Saturday, July 11, 2015

எளிய விவசாய மக்களின் அன்பும் பரிவும்







இன்று (11-07-2015), கோவில் பட்டி நகரத்தில் மறைந்த விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களுடைய சிலையமைப்புப் பணிகள் சம்பந்தமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்திக்க ஆட்சியர் அலுவலகம் சென்றிருந்தேன்.

எதிர்பாராவிதமாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அகிலாண்டபுரத்தைச் சார்ந்த ஜோசப் இருதய ரெட்டியார் அவர்களின்   உறவினர்கள்அங்கே என்னைச் சந்தித்தார்கள்.

“எங்களை யாரென்று தெரிகிறதா” என்று அவர்கள் கேட்டபொழுது எனக்கு சரியாகப் புரியவில்லை. தொடர்ந்து, “நாங்கள் அகிலாண்டபுரம் ஜோசப் இருதய ரெட்டியாரின் உறவினர்கள்” என்று அறிமுகப் படுத்திக் கொண்டார்கள். 

எனக்கு நினைவுகள் சற்று பின்னோக்கிச் சென்றது. 1992ல் ஜெயலலிதா தலைமையிலிருந்த  அதிமுக ஆட்சியில், விவசாய சங்கத்தின் சார்பில் பெரும் போராட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. 
 
கோவில்பட்டி மெயின் ரோட்டில் நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய அத்துமீறலால் விவசாயிகள் தடியடிக்கு உட்படுத்தப்பட்டனர்.   இரண்டு விவசாயிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு  பலியானார்கள்.

அவர்களில் ஒருவர்தான் அகிலாண்டபுரத்து  ஜோசப் இருதய ரெட்டியார். இன்னொருவர் வெங்கடாச்சல புரத்தைச் சேர்ந்த எத்திராஜ நாயக்கர்.  பேரணியில் கலந்துகொண்ட நூறு விவசாயிகளின் டிராக்டர்களையும் காவல்துறையினர் கையகப்படுத்தி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் நிறுத்தினார்கள். 

அன்றைய திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், இன்றைக்கு மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ அவர்கள், டெல்லியிலிருந்து எனக்கு தொலைப்பேசியில் அழைத்து,  “உடனே கோவில்பட்டிக்குச் செல்லுங்கள், நானும் புறப்பட்டு வருகிறேன்” எனச் சொன்னார்.  

கோவில்பட்டி மெயின்ரோடு  விருந்தினர் விடுதியிலிருந்து, லெட்சுமி மில் வரைக்கும் மயான அமைதியும்  மக்களிடையே இறுக்கமான பதட்டம் நிலவியது. 


மறைந்த  விவசாயி எத்திராஜ நாயக்கரின் உடல் வெங்கடாசலபுரம் மயானத்தில் அன்று இரவு எரியூட்டப்பட்டது.  அன்று வெங்கடாசலபுரம் கிராமத்தில்  நடைபெற்ற  இரங்கல் கூட்டத்தில் விவசாயிகளிடம் வைகோவும், நானும் இரங்கல் உரையாற்றினோம். பகல் நேரத்தில் ஜோசப் இருதய ரெட்டியார் உடலை அவரது கிராமமான அகிலாண்டபுரத்தில் புதைக்கப்பட்டது.

இந்த இரண்டு விவசாயிகள் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலியானதற்காக  ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தான் காரணம் என்று  அறிக்கை வெளிவிட்டார். ஆனால் ஆட்சியிலிருந்த ஜெயலலிதா அரசு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை மறைக்க இயற்கையாக விவசாயிகள் மரணமடைந்ததாக மறுப்பு தெரிவித்தது.

இதற்காகவே துப்பாக்கிச் சூட்டில் இறந்த ஜோசப் இருதய  ரெட்டியாரின் புதைத்த  உடலை மறுபடியும் தோண்டி  மறுபிரேத பரிசோதனை செய்தால் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட உண்மை வெளித்தெரியுமென்று வைகோ தெரிவிக்க, சென்னை உயர்நிதிமன்றத்தில்  ஜோசப்  ரெட்டியாரின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென நான் ரிட் மனு தாக்கல் செய்தேன்.

அன்றைய உயர்நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.பக்தவச்சலம் மறுபிரேத பரிசோதனை செய்யலாம் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவானது உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாகும்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் கவலையோடு இருந்த கோவில்பட்டி வட்டார விவசாயிகள்  இந்த உத்தரவினால் சற்று ஆறுதலடைந்தார்கள். ஆனாலும் மறு பிரேதபரிசோதனைக்காக தோண்டிய பொழுது காவல்துறையும், அரசாங்கமும் முறையாக நடந்து கொள்ளவில்லை.  துப்பாக்கிச் சூடு சம்பவத்தை இயற்கைச் சாவு என்று மறைத்து அதிமுக அரசு மறுபிரேத பரிசோதனை அறிக்கையிலும் தவறு செய்தது.

ஜோசப் இருதய ரெட்டியாரின் மனைவியான வியாகுலம் அம்மாள்  ரிட் மனுவுக்கான அபிடவிட்டில் கையெழுத்திட்டு, ” போலீஸ் துப்பாக்கி சூட்டில் என் கணவர் இறந்தார் என்ற உண்மையை வெளியே கொண்டு வாருங்கள் ஐயா” என்று எங்களிடம் கதறியது இன்றைக்கும் அப்படியே நினைவில் உள்ளது.  திமுக மாவட்டச் செயலாளரான டி.ஏ.கே.லக்குமணன், தூத்துக்குடி பெரிய சாமி, முன்னாள் அமைச்சர் ச.தங்கவேலு அப்போது உடன் இருந்தார்கள். 

அன்றைய நாட்களில் பிரேத மறுபரிசோதனை உத்தரவு என்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. இம்மாதிரி செய்திகளை வெளிக்கொண்டு வருவதற்கு செய்தித்தாள்களைத் தவிர வேறு வழிகள் இருக்கவில்லை. இன்றைக்கு இருப்பது போல பல்வேறு ஊடகங்களெல்லாம் அப்போது கிடையாது.

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில்  இருதய ரெட்டியாரின் உறவினர்களைச் சந்தித்து அந்தக் குடும்பத்தினர் நன்றிகூர்ந்து பாராட்டிப் பேசியபோது கிட்டத்தட்ட இருபத்து மூன்று ஆண்டுகள் முன்பு நடந்த சம்பவங்கள் எல்லாம் கண்முன்னே நிழலாடியது. 

கடந்துபோன காலத்தில் செய்த பணிகளும், உழைப்பும் என்றைக்கும் வீண்போகாது என்பதை இன்றைக்கு முற்பகலில் இந்த சத்திப்பில் மீண்டும் உணர்ந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. 

 சில நன்றிகெட்ட சுயநல சக்திகளிலிடமிருந்து 
 நம்மை அப்புறப்படுத்திக்கொண்டு சாதாரண எளிய மக்களின் அன்பும் பரிவும் நன்றியும் தான் நம்மை வாழ வைப்பதோடு,  பொதுவாழ்க்கை தளத்தில் அக்கறையோடும், மகிழ்ச்சியோடும் இயங்க அதிகப்படியான உத்வேகத்தைத் தருகிறது.  மனத்திற்கு ஆறுதலும் மகிழ்ச்சியான நாளாகவும் இந்த நாள் அமைந்தது.



-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
11-07-2015

#KSR_Posts #KsRadhaKrishnan  #AgriculturistAgitation

No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...