All that glitters is not gold....
-#Shakespear (Merchant of Venice)
சசிகலா விடுதலையானால் தமிழகத்திற்கு பெரிய விடிவுகாலம் வந்துவிடும் என்றும், அதை அவர் கட்சியினர் பெரிதாக வரவேற்று உருவகப்படுத்தி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
இந்தியா பார்த்த தலைவர்களில் உத்தமர் காந்தி, நேதாஜி, ஜெயபிரகாஷ் நாராயணன், போன்றவர்கள், தமிழகத்தில் ஓமந்தூரார், இராஜாஜி, வ.உ.சி, குமாரசாமிராஜா, காமராஜர், அண்ணா, சேலம் வரதராஜ நாயுடு, பொதுவுடைமை கட்சி ப.ஜீவானந்தம், கக்கன் போன்ற பல தலைவர்களின் அரசியல் போக்குகளையும் பணிகளையும் தமிழகம் கண்டுள்ளது. ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை. இது யாரையும் குறை சொல்வதற்காக பதிவிடவில்லை, பரிசீலனையாக இந்த கருத்தை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் அவரவர் விருப்பம். சில விடயங்களை சொல்லித்தான் ஆகவேண்டும். இது எல்லாம் தோற்றப்பிழையாக ஆகிவிடும். இல்லையெனில் நம்மை வரலாறு மன்னிக்காது.
இன்றைக்குள்ள ஒவ்வொருவரும் சரணாகதி அடைந்து சில தலைவர்களை பூஜிப்பது வேடிக்கையான காட்சிகள், வேதனை காட்சிகள் மட்டுமல்ல கொடுமையான காட்சிகள். எதிர்கால தமிழக வரலாற்றுக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டுவிடாதீர்கள்.
உதாரணத்திற்கு இன்று முகநூலில் ஒரு பதிவைப் பார்த்தேன். அதை கீழே குறிப்பிட்டுள்ளேன்.
அவர் இல்லையென்றால் இவர் இல்லையென்றால் தமிழகம் பாழாய் போகும் என்ற மனபாண்மை இருந்தால் என்ன செய்ய முடியும்.
இந்திய பிரதமராக இருந்த இரும்பு மனுசி அவசர நிலை காலத்தைப் பிரகனடப்படுத்தி தோல்வியை கண்ட இந்திரா காந்தியையும் கைது செய்தார்கள். அவர் விடுதலையான போது இப்படிப்பட்ட வரவேற்பும் பாதகைகளும் கிடையாது. இந்தியாவின் முதல் பெண் முதல்வர் உத்தரபிரதேசம் சுசேதா கிருபளானி நேர்மையின் அடையாளம், கேரளாவின் அமைச்சராக இருந்த நூறு வயதை கடந்த கௌரி அம்மாள் எளிமையின் அடையாளம். மதர் தெராசாவும் இந்தியாவில்தான் வாழ்ந்தார்கள். என்று பல பெண்மணிகளை பொதுவாழ்வில் சொல்லிக்கொண்டே போகலாம், சசிகலாவை விட்டால் தமிழ்நாட்டை காப்பற்ற முடியாது என்று பேசுவது எல்லாம் ஏற்புடையது அல்ல. இங்கு அரசியல் புரிதல்கள் இல்லை என்பதால் தான் இப்படிப்பட்ட நிலை.
அன்று..
தண்டனை பெற்று கைதி சிறையில் இருந்து வெளியே வந்தால் கைதியை மட்டும் அல்லாது, குடும்பத்தையே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த சமுதாயத்தில்,
இன்று...
சிறையில் இருந்து தண்டனை காலம் முடிந்து, வெளியே வந்த கைதிக்கு வரவேற்பு, வாணவேடிக்கை, முழு நேர தொலைக்காட்சி நேரலை இது சமுதாய சீரழிவு.
தண்டனை பெற்ற குற்றவாளியை தூக்கி வைத்து கொண்டாடுவது மட்டுமல்ல.
அரசியலை தொழிலாய் நினைத்து, வேறு வேலை பார்க்காமல் இதில் மட்டுமே தெளிவாக சம்பாதித்து கோடிக்கோடியாய் பணம் சேர்த்து, குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் நேர்மையாளனாக காட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகள் பின்னே கொடி பிடித்து கோஷம் போடுவதும் தமிழக அரசியலின் அபத்தங்களில் ஒன்று.
இதுதான் இன்றைய அரசியல் நிலை...
நல்ல யதார்த்த அரசியலின் தளமும் களமும் இல்லை.
விதியே, விதியே, தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?
என்ற பாரதியின் பாட்டு தான் ஞாபகத்திற்கு வருகிறது.
No comments:
Post a Comment