Saturday, August 13, 2016

ஹிப்பி கலாசாரம்

ஒரு காலத்திலிருந்து 1960 - 70 வரை ஹிப்பி கலாச்சாரங்களும் நடை உடைகளும், ஜோல்னா பைகளும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பட்டிக்காடா பட்டணமா என்ற திரைப்படத்தில் கூட சிவாஜி, #ஹிப்பி வேடத்தில் வருவதுண்டு. பல திரைப்படங்களில் பல நாயகர்கள் இது போன்று ஹிப்பி வேடம் பூண்டு வருவதுண்டு. அது காலப்போக்கில் மறைந்துவிட்டது. அது குறித்தான பதிவை இங்கே  Patanjli  Sankaar மூலமாக பதிவிடுகின்றேன்.  

ஹிப்பி கலாசாரம்.....
====================
.
அறுபதுகளின் காலக்கட்டம். அமெரிக்க ஊடகங்கள் அறுபதுகள்(1960s) என்பதை 1963ல் இருந்து 1973வரையிலான காலகட்டத்தயே குறிப்பிடவதாக கூறுகின்றன. வியட்னாம் யுத்தம் குறித்த அதிருப்தி, எதிர்க்கலாச்சார அலைகள் போன்றவை அங்கு மேலோங்கி இருந்த காலக்கட்டம். 1950களின் முடிவில் அடுத்தடுத்து வெளிவந்த ‘பீட் எழுத்தாளர்களின்' புத்தகங்கள்(கின்ஸ்பர்கின் ‘Howl', வில்லியம் பரோஸின் ‘Naked Lunch', ஜாக் கெரோஆக்கின் ‘On the Road' போன்றவை) அறுபதுகளில் அமெரிக்காவில் பெரும் பாதிப்பை செலுத்தி வந்தன. ஹிப்பி(Hippie) அலை மேலோங்கி இருந்ததும் அக்காலகட்டத்திலேயே. கட்டற்ற சுதந்திரம், இயற்கையோடு ஒன்றியிருத்தல், எவ்வித வன்முறைக்கும் எதிராக குரல் கொடுத்தல், எவ்வித இலட்சியவாதத்தோடும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் இருத்தல் போன்றவையே ஹிப்பி அலையின் சாரமாக இருந்தது. 'Make love, Not war' என்பது இவர்கள் பிரபலப்படுத்திய ஒரு சொற்றொடர். ஒருவகையில் கிழக்கத்திய நுண் இறைவாதம் (Eastern Mysticism), ஸென் பௌத்தம் போன்றவைகளை அமெரிக்காவில் பிரபலப்படுத்தியதும் இவர்களே.

அன்று பல அமெரிக்க இளைஞர்களை ஆட்கொண்ட பெரும்கனவு அது. பல்கலைக்கழகங்களில் இருந்து அலைஅலையாக ஒரு முதுகுப்பையை மட்டும் மாட்டிக் கொண்டு ஓரு இடத்தில் இருந்து மற்றொரு இடமாக அலைந்தார்கள். மெஸ்கலைனும், எல்எஸ்டியும் உட்கொண்டு மராக்கேஷ் எக்ஸ்பிரஸைப்(Marrakesh Express) பிடித்து மொரோக்கோவிற்க்கு சிலர் போனார்கள். கித்தாரில் பாப் திலானயும்(Bob Dylan), பீடில்ஸையும்(The Beatles), டோர்ஸையும்(The Doors) வாசித்துக் கொண்டு சிலர் கோவாவில் உள்ள ஆரம்போலுக்கும், அஞ்ஜுனாவுக்கும் சென்றார்கள்.

அறுபதுகளின் மத்தியில் உச்சத்தில் இருந்த ஹிப்பி அலை பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேய்வுர ஆரம்பித்தது. பலர் அதிருப்தியோடு அமெரிக்காவிற்கே திரும்பி வர ஆரம்பித்தார்கள்.

இதன் உச்சமாக ஒரு நிகழ்வு டிசம்பர் மாதம் 1969ஆம் ஆண்டு நடந்தது. ‘வுட்ஸ்டாக் திருவிழா' (Woodstock Festival) என்பது வருடந்தோரும் நியூயார்க்கில் உள்ள பெத்தல்(Bethel) என்னும் இடத்தில் நடக்கும் ஒரு மாபெரும் இசைத் திருவிழா. ஒரு முக்கியமான எதிர்க்கலாச்சார நிகழ்வு அது. ஹிப்பிக்களுக்கு ஒரு மெக்கா போல். நான்கைந்து லட்சத்திற்கு மேல் பார்வையாளர்கள் கூட்டம். பல பிரபல ராக் இசைப் பாடகர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் கூடும் திருவிழா. ஹிப்பிக்களின் 'கட்டற்ற சுதந்திரம்', ‘மனவிரிவு' , ‘உலக அமைதி', 'மானுடம் நோக்கி விரியும் அன்பு' போன்றவற்றுக்கு ஒரு வெளிவடிவம் போல அமைவது அந்த விழாவே. நியூயார்க்கில் நடந்த அந்த விழா மாபெரும் வெற்றியடைய அதே போல் ஒரு விழாவை கலிபோர்னியாவில் உள்ள அல்டாமோண்ட்டில்(Altamont) நடத்த முடிவு செய்தார்கள். 'வுட்ஸ்டாக் வெஸ்ட்' (Woodstock West) என்றும் அல்டாமோண்ட் பிரீ கான்ஸெர்ட் (The Altamont Free Concert) என்றும் அது அழைக்கப்பட்டது. மூன்று லட்சத்திற்க்கும் மேல் பார்வையாளர்கள் குழுமியிருந்தார்கள். மேடையில் ரோலிங் ஸ்டோன்ஸ்(Rolling Stones) பாடிக்கொண்டிருந்த வேளையில் மெரிடித் ஹண்டர் (Meredith Hunter) என்ற ஒரு பார்வையாளர் குத்திக் கொல்லப்பட்டார். கொன்றது ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ் (Hell's Angels) என்ற ஹிப்பியுகத்தில் போற்றப்பட்ட ஒரு குழுவின் உறுப்பினர். மெரிடித் ஹண்டர் போதை மருந்தின் தாக்கத்தால் தன் சட்டைப்பையில் இருந்த துப்பாக்கியை எடுத்ததால் தான் அந்த ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ் உறுப்பினரால் தற்காப்பிற்காக கொல்லப்பட்டார் என்று தெரியவந்தது.

இதை போலேவே தொடர்ந்து சில கொலைகள். வன்முறைகள். இது ஹிப்பிகளின் நடுவே பெரும் அதிர்வை உண்டு பண்ணியது. சுதந்திரம், அமைதி, மனவிரிவு என்று பேசியவர்கள் இப்படி அடித்துக் கொண்டு சாகிறார்களே என்று பல அமெரிக்க ஊடகங்கள் அவர்களை கேலி செய்ய ஆரம்பித்தன. மெதுவாக பலர் தங்களை ஹிப்பிகளாக அடையாளம் காட்டிக் கொள்ளத் தயங்கினார்கள். போதை மருந்துகளால் ஏற்படும் ‘மனவிரிவு' ('expanding consiousness') போன்றவைகள் மீது அவநம்பிக்கை உருவானது. ஹிப்பியலையும் ஒரு முடிவுக்கு வர ஆரம்பித்தது.

இந்த அறுபதுகளின் இறுதிக்காலக்கட்டம் அமெரிக்கர்களுக்கு ஒரு சோதனைக் காலகட்டமாகவே படுகிறது. முடிவேயில்லாமல் போய்க்கொண்டிருந்த ஒரு யுத்தம், கென்னடி, மால்க்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் போன்றவர்களின் படிகொலைகள் மற்றும் ஹிப்பி அலையின் தேய்வு போன்றவை தீவிர அவநம்பிக்கையை அவர்களின் மத்தியில் உண்டு பண்ணியது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல குறிப்பிடப்பட்ட நிகழ்வுகள் அறுபதுகளில் நிகழ்ந்தன. முதல் இருதய மாற்று அறுவைசிகிச்சை, முதல் மினீகம்ப்யூட்டர், BASIC போன்ற நிரழ்மொழி, இணையத்தின் முன்னோடியான ARPANET மற்றும் நிலவில் முதற் காலடி எடுத்து வைத்த அப்போலோ11 குழு போன்ற பல முக்கிய நிகழ்வுகள். இதில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பெரும் பங்காற்றின. எழுபதுகளின் தொடக்கத்தில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும் ஹிப்பி மற்றும் எதிர்கலாச்சார அலைகள் கொஞ்சம் ஓய்ந்து புறவய உண்மையை அறிவியல் பார்வை மீண்டும் ஓங்கி எழுந்தது. இதற்கு எதிர் திசையில் செல்லும் பாதைகள் அனைத்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

No comments:

Post a Comment