Wednesday, December 2, 2020

 

————————————————







சேலம் வரதராஜூலு நாயுடு - வ.உ.சி., ராஜாஜி, பெரியார், காமராசர் போன்ற ஆளுமைகளின் அரசியலுக்கு வழிகாட்டி துணை நின்றவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஏட்டை நிறுவியவர். தமிழ்நாடு செய்தித்தாளை திறம்படமுன்னெடுத்தவர். உத்தமர் காந்திக்கு நெருக்கமானவர். திரு.வி.க.-வின் உற்ற நண்பர். காந்தியும், பண்டித நேருவும் இலங்கைக்கு, அந்நாட்டின் விடுதலைக்கு முன்பு செல்ல தீர்மானித்தபோது அங்குள்ள தமிழர்களின் நிலை என்னவென்று அறிந்துவர 1940களில் இலங்கைக்கு காந்தியால் அனுப்பபட்டவர். இலங்கை சென்று வந்த பின் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அங்கு தமிழர்கள் சம உரிமையோடு இல்லை என்ற கருத்தை முதன்முதலாக வெளிப்படுத்தியவர் வரதராஜூலு நாயுடு.
பண்டித நேரு இந்திய விடுதலைக்கு முன்பு அங்கு சென்று காலி முகத்திடலில் பேசியபோது சிங்களர்களால் தாக்கப்பட்டதுமுண்டு. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக வரதராஜூலு நாயுடு இருந்தபோது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் காரியதரிசியாக பெரியார் பொறுப்பில் இருந்தார்.
இன்று பரவலான கவனத்தை பெற்றவராக இல்லாதபோதிலும் விடுதலை போராட்டக் காலத்தில் மாபெரும் தலைவராக தமிழகம் எங்கும் பவனி வந்தவர் வரத ராஜுலு நாயுடு. மிகப்பெரிய தலைவராக 1920களில் கொண்டாடப்பட்டவர் அவர் . தமிழகம் எங்கும்விடுதலைபோராட்டத்தையும் ,
காங்கிரஸ் இயக்கத்தையும் வீறுக்கொள்ள செய்ததில் அவருடைய பங்கு அளப்பரியது.
பாரதி கைது செய்யப்பட்ட காலக்கட்டதில் ஒருமுறை கைதுசெய்யபட்ட வரத ராஜுலு நாயுடு ஜாமீனில் விடுதலை பெற்றபோது சிறை வாசலிலும் வழியிலும் வரவேற்கப்பட்ட விதம் அவர் எத்தகைய மக்கள் தலைவராக அக்காலத்தில் விளங்கினார் என்பதை தெளிவாக காட்டும். சிறைசாலை வாசலிலே புஷ்ப பந்தல் போடப்பட்டு இருந்தது. வக்கீல்கள்,டாக்டர்கள்,வியாபாரிகள் முதலிய ஏராளமானோர் அவரை சிறைச்சாலையில் வரவேற்றனர். அவரது மோட்டர்வண்டி முழுவதையும் மக்கள் மலர்களால் நிரப்பினர். வழிநெடுக மக்கள் கூடி நின்று கோஷம் செய்து கொண்டாடினார். கடைத்தெருவில் ஆயிரகணக்கான மக்கள் அவருக்கு மாலை போட்டு உபசாரம் செய்தனர்.
-(சுதேசமித்திரன் 17,23,25 ஜனவரி 1919 )
தமிழர் தலைவராக திகழும் பெரியாரை முழு நேர அரசியல் தொண்டனாக ஆக்கியதில் ராஜாஜியை காட்டிலும் அதிக பங்குடையவர் வரத ராஜுலு நாயுடு என்பதை அவர் மறைந்தபோது பெரியாரே குறிப்பிட்டு இருக்கிறார்.
இப்படிப்பட்ட செல்வாக்கு மிக்க தலைவர் வரத ராஜுலு நாயுடு தன் பொது வாழ்வின் தொடக்க காலத்தில் புதுச்சேரியில் வாசம் செய்த பாரதியை நாடிச்சென்று அவரோடு ஒரு வார காலம் தங்கி தாம் பாரதியிடம் இருந்து சுயராஜ்ய தீட்சை பெற்ற வரலாற்றை பிற்காலத்தில் இப்படி அவர் பதிவு செய்து இருக்கின்றார்.
'நான் தேச தோண்டில் ஈடுப்பட்டு சுய ராஜயத்திற்காக போராடும் திறத்தில் எனக்கு துணிச்சல் ஏற்பட்டதற்கு பால கங்காதர திலகருடைய வாழ்க்கையே காரணமாகும். திலகருடைய கோஷ்டியில் தமிழ்நாட்டில் வெகு சிலரே பகிரங்கமாக சேர்ந்து இருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் ஸ்ரீ ஸி . ராஜகோபாலாசாரி[சேலம் ],கே. வி. ரங்கசாமி அய்யங்கார் [ஸ்ரீரங்கம் ],எஸ். துரைசாமி ஐயர் [சென்னை வக்கீல் ],சுப்ரமணிய பாரதி ஆகியோர்கள். 1908ஆம் வருஷம் சுப்ரமணிய பாரதியாரை பார்ப்பதற்காக புதுச்சேரி போயிருந்தேன் . ஒரு வாரம் அவரோடு தங்கி இருந்து திலகரை பற்றி அவர் சொல்லிய வரலாறுகளையும் லோகமான்யர் மீது அவர் பாடி இருந்த பாடல்களையும் கேட்டு உள்ளம் மூழ்கி சுய ராஜ்யதீட்சைபெற்றேன்'
-(கலைமகள் 1956 ஆகஸ்ட் ).
கப்பல் ஓட்டிய தமிழனை கொழுத்த தேசாபிமானி ஆக்கியது பாரதி. காந்தியின் மனசாட்சி ராஜாஜிக்கு உணர்வும் உத்வேகமும் அளித்தது பாரதி. ஈ. வெ. ரா.பெரியாரை முழு நேர அரசியல் பொது தொண்டராக ஆக்கியதில் முக்கிய பங்கு வகிக்கும் வரத ராஜுலு நாயுடு சுய ராஜ்ய தீட்சை பெற்றது பாரதியிடம்.
(படம் -அபிராமத்தில் 2-13--05--1934 .
பசும்பொன் தேவர் நடத்திய குற்றப்பழங்குடிகள் சட்ட எதிர்ப்பு மாநாடு. மாலை அணிந்து அமர்ந்து இருப்பவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்.டாக்டர்.பி.வரதராஜூலுநாயுடு.இளம் வயது தேவர் பேண்ட் அணிந்துள்ளார்.)
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
13-09-2020.



No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்