Wednesday, April 1, 2015

உடன்குடி அனல்மின் நிலையம் கேள்விக்குறியா? - Udangudi Power Project...?



தி.மு.க ஆட்சியில் திட்டமிடப்பட்ட, உடன்குடி அனல்மின் நிலையம் பல தடங்கள்களுக்கிடையே 2017ல் முடிக்கவேண்டிய திட்டம். ஆனால் இப்போது இத்திட்டம் கேள்விக்குறியாகி விட்டது. தமிழகம் மின் பற்றாக்குறையால் சிக்கித்தவிக்கும் வேளையில் மின் உற்பத்திக்கு அனல்மின் நிலையங்கள் மற்றும் மரபுசாரா எரிசக்திகள் தேவை.

கூடன்குளத்தில், மக்கள் போராடியும் சுற்றுச் சூழல் பிரச்சனைகளை மனதில் கொள்ளாமல், மூன்று நான்கு அணு உலைகளை அமைக்கும் திட்டங்களை உருவாக்க முயன்று வருகின்ற நேரத்தில், அதன் அருகாமையில் அமையவேண்டிய உடன்குடி அனல் மின் நிலையத் திட்டத்தின் டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு, திரும்பவும் பணிகள் தள்ளிப் போகும் சூழ்நிலையினை உருவாக்கிவிட்டனர்.

இந்தத் தாமதத்தினால் தற்போதைய செலவு 10.121கோடியாக திட்டமிடப்பட்டது எதிர்காலத்தில் ஏறத்தாழ 15ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக கணக்கீடு சொல்கிறது. உடன்குடி அனல்மின் நிலையம் மூலம் 1320மெகா.வாட் மின்சக்தி கிடைக்க வாய்ப்புள்ளது.

மின் வாரியம் 42மாதங்களில் இத்திட்டத்தினை முடிக்க இலக்குகளை திட்டமிட்டும், ஒப்பந்த நிறுவனத்தின் தவறான போக்கும், அரசியல் குறுக்கீடுகளும் தான் தற்போதைய தாமதத்திற்கு காரணம்.

தாமதம் பற்றி மின்வாரிய அதிகாரிகள் சொல்கின்ற கருத்தும் தெளிவாக இல்லை. உடன்குடி அனல்மின் நிலைய டெண்டர் ரத்து செய்யப்பட்டது என்ற அறிவிப்புதான் வெளியிடப்பட்டுள்ளதே ஒழிய அதற்கான காரணகாரியங்கள் தெரியவிக்கப்படல்லை.

திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள, 200 ஏக்கர் புறம்போக்கு நிலம் உடன்குடி அனல்மின் திட்டத்திற்காக வழங்கப்பட்டு வருடக்கணக்கில் ஆகிறது. இந்தப்பணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலே கோரப்பட்டது. சீனாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களும் மற்றும் பெல் நிறுவனமும் இந்த டெண்டரில் பங்கேற்றன.

இறுதியில் பெல் நிறுவனத்துக்கும் சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கும் கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி டெண்டர் தரப்பட்டது. தொடர்ந்து பணிகளை முடிக்காமல் இழுத்தடிக்கும் வேலைகளினால், வெளிப்படையாக உடன்குடி அனல்மின் திட்டத்தின் நிலை என்ன என்பதைக் கூட அறிந்துகொள்ளமுடியாத சூழல் உருவாகி இருக்கின்றது.

மின் தட்டுப்பாடு, மின் உற்பத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் சுணக்கங்களும், கமுக்கங்களும் மக்களுக்குத்தான் அவதி.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

‪#‎Udangudi_Power_Project‬

No comments:

Post a Comment