மெட்ராஸ்ல இருந்த எத்தனையோ பழைய சினிமா தியேட்டர்கள் இன்னைக்கி இல்லாமே போயிட்டுது. ஆனா பெரிய பெரிய மால்களிலே தியேட்டர்கள் வர ஆரம்பிச்சிட்டுது. ஏ.ஜி.எஸ்.ன்னு ஒரு நிறுவனம் மெட்ராஸ்ல ஏகப்பட்ட தியேட்டர்களை புதுசாக் கட்டி நடத்துது. சென்னையிலே குளோப், வெலிங்டன், சித்ரா, கெயிட்டி, பிளாஸா, பாரகன், சன், ராஜகுமாரி, கிருஷ்ணவேணி, சாந்தின்னு எத்தனையோ தியேட்டர்கள் காணாமப் போன மாதிரி, திருநவேலியில பாப்புலர், ராயல், பார்வதி, சென்ட்ரல், பாலஸ்-டி-வேல்ஸ்ன்னு பல தியேட்டர்களை மூடிட்டாங்க. மதுரையில தங்கம் தியேட்டர் சென்னை சில்க்ஸ் ஆயிருக்குது. நியூ சினிமா, சிந்தாமணி, சந்திரா டாக்கீஸ், சிட்டி சினிமாவெல்லாம் காணாமெப் போச்சு. வீட்டிலே எத்தனை பேர் செத்துப் போயி, காணாமல் போயிட்டாங்க. எத்தனை பேர் எங்கெங்கியோ தூர தொலைவுக்குப் போயிரலையா? அந்த மாதிரித்தான் இதெல்லாம்.
கதைகள்ல இழப்புன்னு ரொம்ப சோகத்தோட விவரிக்கிறாங்க. இப்போ ‘வலி’ங்கிற சொல்லை எழுத்துல ரொம்பப் பயன்படுத்துதாங்க. இழப்பு, வலி யாருக்குத்தான் இல்ல? எங்கேதான் இல்ல? இதையும் மீறி சினிமா, டி.வி., பக்தி, கோயில், குளம்ன்னு எங்கேயாவது போயிக்கிட்டு, சந்தோஷம் அல்லது ஏதோ ஒரு திருப்தி இல்லாமலும் மனுஷனால இருக்க முடியாதுன்னுதான் தோணுது.
திருப்தி, சந்தோஷம்கிறது ஒண்ணும் பெரிய விஷயங்களாலே உண்டாகுறது இல்ல. நாக்கு வறண்டு போயி தண்ணித் தாகம் எடுக்கு. ஒரு சொம்புத் தண்ணியக் குடிச்சதும் வார திருப்திக்கு எது ஈடாகும்? புழுக்கமா இருக்கு ஃபேனைப் போட்டுட்டு அதுக்கும் கீழே உக்காந்ததும் மெள்ள மெள்ளப் புழுக்கம் கொறஞ்சு சந்தோஷமா இருக்கு. கொழந்தைகளைக் கொஞ்சினால் சந்தோஷமா இருக்கு. இப்படித்தான் சின்னச் சின்ன விஷயங்களாலே திருப்தியும், சந்தோஷமும் ஏற்படுது. வீடு வாங்கினால், கார் வாங்கினால் ஏற்படுற திருப்தியும் சந்தோஷமும், சின்னச் சின்ன விஷயங்கள் பூர்த்தியாகிறதால ஏற்படுகிற திருப்தியும் சந்தோஷமும் ஒரே மாதிரித்தான் இருக்கு. இந்த உணர்ச்சி உலகம் பூரா எல்லா மனுஷனுக்கும் ஒரே மாதிரித்தான் ஏற்படுது. இதுல ஒரு சோஷலிஸத் தன்மை இருக்கு.
எனக்குப் பொஸ்தகம் படிச்சா பெரிய சந்தோஷமா, கொண்டாட்டமா இருக்குது. க்ரியா பதிப்பகத்த அப்போ ராமகிருஷ்ணன் ஆரம்பிக்கலை. அவர்தான் கார்லோஸ் காஸ்டநாடா ஸீரிஸ் புஸ்தகங்களைத் தந்தார். அதப் படிச்சிட்டு கெறங்கிப் போயிக் கெடந்தேன். அந்த ஸீரியல் புத்தகங்கள்ள வருகிற டான்ஜூவானோட ஐக்கியமாயிட்டேன். பாளையங்கோட்டையில மோகமுள் படிச்சப்போவும் இப்படித்தான் தன்நெலை தெரியாமல் கெடந்தேன். சில பொஸ்தகங்கள் மனசை எங்கேயோ உச்சத்துக்குக் கொண்டுட்டுப் போயிருது. புணர்ச்சி இன்பத்துக்கு ஈடானது சில பொஸ்தகங்கள் தருகிற சந்தோஷம்.
-வண்ணநிலவன்(சொல்வனம்)
No comments:
Post a Comment