Saturday, April 4, 2015

விவசாயிகள் சங்கத் தலைவர்.நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு கோவில்பட்டியில் சிலை அமைப்புப் பணிகள் துவக்கம். - தமிழக விவசாயிகள் போராட்டம் நூல் வெளியீடு, Statue for Agricultural Movement Leader Narayanasamy Naidu at Kovilpatti. Book on Agricultural Movements in Tamil Nadu.







தமிழகத்தில் விவசாயிகளின் போராட்டம் 1930ல் துவங்கி நெல்லை மாவட்டம் கடம்பூர் அருகே, ஆங்கிலேயர் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு விவசாயியைச் சுட்டு அவர் மரணமடைந்தது வரலாற்றுச் செய்தி.

விடுதலைப் போராட்ட காலத்தில் உத்தமர் காந்தியே வங்கத்தில் அவுரி விவசாயிகள் போராடிய போது, முன்னின்று அந்தப் போராட்டத்தை நடத்தியதும் வரலாறு.

1957லேயே ஆங்காங்கு விவசாயிகள் சிறுசிறு குழுக்களாகப் போராட்டங்கள் நடத்தினாலும், விவசாயிகள் சங்க ரீதியாக 1966ல் விவசாயிகள் சங்கம்  உருவெடுக்கப்பட்டது. அப்பொழுது நாராயணசாமி நாயுடு, கிருஷ்ணசாமி கவுண்டர், முத்துமல்ல ரெட்டியார், முத்துசாமி கவுண்டர், டாக்டர் .சிவசாமி, மயில்சாமி, வி.கே.ராமசாமி, கு.வரதராஜன்,  சாத்தூர் ஜெகந்நாதன் போன்ற பலர் பிரச்சார தளத்தை அமைத்து விவசாயிகள் சங்க அமைப்பைக் கட்டமைத்தனர்.

தமிழகத்தின் விவசாயிகள் போராட்டம் வலுவாகவும், வேகமாகவும் கடந்த 1970லிருந்து, போர்குணத்தோடு போராடியது ஆட்சியாளர்களை சிந்திக்க வைத்தது. துப்பாக்கிச் சூட்டில்  அரசின் எண்ணற்ற அடக்குமுறைகளை மீறி நெஞ்சை நிமிர்த்தி துப்பாக்கி ரவைக்குப்  தங்களுடைய இன்னுயிரை ஈந்த தியாகிகளை பலர் மறந்திருப்பார்கள்.

இதோ இறந்த அந்தத் தியாக தீபங்களின் பெயர்களைச் சொல்லவேண்டியது ஒரு விவசாயியின் வீட்டில் பிறந்தவன் என்ற தகுதியின் அடிப்படையில் என்னுடைய கடமை. விவசாய சொந்தங்களே இந்த வரலாறெல்லாம் மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டது என்பது கொடுமையிலும் கொடுமை.

அந்த தியாகிகளின் பெயர்களை வரிசைப்படுத்துகிறேன். விவசாய சொந்தங்கள் சற்று கனிவோடு அந்தத்தியாகிகளை நினைத்துப்பாருங்கள்.

1 .ராமசாமி ( பெருமாநல்லூர்- அவிநாசி வட்டம்)

2. மாரப்ப கவுண்டர் (பள்ளக்காடு -  அவிநாசி வட்டம்)

3.ஆயிக்கவுண்டர் ( ஈச்சம்பள்ளம் - அவிநாசி வட்டம்)

4.ஆறுமுகம் (பெத்தநாயக்கன் பாளையம் -சேலம் மாவட்டம்)

5. முத்துசாமி (பெத்தநாயக்கன் பாளையம் -சேலம் மாவட்டம்)

6. சாந்த மூர்த்தி (பெத்தநாயக்கன் பாளையம் -சேலம் மாவட்டம்)

7.மணி ( நெத்திமேடு -சேலம் மாவட்டம்)

8. ராமசாமி என்ற முட்டாசு (பெத்தநாயக்கன் பாளையம் -சேலம் மாவட்டம்)

9. பிச்சமுத்து (பெத்தநாயக்கன் பாளையம் -சேலம் மாவட்டம்)

10. கோவிந்தராசுலு (பெத்தநாயக்கன் பாளையம் -சேலம் மாவட்டம்)

11.விவேகானந்தன் (ஏத்தாப்பூர்-சேலம் மாவட்டம்)

12.ராமசாமி ( நரசிங்கபுரம் -சேலம் மாவட்டம்)

13. முத்துக்குமாரசாமி (மண்ணோகவுண்டம்பாளையம் - பல்லடம் வட்டம்)

14. சுப்பையன் (அய்யாம்பாளையம்- பல்லடம் வட்டம்)

15. கந்தசாமி நாயக்கர் ( அப்பனேரி - சங்கரன்கோவில் வட்டம், நெல்லை மாவட்டம்)

16.சீனிவாசன் ( வெற்றிலையூரணி -சாத்தூர் வட்டம்)

17. நம்மாழ்வார் (மீசலூர் -விருதுநகர் வட்டம்)

18. நாச்சிமுத்து ( கோடாங்கிபட்டி - ஒட்டன்சத்திரம் வட்டம் )

19.சுப்பிரமணியம் ( காசிப்பாளையம் -வேடசந்தூர் வட்டம்)

20. சின்னசாமி கவுண்டர்  ( காசிப்பாளையம் -வேடசந்தூர் வட்டம்)

21. கருப்பசாமி  (விடுதலைப்பட்டி -வேடசந்தூர் வட்டம்)

22.கிருஷ்ணமூர்த்தி (  வேடசந்தூர் )

23. மாணிக்கம் (ராசக்கவுண்டர் வலசை -தேவிநாயக்கன்பட்டி, வேடசந்தூர் வட்டம்)

24. ஆரோக்கியசாமி (நல்லமநாயக்கன் பட்டி - திண்டுக்கல் மாவட்டம்)

25. முருகேச கவுண்டர் (சின்னாசிபட்டி - ஒடுகத்தூர் , வேலூர் மாவட்டம்)

26. மகாலிங்கம் (தான்தோன்றி கிராமம்- உடுமலைப்பேட்டை வட்டம்)

27. வேலுச்சாமி (கணபதி பாளையம் -உடுமலைப்பேட்டை வட்டம் )

28. சாத்தூரப்ப நாயக்கர் (குருஞ்சாக்குளம் - சங்கரன்கோவில் வட்டம், நெல்லைமாவட்டம்)

29. வெங்கடசாமி நாயக்கர் (குருஞ்சாக்குளம் - சங்கரன்கோவில் வட்டம், நெல்லைமாவட்டம்)

30.வரதராஜன் (குருஞ்சாக்குளம் - சங்கரன்கோவில் வட்டம், நெல்லைமாவட்டம்)

31. வெங்கடசாமி (குருஞ்சாக்குளம் - சங்கரன்கோவில் வட்டம், நெல்லைமாவட்டம்)

32.ரவிச்சந்திரன் (குருஞ்சாக்குளம் - சங்கரன்கோவில் வட்டம், நெல்லைமாவட்டம்)

33. முரளி (குருஞ்சாக்குளம் - சங்கரன்கோவில் வட்டம், நெல்லைமாவட்டம்)

34. மணி (தும்மல்சேரி கண்டிகை -திருத்தணி)

35. கி.துளசிமணி  ( சித்தோடு கங்காபுரம் - பவானி வட்டம்)

36.எத்திராஜ நாயக்கர் (வெங்கடாசலபுரம் தாலுகா, சங்கரன்கோவில் வட்டம்)

37. ஜோசப் இருதய ரெட்டியார் (அகிலாண்டபுரம் -ஒட்டபிடாரம் வட்டம்)

இப்படியாக தமிழகத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில், விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட போராடிய விவசாயிகள் குண்டடிபட்டு தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொண்டார்கள்.

குறிப்பாக என்னுடைய குருஞ்சாக்குளம் கிராமம் இப்படிப்பட்ட பல தியாகிகளை ஈன்றெடுத்ததில் பெருமைகொண்டாலும், அவர்களுடைய இழப்பை நினைத்து வேதனை கொள்கின்றது மனது.
இத்தியாகிகளுக்கு   நாம் வீரவணக்கமாவது செலுத்தவேண்டாமா? அவர்களது தியாகத்தை எண்ணிப் போற்றவேண்டாமா?

ஆளவந்தார்கள் விவசாயிகளை இரண்டாம் குடிமகன்களாகப் பார்ப்பது இன்றும் தொடர்கின்றது.

விவசாயிகள் போராட்டம் ஒருகாலத்தில், நாராயணசாமி நாயுடு தலைமையில் வீறுகொண்டு எழுந்தது. கோவை மாவட்டத்தில் செங்காலிப் பாளையத்தில் பிறந்த நாராயணசாமி நாயுடு தொடர்ந்து விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தி வந்தார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் விவசாயிகள் போராட்டத்தை எடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொண்டவர்.



உத்திரப்பிரதேசத்தில் திக்காயத் தலைமையிலும், மராட்டிய மாநிலத்தில் சரத் ஜோசி தலைமையிலும், கர்நாடகத்தில் நஞ்சுண்டசாமி தலைமையிலும், ஆந்திரத்தில் சங்கர் ரெட்டி தலைமையிலும்  தளபதிகளை உருவாக்கி, ஆங்காங்கு விவசாயிகளின் உரிமைகளை நிலைநிறுத்த போராட்டங்களை நடத்த முன்னத்தியராக விளங்கியவர் நாராயணசாமி நாயுடு.
நாராயணசாமி நாயுடு 1984 பொதுத்தேர்தல் கட்டத்தில் கோவில்பட்டி பயணியர் விடுதியில் 20-12-1984ல் காலமானார்.

இந்தப்போராட்டங்களை எல்லாம் குறித்து முழுமையாகத் தொகுத்து நூல் தயாராகிக் கொண்டிருக்கின்றது. விரைவில் அந்நூலினை வெளியிட இருக்கின்றேன் என்று விவசாய சொந்தங்களுக்குத் தெரிவிக்க வேண்டிய ஆசையின் காரணமாக இந்தப் பதிவை எழுதுகின்றேன்.

விவசாயப் போராட்டங்களுக்கு முக்கிய கேந்திரப்பகுதியாக கரிசல் மண்ணின் தலைநகரமாம் கோவில்பட்டி இருந்தது. அந்தமண்ணில் தான் அவர் காலமானார் அப்பகுதியிலே அவருக்குச் சிலை அமைப்பது கடமையும் பொறுப்புமாகக் கருதுகிறேன்.

இந்நிலையில்  கோவிபட்டியில்  நாராயணசாமி நாயுடு அவர்களுக்குச் சிலை அமைக்க பணிகள் துவங்கிவிட்டன. அரசாங்கத்துக்கு இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி முறையான கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது என்பதையும் அன்புக்குரிய விவசாயிகளுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபற்றி  மேலும் அறிந்துகொள்ள/தெரிந்துகொள்ள விரும்புவோர் என்னுடன் தொடர்புகொள்ளவும் வேண்டுகிறேன்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-04-2015



2 comments:

  1. புத்தக எப்போது கிடைக்கும் முகவரி கொடுக்கவும்

    ReplyDelete

*Run your own race. No one cares what you are doing*

*Run your own race. No one cares what you are doing*. Think yourself as a powerful creator. You will see opportunities to get your goal, and...