Monday, April 23, 2018

சாகர் மாலா திட்டம்





---------------------------

மத்திய அரசு நடைமுறைப்படுத்தவுள்ள சாகர் மாலா திட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல தரப்பினரும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இது குறித்து விவாதங்களும் நடந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக கடற்கரையோர கிராமங்களில் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களையும் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் இக்கூட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருத்து கேட்க வந்த அதிகாரிகளை துரத்தி அடித்துள்ளனர். 

இந்த திட்டம் வந்தால் மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது தான் துயரமான நிலைமை. 
சரி. இந்த திட்டத்தினுடைய நோக்கம் என்ன என்று கவனித்தால், மத்திய அரசு 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி 7,500 கி.மீ தூரமுள்ள இந்திய கடற்கரையை மேம்படுத்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் புதிதாக 14 பெரிய துறைமுகங்களும், 122 சிறிய துறைமுகங்களும் அமைக்கப்பட உள்ளது. தவிர நாட்டிலுள்ள எல்லா துறைமுகங்களும் பல கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்படவுள்ளன. அத்துடன் இந்திய கடல் எல்லைக்குள் இருக்கும் 1,208 தீவுகளும் மேம்படுத்தப்பட உள்ளது என மத்திய அரசு தெரிவிக்கின்றது. இதனால் சுற்று சூழலும், மீனவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்து உள்ளதை மத்திய அரசு உணர்ந்து இதை குறித்தான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 
கடல் வணிகத்தை பெருக்க கூடிய நடவடிக்கை என்கிறது மத்திய அரசு. இதற்காக கடற்கரை மேலாண்மை திட்ட வரைபடம் ஒன்றையும் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த வரைபடம் பற்றி மீனவர்களிடம் கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்தி இறுதி செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி இந்தியா முழுவதும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. 

பௌர்ணமி, அமாவாசை போன்ற தினங்களில் கடல் பொங்கி கரை வரை வரும். அந்த பகுதியை ஹை டைட் லைன் (High tide line) என்போம். அந்த லைனில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள பகுதியை ஹசார்டு லைன் (Hazard Line) – ஆபத்தான பகுதி என்று கூறுவர். கடற்கரை கிராமங்களில் சில இடங்களில் ஹை டைட் லைன் வீடுகளின் பக்கத்திலேயே இருக்கும். அதிலிருந்து 300 மீட்டர் தூரத்திற்கு மேல் ஹசார்டு லைன் வரை பாதுகாக்கப்பட்ட பகுதியாக வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி பார்த்தால் இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியிலிருக்கும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும். அப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அனைத்து மீனவ கிராமங்களும் காலியாகி விடும். சாகர்மாலா திட்டத்தின் கீழ் இந்த இடத்தில் சாலைகள் அமைக்கப்படும் போது மீன் பிடிக்க கடலுக்கு செல்ல முடியாது. மேலும் அந்த வரைபடத்தில் கடற்கரையில் வாழும் உயிரினங்களான நண்டு, நத்தை, சிறிய சங்குகள் வசிப்பிடங்களும் இடம்பெறவில்லை. 

இதில் அதிர்ச்சியளிக்கும் விசயமாக 2,000 பேருக்கு மேல் வசிக்கும் நெல்லை மாவட்டம் கூத்தன்குழி என்ற கிராமமே வரைபடத்தில் காட்டப்படவில்லை. இப்படியான மீனவர்களுடைய வேதனையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

#சாகர்_மாலா
#sagar_mala
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-04-2018

No comments:

Post a Comment

*Life is a circle of happiness, sadness, hard times, and good*

*Life is a circle of happiness, sadness, hard times, and good*. If you are going through a hard time, you've got to stay strong to be st...