகாசி, இராஜபாளையம் பகுதிகளில் செழிப்பாக இருந்த விவசாயமும், தீப்பெட்டித் தொழிலும், அச்சுத் தொழிலும், பட்டாசுத் தொழிலும், நெசவுத் தொழிலும் நலிவடைந்திருக்கின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி, சங்கரன்கோவில் ஆகிய ஊர்களை உள்ளடக்கிய வானம்பார்த்த பூமிக்கு ஒரே தொழிற்சாலை ஆலங்குளம் சிமென்ட் ஆலையாகும்.
அதனை நவீனப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளாமல், மூடிவிட்டு அத்தோடு சேர்த்து இயற்கை வளங்களையும் தனியாருக்கு விற்க தமிழக அரசு துடிப்பது எந்தவகையில் நியாயம்?
1986 காலகட்டத்தில் தனியாருக்கு ஆலையினை விற்கும் முயற்சியை மாநில அரசு துவங்கியபோது, என்னுடைய வழக்கு நிலுவையில் இருந்ததால் விற்க முடியவில்லை. பின் 1996 வரை ஆலையை விற்க எடுத்த முயற்சிகளுக்கும் என் வழக்குதான் தடையாக இருந்தது.
இது எனது கடமை. இதுதான் நான்.
அரசியல் வியாபாரி நான் அல்ல.
No comments:
Post a Comment