Wednesday, January 16, 2019

இந்த உலகம் இன்னும் சுழன்றுகொண்டிருக்கிறது.

'விடுநில மருங்கில் படுபுல் ஆர்ந்து 
இரு நில மருங்கின் மக்கட்கெல்லாம்
பிறந்தநாள் தொட்டுச் சிறந்த தன் தீம்பால் 
அறந்தரு நெஞ்சொடு அருள்சுரந்து ஊட்டும்
ஆவொடு வந்த செற்றம் என்னை'
- பசுக்களை வேள்விக்காக இட்டுச்செல்வோரை வழிமறித்து, மணிமேகலைக்காப்பியத்தில் ஆபுத்திரன் முன் வைக்கும் கேள்வி இது. பெற்றோரால் புறக்கணிப்பட்டு அனாதைக்குழந்தையாய் வீசியெறியப்பட்டு ஏதோ ஒரு பசு சுரந்த பாலினால் வளர்ந்தவன் அவன். மேய்ச்சலுக்கு விடப்பட்ட நிலத்தில் தன்னிச்சையாய் வளர்ந்து தழைத்த புல்லை உண்டு, தன்னுள் சுரக்கும் தீம்பாலைத்தன்கன்றுக்கு மட்டுமன்றி எல்லா மக்களுக்கும் அருள்சுரந்து ஊட்டும் பசுவின் புதல்வன் அவன்.

பசுக்களோடு மட்டுமே வாழ்ந்து அவற்றையே காத்துப் பராமரித்து வரும் மாடு மேய்ப்பவர்களான 'கோவலர்' - (ஆயர்கள்) வாழ்க்கை அவர்கள் வளர்க்கும் கால்நடைகள் போன்றே குற்றமில்லாதது என்கிறது சிலம்பு. கண்ணகியையும் கோவலனையும் இடைக்குலப்பெண் மாதரியிடம் அடைக்கலப்படுத்தும்போது அதையே 
'ஆ காத்தோம்பி ஆப்பயன் அளிக்கும் 
கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடில்லை' எனது குறிப்பிடுகிறார் கவுந்தியடிகள்
ஆபுத்திரனும் பசுக்களோடு பசுவாய் வளர்ந்ததால் அவன் உள்ளம் பிறர்நலனையே பெரிதும் நாடுகிறது.பிறர் பசி போக்கவே முந்துகிறது. பசுக்களைக்காக்க இயலாமல் அங்குள்ளோரால் காவிரிப்பூம்பட்டினம் துரத்தப்பட்டபோதும் அங்குள்ள பஞ்சம் தீர்க்க சிந்தாதேவியின் அருள் பெற்று அமுதசுரபி பெறும் அவன் அதைக்கொண்டு காணார் கேளார் கால்முடப்பட்டோர் எனப்பலர் பசியும் போக்குகிறான். புகாரில் அவன் தேவை முடிந்ததும் பஞ்சம் நிலவும் வேறொரு தீவை நோக்கித் தொடங்கும் அவன் பயணம் திசை மாறி ஆளில்லாத வேறொரு மணிபல்லவத்தீவில் அவனை விட்டு விட, வற்றாது அமுதூட்டும் அமுதசுரபியைத் தனி ஒருவனாகிய தனக்கு மட்டும் உணவூட்டப் பயன்படுத்த மனமின்றி அதைப்பொய்கையில் வீசி விட்டு வடக்கிருந்து - உண்ணா நோன்பிருந்து உயிர்துறக்கிறான் அவன். அந்த அமுதசுரபியே அடுத்து அதே போன மனப்பான்மை கொண்ட மணிமேகலையிடம் வந்து சேருகிறது.

தனக்கென வாழாப்பிறர்க்குரியாளர் 
ஆவும் அது போன்ற ஆபுத்திரனும்..
அவ்வாறான மக்கள் இன்னும் இருப்பதாலேயே
' உண்டாலம்ம இவ்வுலகு'...!!
இந்த உலகம் இன்னும் சுழன்றுகொண்டிருக்கிறது.


#KSRpostings
#KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
16-01-2019

No comments:

Post a Comment

வேலுப்பிள்ளை பிரபாகரன்- Velupillai Prabhakaran

https://youtu.be/WrNmTFAoFw8?si=xJMjMucIKPf6JUWQ