Friday, October 24, 2014

ராம்ஜெத்மலானி சிந்தனைக்கு.

ராம்ஜெத்மலானி சிந்தனைக்கு....
----------------------------------------------------
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து, நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி விமர்சித்தது விரும்பத்தக்கதல்ல. அதனை அவர் தவிர்த்திருக்க வேண்டும். பிரேமானந்தா, எம்.ஜி.ஆர்., வீரபாண்டி ஆறுமுகம், இன்றைக்கு வேலூர் சிறையில் தூக்குக் கயிற்றை நோக்கி வாடிக் கொண்டிருக்கும் தியாக சீலர்கள் என பலருக்கும் வாதாடியவர் ராம்ஜெத்மலானி. எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என முரட்டுத்தனமாக, விதண்டாவாதமாக பேசுவதில் வல்லவரும் கூட. 1998 இறுதி கட்டத்தில் ஜெயலலிதா, வாஜ்பாய் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றபோது, ராம்ஜெத் மலானி ஜெயலலிதா பற்றி உதிர்த்த வார்த்தைகளை எவரும் மறுக்க முடியாது.




நீதிபதிகள் சொல்லும் தீர்ப்புக்கு மேல், மேல் முறையீடு இருக்கும்பொழுது ராம்ஜெத் மலானி அத்தீர்ப்பை விமர்சித்திருப்பது வியப்புக்குரியதாகும். மாட்டுத் தீவன வழக்கில் கைது செய்யப்பட்ட லல்லுபிரசாத் யாதவும்,முன்னாள் பீகார் முதல்வராக இருந்த ஜெகநாத்மிஸ்ரா பிணை கிடைக்காமல் பல ஜாமின் மனுக்களை நீதிமன்றங்களில் தாக்கல் செய்தும் எவ்வித பலனும் இல்லை. தீவன வழக்கில் கைது செய்யப்பட்ட சக குற்றவாளி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமின் பெற்றார். அதை மேற்கோள் காட்டி, லல்லுபிரசாத் நூறு நாட்களுக்கு மேலாக சிறையிலிருந்த பிறகு ஜாமின் பெற்றார். அரியானாவில் ஆசிரியர் நியமன ஊழலில் கைதான, அரியான மாநில முன்னாள் முதல்வர் சௌதாலா ஜாமீன் கிடைக்காமல் தவிக்கின்றார். அவரோடு சேர்ந்து அவரது மகனும், குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிகளும் பரோலில்தான் வர முடிந்தது. பலரின் நிலைமை இப்படி இருக்கின்றது. முன்னாள் மத்திய அமைச்சர் ரஷித் மசூத்தும் சிறையில் இருக்கின்றார்.

இன்னொன்றையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வளவு ஆர்ப்பாட்டமாக கடந்த 27.09.2014 அன்று பெங்களூர் நீதிமன்றத்துக்குச் சென்ற ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பும், வசதிகளும், பத்திரிகை செய்திகளும் பரபரப்பாக வந்தன. இதை யாரும் குறையாகப் பார்க்கவில்லை. இந்தியாவின் பிரதமராகவும், உலகம் போற்றும் தலைவராகவும், நேருவின் மகளான இந்திரா காந்தி, ஜனதா கட்சி ஆட்சிக் காலத்தில், கர்நாடகத்தில் உள்ள சிக்மகளூர் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தல் காலத்தில் அவர் மீது ஒரு குற்றவியல் வழக்குத் தாக்கலானது. அந்த வழக்கில் ஆஜராக, ஒரு பழைய கட்டடத்தில் இருந்த நீதிமன்றத்திற்கு எளிமையாக, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாது வந்து சென்றார். இதே பெங்களூர் வழக்கு மன்ற வளாகத்தில் அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் ஊழல் வழக்கில் பல சமயம் ஆஜராகியுள்ளார். இவற்றையெல்லாம் மனதில் கொண்டு பார்த்தால் இன்றைக்கு நடக்கின்ற நடவடிக்கைகள் தேவைதானா? என்பது புரியவில்லை.

வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்தபொழுது, சிறையில் இருக்கும் தன் உறவினரை பார்க்க, தேசிய கொடி கட்டிய வாகனத்தில் சென்றார் என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள ஜெயலலிதாவை சந்திக்க செல்பவர்கள் எப்படிப்பட்ட அங்கீகாரத்தில் செல்கிறார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

JULIUS CAESAR -WILLIAM SHAKESPEARE

JULIUS CAESAR -WILLIAM SHAKESPEARE  The Tragedy of Julius Caesar is a tragedy by William Shakespeare, believed to have been written in 1599....