Thursday, May 2, 2019

*இலங்கையின் ரணங்கள்....*

இன்றைய (02-05-2019) தினமணியில் *கருப்பு ஞாயிறு... பின்னணி என்ன...* என்ற தலைப்பில் இலங்கையின் துயர சம்பவம் குறித்து  பல்வேறு கோணத்தில் நான் வெளியிட்ட சந்தேகங்கள் பற்றிய எனது பத்தி வெளியாகியுள்ளது.
*******************************


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்த புனித நாளான “உயிர்த்த ஞாயிறு” ஈஸ்டர் பண்டிகையை இலங்கையில் கடந்த 21-04-2019 அன்று கொண்டாடினார்கள். அப்போது காலை, 9 மணியளவில் கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், நெகோம்போவில் உள்ள புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பில் இவாஞ்சலின் தேவலாலயம் ஆகிய 3 தேவாலயங்களிலும் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 253 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
மேலும், கொழும்புவில் உள்ள ஷங்ரி லா, சின்ன மோன் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய 3 நட்சத்திர விடுதிகளிலும் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கியிருக்கும் ஓட்டல்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நிகழ்த்திய இந்த தாக்குதல்களால் உலகமே அதிர்ச்சியடைந்தது.
இந்த ரண நிகழ்வை உலக நாடுகள் கண்டித்தன. அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாரீஸ் நகரின் ஈபிள் டவரில் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டு இருளில் மூழ்கடிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தினர். இதே மாதிரி, பாரீசிலில் கடந்த 2017இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இங்கிலாந்து மற்றும் ஈபிள் டவரில் இத்தகைய அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதுவரை இலங்கையில் நடந்த இந்த காட்டுமிராண்டி குண்டுவெடிப்புத் தாக்குதலால் 8 இடங்களில் 253  பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதில் இந்தியர்கள் 11 பேர் உட்பட 42 பேர் வெளிநாட்டினவர் என்று நம்பப்படுகிறது. அவர்களில் 12 பேரின் அடையாளங்கள் இன்னும் அறியப்படவில்லை. உயிரிழந்த இந்தியர்களில் 7 பேர் தேவேகவுடாவுக்கு நெருக்கமான அவரது கட்சியின் நிர்வாகிகள் 7 பேர் தேர்தல் பணிகளுக்கு பின் ஓய்வுக்கு சென்றபோது பலியாகியுள்ளனர். 
மேலும் இந்த குண்டுவெடிப்பில் படுகாயங்களுடன் 500க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளனர். இதில் 4 பேர் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கும் முனைந்துள்ளனர். மத தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்கள் என்று அறிவித்த இலங்கை அரசு இதுவரை 38 பேரை கைது செய்துள்ளது. ஊடரங்கு அவசர சட்டத்தை பிறப்பித்து இந்த சம்பவங்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஜித் மலால்கோடா தலைமையில் முன்னாள் போலீஸ் ஐ.ஜி. என்.கே.இலங்கக்கூன், சட்டம்-ஒழுங்கு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பத்மஸ்ரீ ஜெயமன்னே ஆகியோரை கொண்ட சிறப்பு குழுவை  அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அமைத்துள்ளார். 
இந்த விசாரணைக்குழுவின் அறிக்கையை இரண்டு வாரங்களில் அரசிடம் அளிக்கவேண்டுமென்று அதிபர் உத்தரவிட்டுள்ளார். இன்டர்போல் அதிகாரிகளும் இலங்கை அரசு துக்க நாளாக அறிவித்துள்ளது. 

இப்படி கொடிய நிகழ்வுகளை அதுவும் மதப் புனித நாளில் நடந்தது மேலும் ரணப்படுத்துகிறது. அதிபர் மைத்திரி சிறிசேனா சிங்கப்பூருக்கும், திருவேங்கடத்தானே தரிசிக்க திருப்பதிக்கு வந்துவிட்டார். இதுகுறித்து ஒரு அறிக்கையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் தமிழர் மட்டுமல்லாமல் அங்குள்ள மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில் ஒரு நாடு இருக்கின்றது என்பதை உலக சமுதாயம் உணர்ந்து அங்குள்ள மக்கள் குறிப்பாக தமிழர்கள் அமைதியாக வாழ உரிய முனைப்போடு நாம் செயல்பட வேண்டிய கட்டம் இது ஆகும்.
இதேபோலவே, ஒரு கிறிஸ்தவ புனிதநன்னாளில் இலங்கை இதே மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் சூடப்பட்ட துன்பியல் நிகழ்வு நடந்தது இன்றும் தொடர்கின்றது. கிறித்துமஸ் நாளன்று டிசம்பர் 24, 2005 அன்று 12:15 மணியளவில் மட்டக்களப்பு புனித மேரி தேவாலயத்தில் வைத்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சிலர் தவறான தகவல்களையும் வழங்குவது வேதனையான விஷயம் இலங்கையில் யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகள் முடிந்த நேரத்தில் இந்த துயர சம்பவம் வேதனையை தருகிறது. இத்தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை இலங்கை அரசு அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரான்சு தலைநகர் பாரிஸிலும் மிகவும் புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயம் தீக்கிரையானது. இந்த தாக்குதல் எதற்கு என்றும் தெரியவில்லை. இந்த சூழல் அபாயகரமாது என்பதை இந்தியா உணர வேண்டும். வங்கக் கடலோரம் பாதுகாப்பையும் அதிகரிக்க வேண்டும்.
மற்றொரு சூழுலில்; கச்சா எண்ணெய் வளம், வங்கக் கடலிலும், இந்தியப் பெருங்கடலிலும், மண்ணார் வளைகுடாவிலும், பாக் ஜலசந்தியிலும் இருப்பதையறிந்து அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சீனா போன்ற நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு இந்திய எல்லை வரை சோதனைகளும் நடக்கின்றன. இலங்கையில் யாழ் முதல் திரிகோணமலை வழியாக மட்டக்களப்பு கிழக்குக் கடலில் எண்ணெய் ஆய்வு செய்ய இலங்கை உரிமம் வழங்கியிருக்கிறது. இலங்கையின் எண்ணெய் வளத்தை ஆய்வு செய்ய சீனா கப்பல் நிறுவனத்திற்கும் ஒப்புதல் தந்துள்ளது.
அங்கு அமைந்துள்ள 13 எண்னெய் கிணறுகளுக்கு கூட காவிரி பேசின், மண்ணார் பேசின் என தமிழ்ப் பெயர்களே இலங்கையின் சர்வதேச ஒப்பந்தத்தில் உள்ளது.

இலங்கையின் தெற்கு கடற்கரையோரம் குறிப்பாக அம்பன்தோட்டா துறைமுகத்தை நீண்டகால (99 ஆண்டுகள்) குத்தகைக்கு எடுத்து தனது பட்டுவழிப் பாதையை விரிவுப்படுத்தி வருகிறது.  இந்த வர்த்தகப் பாதையை பயன்படுத்தி இந்தியப் பெருங்கடலில் தன் ஆதிக்கத்தை நித்தமும் நிலைநாட்ட முயன்று வருகிறது.  இது தென்கிழக்கு ஆசியாவின் புவியரசியலுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவின் நேரடி பாதுகாப்புக்கும் எதிர்காலத்தில் அச்சுறுத்தல் ஏற்படலாம். எண்ணெய் வளம் அதிகமாக உள்ள இந்த கடற்பகுதிகளை அபகரிக்க இந்த நாடுகளுக்குள்ளேயே போட்டிகள் உள்ளன. இந்தியாவிடம் கலந்தாலோசிக்காமலேயே இலங்கை, இந்தியப் பெருங்கடலிலும், வங்கக்கடலிலும் தன்னுடைய ஆதிக்க தூரத்தை அதிகரிக்க வேண்டுமென்று மனு அளித்து அது நிலுவையில் உள்ளது. திரிகோணமலை துறைமுகத்தை கைப்பற்ற இந்த நாடுகள் மறைமுகமாக திட்டமிட்டுக் கொண்டிருக்கிகிறது. எனவே நமக்கு போர் அபாயம் எதிர்காலத்தில் வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், சீனா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் கப்பல் படை கூட்டுப் பயிற்சியும் நடைபெறுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஸ் ஈ முகமது இயக்கத்தின் மசூர் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக இந்தியாவின் கடும் முயற்சியால் ஐ.நா. அறிவித்துள்ளது. ஆனால் சீனா இதற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுவது ஏன் என்பது குறித்தும், இதனால் சீனாவிற்கான ஆதாயம் ஏது என்பது குறித்தும் நாம் கவனித்தாக வேண்டும்.
இதிலும் அவர்களிடையே போட்டிகள் கடுமையாக உள்ளன. ஜே.எஸ்.5, ஜே.எஸ்.6 என்று திரிகோணமலை பகுதியில் எண்ணெய் வளத்தை ஆக்கிரமிக்க நினைக்கும் அந்நியர்களின் வன்மம் எதிர்காலத்தில் எப்படி இருக்குமோ என்பது பெரிய வினாவாகும். 
இதேபோல, பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்பட்ட போதைப் பொருட்களை விற்ற பணத்தில் கூட இந்த தீவிரவாத செயல் நடந்திருக்கலாம் என்றும் சிலர் கருத்து சொல்கின்றனர். சீனா, பாகிஸ்தான் போன்ற அந்நிய நாடுகளும் இதன் பின்னணியில் இருக்கிறதா என்பதையும் அறியப்பட வேண்டும்.
ஏற்கனவே இந்தியப் பெருங்கடலில் டீகோகார்சியாவில் அமெரிக்கா, இங்கிலாந்து, அதனருகே உள்ள மற்றொரு தீவில் பிரான்ஸ் போன்ற உலக நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய இராணுவ தளங்களை அமைக்க போட்டிபோட்டுக் கொண்டு வருகிறது. சீனாவோ இலங்கையை பகடைக்காயாக கொண்டு கச்சத்தீவு வரை நெருங்கிவிட்டது. 

மேலும் வடக்கு ,கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு கிழக்கில் உள்ள இஸ்லாமியர் விரும்பவில்லை.இலங்கை பிரச்னையை ஆராயும் பொழுது இந்த விடயத்தையும் கைகொள்ள வேண்டும்

இப்படி இலங்கையின் உள்நாட்டிலும் கலவரங்கள், குழப்பங்கள், மனித உயிர்கள் பலிகொள்ளும் கொடூரத் தாக்குதல்கள், மற்றொருபுறம் ஆதிக்க அந்நிய நாடுகளின் அத்துமீறிய அளவிலான கடல் அபகரிப்புகள் எல்லாம் வேதனை தருகிறது. இதனுடைய தாக்கம் எதிர்காலத்தில் இலங்கையை மட்டுமல்லாமல் இந்தியாவையும் பாதிக்காமல் கவனமாக பன்னாட்டு அரசியலில் காய்கள் நகர்த்த வேண்டிய பொறுப்புள்ளது.
ஈழத்தில் பிரச்சனைகள் இன்னும் தீரவில்லை. ஆனால் நாளுக்கு நாள் புதிய பிரச்சனைகள் அங்கே எழுந்துள்ளன. ஈழ இறுதிப் போர் 2009இல் முடிவுற்றபோது லட்சக்கணக்கில் தமிழர்கள் கொடுமையாக சாகடிக்கப்பட்ட துன்பியல் சம்பவத்தை இன்னும் மறக்கமுடியவில்லை. 
இறுதிப்போரில் தமிழர்கள் மீது ஏவப்பட்ட இனஅழிப்பு, மனித உரிமை மீறலுக்காக சர்வதேச, நம்பிக்கையான, சுதந்திரமான புலனாய்வும், விசாரணையும் இதுவரை நடத்தப்படவில்லை. இந்த நீண்டகால கோரிக்கையை ஐநா. மனித உரிமை ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. 
இலங்கையில் உள்ள தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற கோரிக்கையும் பாராமுகமாக இருக்கின்றது.
இறுதிப் போரில் கைதானவர்களை விடுதலை செய்யவும் இலங்கை அரசு எந்த முனைப்பும் சரியானபடி காட்டவில்லை. 
இறுதிப்போரில் காணாமல் போனவர்களை கண்டறியவேண்டி வைக்கப்பட்ட  கோரிக்கையிலும் இலங்கை செவிசாய்க்கவில்லை.

தமிழர்களின் பகுதிகளில் சிங்களவர்கள் அத்துமீறி குடியமர்ந்து விவசாய நிலங்களை அபகரித்திருப்பதை கவனித்து அந்த நிலங்கள் திரும்பவும் தமிழர்களுக்கு வழங்க துரிதமான நடவடிக்கையும் அங்கு இல்லை.
தமிழர் பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களை திரும்ப பெறவும் சிங்கள அரசுக்கு அக்கறையில்லை. இது  மேலும் அச்சத்தையும், பீதியையும் தமிழர்கள் மத்தியில் கிளப்பியுள்ளது.
ஈழத்தில் உள்ள விதவைகளுக்கு புனர்வாழ்விற்கான திட்டங்களும் நடைமுறைக்கு வரவில்லை. 
இன்றைக்கு விடுதலைப்புலிகள் இயங்கிக் கொண்டிருந்தால் இந்த பழியை அவர்கள் மீது சாற்றியிருப்பார்கள். இலங்கையில், துப்பாக்கி ஏந்திய எதிரிப் படைகள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்துவது போர்முறை அல்ல. ஆனால், எந்த ஆயுதமும் ஏந்தாத அப்பாவி பொதுமக்களை கொல்வதற்காகத் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

இப்படியான பிரச்சனைகளும் பல இருக்கிறது. தமிழர்களுக்கான பிரச்சனைகள் தீராத நிலையில் புதியதாக மதத் தீவிரவாதமும் புகுந்து மனித நேயத்தை சாகடிப்பது தான் கொடுமையிலும் கொடுமை என்ன செய்ய? வெளிநாட்டு பயங்கரவாதிகள் இந்த நாசவேலைக்காக தமிழகத்தை, கேரளத்தையும் பயன்படுத்தினார்களா என்பது குறித்தும் அறியப்பட வேண்டும். 
எரிவதென்பது இலங்கையின் சாபம் போலும் வேறென்ன சொல்ல.
விதியே, விதியே, தமிழ்சாதியே!

-செய்தித் தொடர்பாளர், திமுக,
இணையாசிரியர், கதைசொல்லி,
rkkurunji@gmail.com

#இலங்கைகுண்டுவெடிப்பு
#இந்தியபாதுகாப்பு
#விடுதலைப்புலிகள்
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02-05-2019

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...