Wednesday, February 10, 2021

#இந்தியப்_பெருங்கடல்_மண்டலத்தில்_உள்ள_நாடுகளுக்கு_ஆயுதங்கள்_வழங்க_தயார்


——————————————————-
இந்து மகா சமுத்திர உறுப்பு நாடுகள் கூட்டம் பெங்களூரில் சமீபத்தில் நடந்தது. இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நத் சிங் இந்நிகழ்வில் கலந்து கண்டுகொண்டார். இந்து மகா சமுத்திரம் அமைதி மண்டலமாக பாதுகாக்கபடவேண்டும். அந்நிய சக்திகள் ஊடுருவி ஒரு சிக்கலான பகுதியாகிவிட்டது. இலங்கையின் தயவால் சீனா, அமெரிக்கவின் டிகோகர்சியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் என பல நாடுகள் இந்திய பெருங்கடல் பரப்பில் ஊடுருவி நம்முடைய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிட்டார்கள்.
அந்நிகழ்வில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது,
இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நாடான இந்தியக் கடற்கரையின் நீளம் 7,500 கி.மீ ஆகும். இந்த மண்டலத்தில் இருக்கக்கூடிய அனைத்து நாடுகளின் அமைதி, வளமான சகவாழ்வுக்கு இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டிய கடமை உள்ளது. இந்தியப் பெருங்கடல், இந்த மண்டலத்தில் உள்ள நாடுகளின் பொதுவான சொத்தாகும். உலகின் பாதி அளவு சரக்கு கப்பல்கள், மூன்றில் ஒரு பங்கு சரக்குப்\ப் போக்குவரத்து, மூன்றில் இரண்டு பங்கு எண்ணெய் போக்குவரத்து காணப்படும் பெரும் கடல் வழித்தடத்தை கட்டுப்படுத்துவதால், பன்னாட்டு வர்த்தகம், போக்குவரத்தின் உயிர்த்தடமாக இந்தியப் பெருங்கடல் உள்ளது.
இந்தியப் பெருங்கடல் கொள்கைப்படி, இந்த மண்டலத்தின் அனைவருக்கும் பாதுகாப்பு, வளர்ச்சி, என்பதுதான் நோக்கமாகும். இதற்கு இணங்க, இம்மாநாட்டில் பாதுகாப்பு, வர்த்தகம், இணைப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான போர், நாடுகளுக்கு இடையிலான கலாச்சாரப் பகிர்வு போன்றவை குறித்து விவாதிக்க வேண்டும். நிலம், கடல் எல்லைகளைப் பாதுகாப்பது, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு கூட்டுறவு, நிலையான மற்றும் சீரான மீன் பிடிப்பு, இயற்கை பேரிடரை கையாள்வது தொடர்பான கூட்டு நடவடிக்கைகள், பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத மீன் பிடித்தலுக்கு எதிரான போர் எங்கள் நோக்கமாகும். 21-ம் நூற்றாண்டில் இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் உள்ள நாடுகளின் நிலையான வளர்ச்சி, மேம்பாட்டுக்கு கடல்வளத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்தியப் பெருங்கடல் நாடுகளுக்கு இடையே சுற்றுலா, வர்த்தகத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புதிதாக தோன்றும் சவால்களை எதிர்கொண்டு, வாய்ப்புகளை உருவாக்குவதுதான் இந்தியப் பெருங்கடல் நாடுகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.
விமானத் தொழில், ராணுவத்துறையில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வாய்ப்பை அனைத்து நாடுகளும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், செஷல்ஸ், மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மனிதநேயத்தின் மீது இந்தியாவுக்கு இருக்கும் பற்றை இது வெளிப்படுத்துகிறது.
இம்மாநாட்டில், இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் உள்ள 28 நாடுகளில் 27 நாடுகளின் பிரதிநிதிகள் நேரடியாகவும், இணைய வழியாகவும் பங்கேற்றனர். அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட ஆர்வம் காட்டுவதையே இது காட்டுகிறது. இந்தியப் பெருங்கடல் நாடுகளுக்கு ஏவுகணைகள், மின்னணு போர்க் கருவிகள், இலகுரக போர் விமானங்கள், போர் ஜெலிகாப்டர்கள், பல்பயன் இலகு போக்குவரத்து விமானங்கள், போர் மற்றும் ரோந்துக் கப்பல்கள், ரேடார்கள், டாங்கிகள், ராணுவ வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான போர் ஆயுதங்கள், தளவாடங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது.
இந்தியப் பெருங்கடல் நாடுகளை ராணுவத் தொழில் ஒத்துழைப்பின் வாயிலாக, இந்தியாவின் வளத்தை பிற நாடுகளோடு ஒருங்கிணைக்க முயற்சித்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் இருக்கும் பெரும்பாலான நாடுகள் உலக அளவில் போட்டித் திறன் பெற்று, புதிய தொழிநுட்பங்களை மேம்படுத்தி வருகின்றன. இதில் கப்பல்களை வடிவமைத்து, கட்டமைப்பதற்காக ராணுவக் கப்பல் தளத்தை அமைத்து வருகின்றன. அவற்றை கூட்டு ஒத்துழைப்பு வாயிலாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்திய விமானத் தொழில், ராணுவத் தொழில் துறை, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கவர்ச்சிகரமான வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. இதன் மூலம் இந்தியாவுடனான ஒத்துழைப்பை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லலாம் என்றார்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
06.02.2021

No comments:

Post a Comment

2023-2024