Sunday, April 7, 2019

*தூத்துக்குடி துறைமுகமும், நாடாளுமன்ற தேர்தலும்.*



----------------------------------
தூத்துக்குடி துறைமுகத்தில் வெளிவட்ட துறைமுகம் அமைக்கும் திட்டத்தை காங்கிரஸ் ஆட்சியில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அறிவிக்கப்பட்டது. அன்றைய கப்பல் துறை அமைச்சராக ஜி.கே.வாசன் இருந்தார். அதன்பின்னர், பாஜக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் அருண் ஜேட்லி அந்த திட்டத்திற்கான நிதியை ஒதுக்கினார். அதன்பிறகு மத்திய அரசு இந்த திட்டத்தை பாராமுகமாக கிடப்பில் போட்டது. ஏனெனில் குளச்சல் துறைமுகத்திற்கு முக்கியத்துவம் தருவதற்காக இந்த திட்டத்தை பாஜக பாழ்படுத்திவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தூத்துக்குடி துறைமுகம் ஒரு இயற்கை துறைமுகம். பிரதான கப்பல்களும் (Main Ships), சிறு கப்பல்களும் (Freeder Ships) போக்குவரத்தில் இருந்த ஒரு துறைமுகம். பிரதான கப்பல்கள் தூத்துக்குடி துறைமுக கரைக்கு வரவேண்டுமெனில் துறைமுகத்தின் ஆழம் 15 மீட்டர் அளவில் இருக்க வேண்டும். ஆனால் அங்கே ஆழம் 13 மீட்டர் மட்டுமே இருக்கிறது. அதனால் பிரதான கப்பல்கள் துறைமுகத்திற்குள் வராமல் கரையோரமாக சிறு கப்பல்களை (Freeder Ships) பயன்படுத்தி சரக்குகளை கையாளுகிறார்கள். இதனால் இப்பகுதியின் இறக்குமதி, ஏற்றுமதிகள் குறைந்து இந்த வர்த்தகங்கள் நேரடியாக இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்திற்கு சென்றுவிடுகிறது. இதனால் கொழும்பு துறைமுகம் சில ஆண்டுகளாக உலகநாடுகளின் ஏற்றுமதி, இறக்குமதி பரிவர்த்தனைகளில் கொழும்பு துறைமுகம் அதிக முக்கியத்துவம் பெற்றுவிட்டது. 

இதற்கு யார் காரணம்? வங்காளதேசம், வியட்நாம் போன்ற நாடுகளின் துறைமுகங்களை விட தூத்துக்குடி துறைமுத்தினுடைய போக்குவரத்து மற்றும் வர்த்தக பரிவர்த்தனைகளில் முன்னுரிமையை நாளுக்கு நாள் இழந்து வருகிறது. இந்த உள்ளார்ந்த விடயம் தூத்துக்குடியில் வாழும் மக்களுக்கே தெரியவில்லை என்றால் என்ன சொல்வது? இத்தகைய பிரச்சனைகளை குறித்து விவாதிக்கவோ, சொல்வதற்கோ ஆட்கள் இல்லை. என்ன செய்ய?

#Indian_Elections
#Tuticorin_Port
#இந்திய_தேர்தல்
#தூத்துக்குடி_நாடாளுமன்ற_தொகுதி
#தூத்துக்குடி துறைமுகம்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRPostings 
#KSRadhakrishnanPostings 
04-04-2019

No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...