Saturday, May 4, 2019

அமெரிக்காவில் கொலம்பஸ் நாள்

அமெரிக்காவில் கொலம்பஸ் நாள்
நான் எப்போதுமே கொலம்பஸுக்கு அமெரிக்காவில் அதிக மரியாதை கொடுக்கிறார்கள் என்று நினைத்ததுண்டு. முதல் முதலாக அட்லாண்டிக் கடலை அவர் கடந்தது பெரிய சாதனைதான். கொந்தளிக்கும் அட்லாண்டிக் கடலை அதுவரை யாரும் கடந்ததில்லை; உயிரைத் துச்சமாக நினைத்து அதைக் கடக்கத் துணிந்தது பெரிய காரியம்தான். இருந்தாலும் அவர் ‘புதிய கண்டத்தில்’ என்னென்ன அட்டூழியங்கள் புரிந்தார் என்பதை அறிந்தால் அவரை இப்படிப் புகழ முடியுமா என்று எனக்கு நினைக்கத் தோன்றும்.
ஐரோப்பியர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரு புதிய பூமியைக் காட்டி அங்குள்ள வளத்தை அவர்கள் அனுபவிக்க வழிகாட்டியது கொலம்பஸ்தான். அதனால் அவர்கள் அவரை மிகவும் போற்றுகிறார்கள் என்று எண்ணிக்கொள்வேன். (கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்று நமக்குப் பள்ளியில் கற்பிக்கப்பட்டாலும் இப்போது அமெரிக்கா என்று அறியப்படும் கண்டத்தில் கொலம்பஸ் கால்வைக்கவில்லை. அருகிலுள்ள பஹாமாத் தீவுகளுக்கு வந்ததோடு சரி. அவருக்குப் பிறகு அமெரிக்கக் கண்டத்திற்கு வந்த அமெரிகோ வெஸ்ஸி புச்சி என்னும் இத்தாலியரின் பெயரைத்தான் அமெரிக்கக் கண்டத்திற்கு வைத்தார்கள். இவர்தான் கொலம்பஸ் வந்தது இந்தியாவுக்கு இல்லை, இன்னொரு கண்டத்திற்கு என்று சொன்னவர். 1497-லும் 1502-லும் அமெரிக்கக் கண்டத்தைற்குத் தான் வந்த அனுபவங்களை எழுதினார். இவர் எழுதியதை வைத்து வரைபடம் வரைபவர்கள் வரைபடம் வரைய ஆரம்பித்தார்கள். அதனால் இவர் பெயரையே அதற்கு வைத்தார்கள்.)
1934-லிருந்து அமெரிக்காவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கள்கிழமை கொலம்பஸ் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இது மத்திய அரசால் விடுமுறை நாளாகக் கணிக்கப்பட்டது. இப்போது சில மாநிலங்களில் அந்த நாளை ‘பழங்குடி மக்கள் நாள்’ என்று மாற்றப் போகிறார்களாம். ஏற்கனவே நியூ மெக்ஸிகோ, வட கரோலினா, அலாஸ்கா, தென் டகோட்டா, ஆரகன், மினசோட்டா ஆகிய ஆறு மாநிலங்களிலும் 130 நகரங்களிலும் பெயர் மாற்றம் நடந்திருக்கிறது. (அமெரிக்காவில் மாநிலங்களுக்கென்று சில உரிமைகள் உண்டு.) வெர்மான்ட்டில் பெயர் மாற்றம் செய்வதற்குரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் கையொப்பத்திற்காகக் காத்திருக்கிறது.
அமெரிக்காவில் நிறைய மாநிலங்களில் கொலம்பஸ் என்ற பெயரில் ஊர்களும் சாலைகளும் உண்டு. அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் இருக்கும் டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியாவின் பெயர்கூட கொலம்பஸ் அமெரிக்கக் கண்டத்தை கண்டுபிடித்ததன் அடையாளமாக வைக்கப்பட்ட பெயர்தான்.
இப்போது மெயின் மாநில சட்டசபையில் பெயர் மாற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஜேனட் மில்லர் சீக்கிரமே அதில் கையொப்பமிடப் போகிறார். ‘ஒருவரின் பெயரை ஒரு நாளுக்கு வைப்பதால் அவருக்கு நாம் மிகவும் மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறோம். கிறிஸ்டபர் கொலம்பஸ் அட்லாண்டிக் கடலைக் கடந்தார் என்பதைத் தவிர அவர் என்ன பெரியதாகச் சாதித்துவிட்டார்?’ என்று அந்த மசோதா விவாதத்திற்கு வந்தபோது மெயின் சட்டசபை அங்கத்தினர் ஒருவர் கேட்டிருக்கிறார். கொலம்பஸ் நாளை பழங்குடி மக்கள் நாள் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோருபவர்கள் அமெரிக்கக் கண்டங்களில் அப்போது லட்சக் கணக்கான மக்கள் வாழ்ந்து வந்தார்கள் என்றும் கொலம்பஸ் வந்ததால் ஐரோப்பாவிலிருந்து நிறையக் குடியேறிகள் அமெரிக்காவுக்கு வந்து அங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த மக்களைத் தங்கள் நலன்களுக்காகப் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்திக்கொண்டர்கள் என்றும் இவருக்கு இதுவரை கொடுக்கப்பட்டு வந்த மதிப்பையும் மரியாதையையும் இப்போது நிறுத்திவிட்டு அவரால் பல துன்பங்களுக்கு ஆளான பழங்குடி மக்களின் பெயரால் அந்த நாளைக் குறிப்பிடலாம் என்றும் கூறுகிறார்கள். பழங்குடி மக்களின் பிரதிநிதியாக வந்திருந்த பெண், ‘இந்த நிலத்திற்கும் நீருக்கும் சொந்தமான எங்களுக்கு இதுவரை எந்தவித உரிமைகளும் இல்லாமல் இருந்தது. விடுமுறை நாளுக்கு கொலம்பஸ் பெயர் கொடுக்கப்பட்டிருந்ததால் எங்களுக்கு அவர் இழைத்த அநீதி மறைக்கப்பட்டிருந்தது. இப்போது எங்களுக்குரிய அங்கீகாரத்தைக் கொடுத்திருப்பது மனநிறைவைத் தருகிறது’ என்று கூறியிருக்கிறார். இப்படி கொலம்பஸ் நாள் என்று இதுவரைக் குறிப்பிடப்பட்டு வந்த நாளைப் பழங்குடி மக்களின் நாள் என்று பெயர் மாற்றம் செய்வதால் இத்தாலிய-அமெரிக்கர்கள் (இத்தாலியிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து குடியேறியவர்களை இத்தாலிய அமெரிக்கர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்; அதுபோல் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்களை இந்திய-அமெரிக்கர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்; ஒவ்வொரு நாட்டிலிருந்து வந்தவர்களுக்கும் இப்படிப் பெயர்கள் உண்டு.) தங்கள் மரபுப் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக அந்த நாளைக் கொண்டாடுகிறார்கள் என்ற ஒரு விஷயம்தான் கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது என்று பெயர் மாற்றம் செய்யும் விவாதத்தின்போது கூறப்பட்டது.
கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள பெர்க்லி என்னும் நகரம் 1992-லேயே இந்த விடுமுறை நாளைப் பழங்குடி மக்கள் தினம் என்று பெயர் மாற்றம் செய்துவிட்டது. இன்னும் பிரவுன் பல்கலைக்கழகமும், மினியாப்பிலஸ், சியாட்டல் ஆகிய நகரங்களும் பெயர் மாற்றம் செய்திருக்கின்றன. அலாஸ்கா 2015-இல் பெயர் மாற்றம் செய்தது; வாஷிங்டன் மாநிலம் அந்த நாளை விடுமுறை நாள் என்ற பட்டியலிலிருந்து நீக்கிவிட்டது. இன்னும் சில மாநிலங்கள் வேறு வகையாக இந்த நாளைக் கையாள்கின்றன. ஓக்லஹோமா மாநிலம் கொலம்பஸ் நாளை கொலம்பஸுக்கும் பழங்குடிகளுக்கும் உரிய நாளாக ஆக்கிப் புதிய சட்டம் இயற்றியிருக்கிறது. ஒஹையோ மாநிலத்தில் உள்ள சாண்டஸ்கி என்னும் நகரம் இந்த நாளுக்குப் பதில் தேர்தல் நாளை விடுமுறை நாளாக அறிவித்திருக்கிறது. தேர்தல் நாள் விடுமுறை நாளாக இருந்தால் வாக்காளர்களுக்கு வசதியாக இருக்குமாம். (அமெரிக்காவில் எல்லாத் தேர்தல்களும் – மிகச் சில விசேஷத் தேர்தல்கள் தவிர – நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும். எல்லாக் கீழவை அங்கத்தினர்களுக்கான தேர்தல்களும் இரண்டு வருஷங்களுக்கு ஒரு முறையும் ஜனாதிபதித் தேர்தல் நான்கு வருஷங்களுக்கு ஒரு முறையும் மேலவை அங்கத்தினர்களுக்கான தேர்தல் ஆறு வருஷங்களுக்கு ஒரு முறையும் நடக்கும். அமெரிக்காவில் தேர்தல் நாளன்று விடுமுறை இல்லை. எல்லா ஓட்டுச்சாவடிகளும் காலை ஆறு அல்லது ஏழு மணியிலிருந்து இரவு ஏழு அல்லது எட்டு மணி வரைக்கும் திறந்திருக்கும்)
கொலம்பஸ் நாள் மத்திய அரசின் விடுமுறை நாளாகத் தொடருகிறது. போன ஆண்டு அக்டோபர் மாதம் கொலம்பஸ் நாளன்று ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த நாளன்று திறமை வாய்ந்த ஒரு இத்தாலியரின் சாதனைகளை நாம் கொண்டாடுகிறோம். அமெரிக்க மதிப்பீடுகளான குறிக்கோளை அடைய விரும்பும் பேரார்வம், துணிச்சல், மனோதிடம் ஆகிய குணங்கள் அவரிடம் இருந்தன’ என்று கொலம்பஸைப் புகழ்ந்துதள்ளியிருக்கிறார்.
இந்த ட்ரம்ப் என்னவாவது சொல்லிவிட்டுப் போகட்டும். இப்போதாவது சில அமெரிக்கர்களாவது கொலம்பஸ் பழங்குடி மக்களுக்குச் செய்த அநீதிகளையும் அட்டூழியங்களையும் நினைவுகூர்ந்து அவருக்கு இதுவரை கொடுத்துவந்த மரியாதையையும் மதிப்பையும் திரும்ப வாங்குகிறார்களே என்பதை நினைக்கும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி பிறக்கிறது.

Thursday, May 2, 2019

*இலங்கையின் ரணங்கள்....*

இன்றைய (02-05-2019) தினமணியில் *கருப்பு ஞாயிறு... பின்னணி என்ன...* என்ற தலைப்பில் இலங்கையின் துயர சம்பவம் குறித்து  பல்வேறு கோணத்தில் நான் வெளியிட்ட சந்தேகங்கள் பற்றிய எனது பத்தி வெளியாகியுள்ளது.
*******************************


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்த புனித நாளான “உயிர்த்த ஞாயிறு” ஈஸ்டர் பண்டிகையை இலங்கையில் கடந்த 21-04-2019 அன்று கொண்டாடினார்கள். அப்போது காலை, 9 மணியளவில் கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், நெகோம்போவில் உள்ள புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பில் இவாஞ்சலின் தேவலாலயம் ஆகிய 3 தேவாலயங்களிலும் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 253 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
மேலும், கொழும்புவில் உள்ள ஷங்ரி லா, சின்ன மோன் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய 3 நட்சத்திர விடுதிகளிலும் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கியிருக்கும் ஓட்டல்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நிகழ்த்திய இந்த தாக்குதல்களால் உலகமே அதிர்ச்சியடைந்தது.
இந்த ரண நிகழ்வை உலக நாடுகள் கண்டித்தன. அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாரீஸ் நகரின் ஈபிள் டவரில் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டு இருளில் மூழ்கடிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தினர். இதே மாதிரி, பாரீசிலில் கடந்த 2017இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இங்கிலாந்து மற்றும் ஈபிள் டவரில் இத்தகைய அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதுவரை இலங்கையில் நடந்த இந்த காட்டுமிராண்டி குண்டுவெடிப்புத் தாக்குதலால் 8 இடங்களில் 253  பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதில் இந்தியர்கள் 11 பேர் உட்பட 42 பேர் வெளிநாட்டினவர் என்று நம்பப்படுகிறது. அவர்களில் 12 பேரின் அடையாளங்கள் இன்னும் அறியப்படவில்லை. உயிரிழந்த இந்தியர்களில் 7 பேர் தேவேகவுடாவுக்கு நெருக்கமான அவரது கட்சியின் நிர்வாகிகள் 7 பேர் தேர்தல் பணிகளுக்கு பின் ஓய்வுக்கு சென்றபோது பலியாகியுள்ளனர். 
மேலும் இந்த குண்டுவெடிப்பில் படுகாயங்களுடன் 500க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளனர். இதில் 4 பேர் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கும் முனைந்துள்ளனர். மத தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்கள் என்று அறிவித்த இலங்கை அரசு இதுவரை 38 பேரை கைது செய்துள்ளது. ஊடரங்கு அவசர சட்டத்தை பிறப்பித்து இந்த சம்பவங்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஜித் மலால்கோடா தலைமையில் முன்னாள் போலீஸ் ஐ.ஜி. என்.கே.இலங்கக்கூன், சட்டம்-ஒழுங்கு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பத்மஸ்ரீ ஜெயமன்னே ஆகியோரை கொண்ட சிறப்பு குழுவை  அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அமைத்துள்ளார். 
இந்த விசாரணைக்குழுவின் அறிக்கையை இரண்டு வாரங்களில் அரசிடம் அளிக்கவேண்டுமென்று அதிபர் உத்தரவிட்டுள்ளார். இன்டர்போல் அதிகாரிகளும் இலங்கை அரசு துக்க நாளாக அறிவித்துள்ளது. 

இப்படி கொடிய நிகழ்வுகளை அதுவும் மதப் புனித நாளில் நடந்தது மேலும் ரணப்படுத்துகிறது. அதிபர் மைத்திரி சிறிசேனா சிங்கப்பூருக்கும், திருவேங்கடத்தானே தரிசிக்க திருப்பதிக்கு வந்துவிட்டார். இதுகுறித்து ஒரு அறிக்கையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் தமிழர் மட்டுமல்லாமல் அங்குள்ள மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில் ஒரு நாடு இருக்கின்றது என்பதை உலக சமுதாயம் உணர்ந்து அங்குள்ள மக்கள் குறிப்பாக தமிழர்கள் அமைதியாக வாழ உரிய முனைப்போடு நாம் செயல்பட வேண்டிய கட்டம் இது ஆகும்.
இதேபோலவே, ஒரு கிறிஸ்தவ புனிதநன்னாளில் இலங்கை இதே மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் சூடப்பட்ட துன்பியல் நிகழ்வு நடந்தது இன்றும் தொடர்கின்றது. கிறித்துமஸ் நாளன்று டிசம்பர் 24, 2005 அன்று 12:15 மணியளவில் மட்டக்களப்பு புனித மேரி தேவாலயத்தில் வைத்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சிலர் தவறான தகவல்களையும் வழங்குவது வேதனையான விஷயம் இலங்கையில் யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகள் முடிந்த நேரத்தில் இந்த துயர சம்பவம் வேதனையை தருகிறது. இத்தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை இலங்கை அரசு அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரான்சு தலைநகர் பாரிஸிலும் மிகவும் புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயம் தீக்கிரையானது. இந்த தாக்குதல் எதற்கு என்றும் தெரியவில்லை. இந்த சூழல் அபாயகரமாது என்பதை இந்தியா உணர வேண்டும். வங்கக் கடலோரம் பாதுகாப்பையும் அதிகரிக்க வேண்டும்.
மற்றொரு சூழுலில்; கச்சா எண்ணெய் வளம், வங்கக் கடலிலும், இந்தியப் பெருங்கடலிலும், மண்ணார் வளைகுடாவிலும், பாக் ஜலசந்தியிலும் இருப்பதையறிந்து அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சீனா போன்ற நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு இந்திய எல்லை வரை சோதனைகளும் நடக்கின்றன. இலங்கையில் யாழ் முதல் திரிகோணமலை வழியாக மட்டக்களப்பு கிழக்குக் கடலில் எண்ணெய் ஆய்வு செய்ய இலங்கை உரிமம் வழங்கியிருக்கிறது. இலங்கையின் எண்ணெய் வளத்தை ஆய்வு செய்ய சீனா கப்பல் நிறுவனத்திற்கும் ஒப்புதல் தந்துள்ளது.
அங்கு அமைந்துள்ள 13 எண்னெய் கிணறுகளுக்கு கூட காவிரி பேசின், மண்ணார் பேசின் என தமிழ்ப் பெயர்களே இலங்கையின் சர்வதேச ஒப்பந்தத்தில் உள்ளது.

இலங்கையின் தெற்கு கடற்கரையோரம் குறிப்பாக அம்பன்தோட்டா துறைமுகத்தை நீண்டகால (99 ஆண்டுகள்) குத்தகைக்கு எடுத்து தனது பட்டுவழிப் பாதையை விரிவுப்படுத்தி வருகிறது.  இந்த வர்த்தகப் பாதையை பயன்படுத்தி இந்தியப் பெருங்கடலில் தன் ஆதிக்கத்தை நித்தமும் நிலைநாட்ட முயன்று வருகிறது.  இது தென்கிழக்கு ஆசியாவின் புவியரசியலுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவின் நேரடி பாதுகாப்புக்கும் எதிர்காலத்தில் அச்சுறுத்தல் ஏற்படலாம். எண்ணெய் வளம் அதிகமாக உள்ள இந்த கடற்பகுதிகளை அபகரிக்க இந்த நாடுகளுக்குள்ளேயே போட்டிகள் உள்ளன. இந்தியாவிடம் கலந்தாலோசிக்காமலேயே இலங்கை, இந்தியப் பெருங்கடலிலும், வங்கக்கடலிலும் தன்னுடைய ஆதிக்க தூரத்தை அதிகரிக்க வேண்டுமென்று மனு அளித்து அது நிலுவையில் உள்ளது. திரிகோணமலை துறைமுகத்தை கைப்பற்ற இந்த நாடுகள் மறைமுகமாக திட்டமிட்டுக் கொண்டிருக்கிகிறது. எனவே நமக்கு போர் அபாயம் எதிர்காலத்தில் வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், சீனா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் கப்பல் படை கூட்டுப் பயிற்சியும் நடைபெறுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஸ் ஈ முகமது இயக்கத்தின் மசூர் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக இந்தியாவின் கடும் முயற்சியால் ஐ.நா. அறிவித்துள்ளது. ஆனால் சீனா இதற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுவது ஏன் என்பது குறித்தும், இதனால் சீனாவிற்கான ஆதாயம் ஏது என்பது குறித்தும் நாம் கவனித்தாக வேண்டும்.
இதிலும் அவர்களிடையே போட்டிகள் கடுமையாக உள்ளன. ஜே.எஸ்.5, ஜே.எஸ்.6 என்று திரிகோணமலை பகுதியில் எண்ணெய் வளத்தை ஆக்கிரமிக்க நினைக்கும் அந்நியர்களின் வன்மம் எதிர்காலத்தில் எப்படி இருக்குமோ என்பது பெரிய வினாவாகும். 
இதேபோல, பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்பட்ட போதைப் பொருட்களை விற்ற பணத்தில் கூட இந்த தீவிரவாத செயல் நடந்திருக்கலாம் என்றும் சிலர் கருத்து சொல்கின்றனர். சீனா, பாகிஸ்தான் போன்ற அந்நிய நாடுகளும் இதன் பின்னணியில் இருக்கிறதா என்பதையும் அறியப்பட வேண்டும்.
ஏற்கனவே இந்தியப் பெருங்கடலில் டீகோகார்சியாவில் அமெரிக்கா, இங்கிலாந்து, அதனருகே உள்ள மற்றொரு தீவில் பிரான்ஸ் போன்ற உலக நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய இராணுவ தளங்களை அமைக்க போட்டிபோட்டுக் கொண்டு வருகிறது. சீனாவோ இலங்கையை பகடைக்காயாக கொண்டு கச்சத்தீவு வரை நெருங்கிவிட்டது. 

மேலும் வடக்கு ,கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு கிழக்கில் உள்ள இஸ்லாமியர் விரும்பவில்லை.இலங்கை பிரச்னையை ஆராயும் பொழுது இந்த விடயத்தையும் கைகொள்ள வேண்டும்

இப்படி இலங்கையின் உள்நாட்டிலும் கலவரங்கள், குழப்பங்கள், மனித உயிர்கள் பலிகொள்ளும் கொடூரத் தாக்குதல்கள், மற்றொருபுறம் ஆதிக்க அந்நிய நாடுகளின் அத்துமீறிய அளவிலான கடல் அபகரிப்புகள் எல்லாம் வேதனை தருகிறது. இதனுடைய தாக்கம் எதிர்காலத்தில் இலங்கையை மட்டுமல்லாமல் இந்தியாவையும் பாதிக்காமல் கவனமாக பன்னாட்டு அரசியலில் காய்கள் நகர்த்த வேண்டிய பொறுப்புள்ளது.
ஈழத்தில் பிரச்சனைகள் இன்னும் தீரவில்லை. ஆனால் நாளுக்கு நாள் புதிய பிரச்சனைகள் அங்கே எழுந்துள்ளன. ஈழ இறுதிப் போர் 2009இல் முடிவுற்றபோது லட்சக்கணக்கில் தமிழர்கள் கொடுமையாக சாகடிக்கப்பட்ட துன்பியல் சம்பவத்தை இன்னும் மறக்கமுடியவில்லை. 
இறுதிப்போரில் தமிழர்கள் மீது ஏவப்பட்ட இனஅழிப்பு, மனித உரிமை மீறலுக்காக சர்வதேச, நம்பிக்கையான, சுதந்திரமான புலனாய்வும், விசாரணையும் இதுவரை நடத்தப்படவில்லை. இந்த நீண்டகால கோரிக்கையை ஐநா. மனித உரிமை ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. 
இலங்கையில் உள்ள தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற கோரிக்கையும் பாராமுகமாக இருக்கின்றது.
இறுதிப் போரில் கைதானவர்களை விடுதலை செய்யவும் இலங்கை அரசு எந்த முனைப்பும் சரியானபடி காட்டவில்லை. 
இறுதிப்போரில் காணாமல் போனவர்களை கண்டறியவேண்டி வைக்கப்பட்ட  கோரிக்கையிலும் இலங்கை செவிசாய்க்கவில்லை.

தமிழர்களின் பகுதிகளில் சிங்களவர்கள் அத்துமீறி குடியமர்ந்து விவசாய நிலங்களை அபகரித்திருப்பதை கவனித்து அந்த நிலங்கள் திரும்பவும் தமிழர்களுக்கு வழங்க துரிதமான நடவடிக்கையும் அங்கு இல்லை.
தமிழர் பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களை திரும்ப பெறவும் சிங்கள அரசுக்கு அக்கறையில்லை. இது  மேலும் அச்சத்தையும், பீதியையும் தமிழர்கள் மத்தியில் கிளப்பியுள்ளது.
ஈழத்தில் உள்ள விதவைகளுக்கு புனர்வாழ்விற்கான திட்டங்களும் நடைமுறைக்கு வரவில்லை. 
இன்றைக்கு விடுதலைப்புலிகள் இயங்கிக் கொண்டிருந்தால் இந்த பழியை அவர்கள் மீது சாற்றியிருப்பார்கள். இலங்கையில், துப்பாக்கி ஏந்திய எதிரிப் படைகள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்துவது போர்முறை அல்ல. ஆனால், எந்த ஆயுதமும் ஏந்தாத அப்பாவி பொதுமக்களை கொல்வதற்காகத் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

இப்படியான பிரச்சனைகளும் பல இருக்கிறது. தமிழர்களுக்கான பிரச்சனைகள் தீராத நிலையில் புதியதாக மதத் தீவிரவாதமும் புகுந்து மனித நேயத்தை சாகடிப்பது தான் கொடுமையிலும் கொடுமை என்ன செய்ய? வெளிநாட்டு பயங்கரவாதிகள் இந்த நாசவேலைக்காக தமிழகத்தை, கேரளத்தையும் பயன்படுத்தினார்களா என்பது குறித்தும் அறியப்பட வேண்டும். 
எரிவதென்பது இலங்கையின் சாபம் போலும் வேறென்ன சொல்ல.
விதியே, விதியே, தமிழ்சாதியே!

-செய்தித் தொடர்பாளர், திமுக,
இணையாசிரியர், கதைசொல்லி,
rkkurunji@gmail.com

#இலங்கைகுண்டுவெடிப்பு
#இந்தியபாதுகாப்பு
#விடுதலைப்புலிகள்
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02-05-2019

செடிகள் , மரங்கள் கண்ட காட்சிகள்.....

செடிகள் , மரங்கள் கண்ட காட்சிகள்.....
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
01-05-2019
Image may contain: plant, tree, outdoor and natureImage may contain: tree and outdoorImage may contain: plantImage may contain: plant, nature and outdoorImage may contain: tree, sky, plant, cloud, outdoor and natureImage may contain: outdoorImage may contain: plant, shoes and outdoorImage may contain: plant, nature and outdoorImage may contain: plant, flower, nature and outdoor

#மொழிப்போர்தியாகியும், #கோவில்பட்டி#திமுகஒன்றியசெயலாளராக 1995 வரை பொறுப்பில் இருந்த பா.முத்து அவர்களுக்கு இன்று 87 வயது.

#மொழிப்போர்தியாகியும்#கோவில்பட்டி#திமுகஒன்றியசெயலாளராக 1995 வரை பொறுப்பில் இருந்த பா.முத்து அவர்களுக்கு இன்று 87 வயது. தூத்துக்குடி மாவட்டத்தின் மூத்த கழக முன்னோடியும், பலமுறை போராட்டங்களுக்காக சிறை சென்றவருமான பா.முத்து, தேவிகுளம்- பீர்மேடு கேரளத்தில் இணைத்த பிரச்சினையிலும் சிறை சென்றவர்.
நான் 1989 சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டபோது ஒன்றிய செயலாளர் என்ற நிலையில் கோவில்பட்டியில் உள்ள கிராமங்களுக்கு வீடு வீடாக சென்று எனக்காக ஓட்டு சேகரித்தார். திமுக துவங்கப்பட்ட காலத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் 19-09-1949இல் திமுக கொடியை கோவில்பட்டியில் அறிமுகப்படுத்தினார். இன்றைக்கும் தெற்கு பஜார் ஜில் விலாஸ் சோடா பான உற்பத்தி நிலையத்தின் அருகில் தான் அந்த கொடியை தேக்கு மரத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் அன்று ஏற்றி வைத்தார்.
அதேபோல திருநெல்வேலி மாவட்ட முதல் மாநாட்டையும் தலைவர் கலைஞர் தனது தலைமையில் கோவில்பட்டியில் நடத்தினார். இன்றைக்கு நாராயணசாமி திரையரங்கம் இருக்கும் இடத்தில் முதல் மாநாடு அன்றைக்கு அண்ணா, கலைஞர், ஈ.வி.கே. சம்பத், நாவலர் போன்ற முக்கியத் தலைவர்களெல்லாம் அங்கே பங்கேற்றனர். இந்த மாநாட்டில் தொண்டர் படையில் இருந்தார் . அன்றைக்கு கே.வி.கே.சாமி, ஈ.வெ.வள்ளிமுத்து, அ.சு.சி.பொன்னுசாமி, கலைமணி காசியோடு 1940, 50களில் தன்னுடைய இளமை காலத்தில் பணியாற்றினார்.
Image may contain: 4 people, people standing
இன்றைய மாதிரி வசதிகள் இல்லா நேரத்தை கழகத் தலைவர்கள் கோவில்பட்டி நகருக்கு வந்தால் குளிப்பதற்கு மோட்டார் பம்புகள் இவர் அழைத்து செல்வது வடிக்கை.
அன்றைக்கு வ.உ.சி மேல்நிலைப் பள்ளி அருகில் குருஞ்சாக்குளம் கண்மாயில் தங்கப்பநாடார் கிணற்றில் குளிப்பது உண்டு .

ரயில் நிலையத்தில் வரவேற்று எதிரே உள்ள சந்திர விழாவில் தங்க வைத்து அவர்களை உபசரிப்பது இவருடைய பணியாக இருந்தது. அண்ணா, நாவலர், நாஞ்சிலார், மதியழகன் போன்றவர்கள் வந்தால் அவரோடு இருந்து கவனித்துக் கொள்வது இவருடைய பொறுப்புகளில் முக்கியமானதாக இருந்தது. 
மொழிப்போர் தியாகிகள் ஐந்து பேர் இந்த வட்டாரத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் பா முத்து, விளாத்திகுளம், பிள்ளையார்நத்தம மல்லையா தான் நம்மிடைய இன்றைக்கு வாழ்ந்து வருகின்றனர்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
01-05-2019

Wednesday, May 1, 2019

*கே.எல்.ராவ்: கங்கை-காவிரி கனவுத் திட்ட நாயகர்*


Image may contain: 1 person, glasses and close-up

*கே.எல்.ராவ்: கங்கை-காவிரி கனவுத் திட்ட நாயகர்*
---------------
ஓரு துறை சிறந்து விளங்கும் நிபுணர்களைத் தேடிப்பிடித்து அமைச்சகத்தில் சேர்த்துக்கொள்வது நேருவின் பாணி. அப்படி அவரால் அடையாளம் காணப்பட்டவர்தான், கே.எல்.ராவ். மின்சக்தி ஆணையத்தின் இயக்குநராக இருந்தவர். 1962 முதல் 1977 வரை விஜயவாடா தொகுதி காங்கிரஸ் உறுப்பினர்.

நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரின் அமைச்சரவையில் தொடர்ந்து பதவி வகித்தவர். 1902 ஜூலை 15-ல் கிருஷ்ணா மாவட்டத்தின் கன்கிபாடு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் கானூரி லட்சுமண் ராவ். 9 வயதில் தந்தையை இழந்தார்.
பள்ளிக்கூடத்தில் விளையாடும்போது அடிபட்டு ஒரு கண்ணில் பார்வையையும் இழந்தார். இருந்தும் வாழ்க்கையில் சாதித்தார். கிண்டியில் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் மாணவர் எனும் பெருமை இவருக்கு உண்டு. பிரிட்டனின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் 1939-ல் முனைவர் பட்டம் பெற்றார்..
பர்மாவிலும் பிரிட்டனிலும் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் உண்டு. 1961-ல் விஜயவாடாவிலிருந்து மக்கள வைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1963-ல் மத்திய பாசனம், மின்னுற்பத்தித் துறை அமைச்சரானார். அவருடைய பதவிக்காலத்தில் பல பாசன அணைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
உலகிலேயே மிகப் பெரியது என்று பாராட்டப்படும் நாகார்ஜுன் சாகர் அணை திட்டத்துக்கு மூலகர்த்தா அவர்தான். பொலாவரம் அணையின் கட்டுமானம் சரியில்லாததால் கிருஷ்ணா நதியின் உபரி நீரை அதற்குத் திருப்பக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார். பாசன அணைகளைப் பொறியாளர்கள் மட்டும் வடிவமைத்து கட்டக் கூடாது, வானிலை நிபுணர்கள், நீரியல் நிபுணர்கள் அனைவரும் சேர்ந்து வடிவமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காடுகள் அழிவதால் மழைப் பொழிவும் வெள்ளப் பெருக்கும் அதிகரிக்கும் என்பதைத் தன்னுடைய வாழ்நாளிலேயே கண்டு எச்சரித்தவர் அவர். 1972-ல் கங்கை - காவிரி இணைப்புத் திட்டத்தை முன்வைத்தார். அன்றைக்கிருந்த நிலையில் இதை நிறைவேற்ற ரூ.1,50,000 கோடி தேவை என்று மதிப்பிடப்பட்டது.
அசாம், மேற்கு வங்கம், பிஹாரில் ஏற்பட்ட வெள்ளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலவிய வறட்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் திட்டத்தை முன்வைத்தார். எனினும், பல்வேறு காரணங்களால் அது சாத்தியமாகவில்லை!
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-04-2019

வெறும் 26 ஓட்டில் வெற்றிபெற்ற திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்.




Image may contain: 1 person, smiling, glasses and close-up

*வெறும் 26 ஓட்டில் வெற்றிபெற்ற திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்.*
----------------------------------

பழைய தேர்தல் வரலாற்று செய்திகளை கவனித்து போது...
அன்றைக்கு திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதியில் சென்னையைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவேன், தூத்துக்குடி துறைமுகத்தை விரிவுப்படுத்துவேன் என்று வாக்குறுதியும் கொடுத்தார்.

Image may contain: 1 person, glasses and close-upகடந்த 1971இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் எம்.எஸ்.சிவசாமி வெறும் 26 ஓட்டுகள் அதிகமாக பெற்று திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்று மக்களவை உறுப்பினராக டெல்லி சென்றார். அவரை எதிர்த்து சுதந்திராகட்சியைச் சார்ந்த டாக்டர் மத்தியாஸ் 26 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவினார்.
என்ன தேர்தல் வினோதங்கள். அப்போது திருச்செந்தூர் தொகுதி சாத்தான்குளம், நாங்குநேரி, இராதாபுரம், குமரி முனை வரை உள்ள சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கியது. எனவே நாகர்கோவிலை சேர்ந்த மத்தியாஸ் இந்த தொகுதியில் அப்போது போட்டியிட்டார். தற்போதுள்ள தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் சிவகாசி நாடாளுமன்ற தொகுதியில் இருந்த கோவில்பட்டி, திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் இருந்த விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளோடு, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சேர்க்கப்பட்டு, சாத்தான்குளம் நீக்கப்பட்டு இன்றைய தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியாக கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-04-2019

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்!

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்! பார்க்க வேட...