Monday, May 27, 2019

#தண்ணீர்ப்பற்றாக்குறையும் #யதார்த்தநிலையும்! என்ற எனது பதிவு மின்னம்பலம் இணைய இதழில் இன்று (26-5-2019)வெளியாகியுள்ளது.

என்ற எனது பதிவு மின்னம்பலம் இணைய இதழில் இன்று (26-5-2019)வெளியாகியுள்ளது.

தண்ணீர்ப் பற்றாக்குறையும் யதார்த்த நிலையும்!
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
கோடை வெயில் அதிகரித்துவிட்டது. தண்ணீருக்காகக் காலிக் குடங்களுடன் தொலைதூரத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது. நிலத்தடி நீரும் குறைந்து போர்வெல்லும் கிணறுகளும் வற்றிவிட்டன. பருவமழை பொய்த்துவிட்டது. காவிரியிலும் தாமிரபரணியிலும் தண்ணீர் இல்லாத காரணத்தினால் குடிநீர்த் திட்டங்களும் சரிவர இயங்கவில்லை. பெரிய நீர்நிலைகள் குடியேற்றப் பகுதிகளின் ஆக்கிரமிப்பால் அழிந்துவிட்டன. மத்திய நிலத்தடி நீர்வாரியம் 2018இல் வெளியிட்ட அறிக்கையின்படி நிலத்தடி நீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குடிநீர் நம்மை அச்சறுத்தும் விதமாக மாறிவிட்டது. குறிப்பாகப் பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி மாவட்டங்களில் நிலத்தடி நீர் மிகவும் குறைந்துவிட்டது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரைப் போலத் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டு வரிசையில் நின்று தண்ணீரை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோமோ என்ற பயம் எழுகிறது.
தண்ணீர்ப் பற்றாக்குறையும் யதார்த்த நிலையும்!
உரிமையும் கடமையும்
தண்ணீர் அடிப்படைத் தேவை. தண்ணீர் கிடைக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனுடைய உரிமை. தண்ணீர் விஷயத்தில் நம் ஒவ்வொருவருக்கும் உரிமை மட்டுமல்ல, கடமையும் இருக்கிறது. தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியது நம் கடமை. ஆனால், நாம் பல் துலக்கும்போதோ, முகச்சவரம் செய்யும்போதோ தண்ணீரை வீணடிக்கிறோம். ஒரு நாளைக்கு இப்படியாக 86,500 துளிகள் வீணாகின்றன. இதன் விளைவு என்னவாகும் என்று யோசித்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஆகிய ஏரிகள் வற்றிவிட்டன. இந்த நான்கு ஏரிகளின் மொத்தக் கொள்ளளவு 11,257 மில்லியன் கனஅடி. இன்றைக்கு இங்கெல்லாம் ஒட்டுமொத்தமாக மிகவும் குறைவான தண்ணீரே உள்ளது.
சென்னைக்கு நீர் வழங்கும் முக்கிய ஏரியான செம்பரம்பாக்கத்தில் 6 மில்லியன் கனஅடி நீர்தான் உள்ளது. இந்த இரண்டு ஏரிகளிலும் தற்போது குடிநீர் எடுக்கப்படுவதில்லை. பூண்டி, புழல் ஆகிய இரண்டு ஏரிகளிலும் 162க்கும் மேற்பட்ட மில்லியன் கனஅடி நீர் இருப்பதாகச் செய்தி. சென்னைக்கு ஒரு நாளைக்கு 550 மில்லியன் லிட்டர் தேவை.
தமிழகத்தின் உள்பகுதியில் 848 முதல் 946 மிமீ மழை பெய்கிறது. கடற்கரை, மலைப்பகுதிகளில் 1,666 மிமீ மழை பொழிகிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவ மழை, அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவ மழை வளம் சேர்க்கிறது. இதில் வடகிழக்குப் பருவ மழையில் 46 சதவிகிதம் கிடைக்கிறது. கோடை மழையால் 14 சதவிகிதம் வருகிறது. குளிர்காலத்தில் பெய்யும் மழையால் 5 சதவிகிதம் தண்ணீர் சேருகிறது. நிலத்தடி நீரையும் சேர்த்துத் தமிழகத்தின் நீர் இருப்பு 1,643 டிஎம்சி ஆகும். நிலத்தின் மேற்பரப்புத் தண்ணீர் வரத்து 853 டிஎம்சி. இதில் 261 டிஎம்சியை அண்டை மாநிலத்திலிருந்து பெறுகிறோம். நமக்கு வர வேண்டிய இந்தத் தண்ணீர் பல சமயங்களில் கிடைப்பதில்லை.
ஏரிகளின் அவல நிலை
தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஆயிரக்கணக்கான ஏரிகள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. தற்போது 39,292 ஏரிகள் மட்டுமே உள்ளன. சென்னையில் 1964ஆம் ஆண்டு நிலவரப்படி 474 நீர்நிலைகள் இருந்தன. இன்றைக்கு அது 43ஆகக் குறைந்துள்ளது. இதிலும் பல நீர்நிலைகள் காணாமல் போய்விட்டன. இந்த நீர்நிலைகள் குடியிருப்புகளாக மாறிவிட்டன. சென்னையைச் சுற்றி மீதமுள்ளவை போரூர், செம்பரம்பாக்கம், வேளச்சேரி, ஆலந்தூர், பள்ளிக்கரணை ஆகியவை மட்டுமே. போரூர் ஏரி 800 ஏக்கராக இருந்தது. தற்போது 330ஆகச் சுருங்கிவிட்டது. முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, வேளச்சேரி ஆகிய பகுதிகளின் நீர்நிலைகள் வேறு வகைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி பகுதிகளில் சாக்கடைக் கழிவு நீர் கலந்து நாசமாகிவிட்டது. மதுரை, கோவை போன்ற நகரங்களிலும் இதே நிலைதான்.
சென்னையில் இல்லாமல் போன ஏரிகளும் நீர்நிலைகளும் வருமாறு:
நுங்கம்பாக்கம் ஏரி
தேனாம்பேட்டை ஏரி
வியாசர்பாடி ஏரி
முகப்பேர் ஏரி
திருவேற்காடு ஏரி
ஓட்டேரி
மேடவாக்கம் ஏரி
பள்ளிக்கரணை ஏரி
போரூர் ஏரி (பாதி)
அம்பத்தூர் எரி
ஆவடி ஏரி
கொளத்தூர் ஏரி
ரெட்டேரி
வேளச்சேரி
பெரும்பாக்கம் ஏரி
பெருங்களத்தூர் ஏரி
கல்லு குட்டை ஏரி
வில்லிவாக்கம் ஏரி
பாடியநல்லூர் ஏரி
வேம்பாக்கம் ஏரி
பிச்சாட்டூர் ஏரி
திருநின்றவூர் ஏரி
பாக்கம் ஏரி
விச்சூர் ஏரி
முடிச்சூர் எரி
சேத்துப்பட்டு ஏரி
செம்பாக்கம் ஏரி
சிட்லபாக்கம் ஏரி
மாம்பலம் ஏரி
கோடம்பாக்கம் டேங்க் ஏரி
சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தின் அருகே இருந்த இரண்டு குளங்கள்
ஆலப்பாக்கம் ஏரி
வேப்பேரி
விருகம்பாக்கம் ஏரி
கோயம்பேடு சுழல் ஏரி
அல்லிக்குளம் ஏரி
இப்படிச் சென்னை நகரத்தில் உள்ள ஏரிகள் கிட்டத்தட்ட மறைந்தேவிட்டன. இந்த நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் என் போன்றவர்கள் வழக்குகளும் தொடுத்துள்ளோம். நீரின்றி அமையாது உலகம் என்று வள்ளுவர் பேராசான் சொல்கிறார். அப்படிப்பட்ட திரவத் தங்கத்தைப் பாதுகாக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
இந்த நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும். வனம், ஆறு, ஏரிகள், தருவை குளம் என அனைத்து நீர்நிலைகளும் அந்த அமைச்சகத்தின் கீழ் வர வேண்டும். நீரைப் பன்னாட்டு நிறுவனங்களோடு பங்கீடு செய்துகொண்டாலும் ஆயக்காட்டு, மராமத்து செய்ய வேண்டும். நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். குளங்கள், கண்மாய்கள், வரத்துக்கால், களிஞ்சல்கள் ஆகியவை முழுமையாகப் பராமரிக்கப்பட வேண்டும். குளங்கள், கண்மாய்களின் நீர்வள அமைப்புகளைப் பழுது பார்த்து நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும்.
சென்னை, மதுரை, சேலம், நெல்லை போன்ற பெருநகரங்களில் நீர்நிலைகள் மூடப்பட்டதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு மாற்று வழிகளை உருவாக்க வேண்டும். சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் குப்பைக் கொட்டும் பகுதிகளாகப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நீர்நிலைகளைப் பராமரிப்பது குறித்தும், நீர்நிலைகள் குறித்த புகார்களை விசாரித்து நியாயம் வழங்கவும் சுய அதிகாரம் படைத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு ஒன்ற அமைக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் செய்தால்தான் நாம் ஓரளவாவது தப்பிக்க முடியும். இல்லையேல் பெரும் நெருக்கடிக்குள் மிக விரைவில் சிக்கிக்கொள்வோம்.

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...