Saturday, July 25, 2015

புதைந்து கிடக்கும் மாமதுரை -Madurai Archaeological Survey.




உலகின் பழமையான நகரங்களில் இன்றும் உயிரோட்டமாக உள்ள  நகரம் என்று மதுரையைச் சொல்லலாம். இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுகள், சிற்பங்கள், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள் என்று நூற்றாண்டுகளைக் கடந்த  மதுரையின் காலங்காலமான வளர்ச்சியை பல ஆதாரங்களைக் கொண்டு அறியமுடிகிறது.

சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், நெடுநல்வாடை, தேவாரம், திருவிளையாடற் புராணம்,போன்ற இலக்கிய மற்றும் புராண நூல்களில் மதுரையின் சமூகம், கலாச்சாரம், அரசியல், மதங்கள், வாழ்வியல் பண்புகள் மற்றும் உட்கட்டமைப்புகள் குறித்த பலதரவுகள்  நிறைந்து காணப்படுகின்றன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணிகளை பற்றிய பதிவை கடந்த 23-07-2015 அன்று பதிவிட்டிருந்தேன். கீழடியில் ஆய்வு செய்துவரும் தொல்லியல் வல்லுநரான திரு.வி.வேதாச்சலம், “மதுரையில் கடைத் தெருக்களுக்குள் உள்ள பகுதியை அகழாய்வு செய்யவேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்திச் சொல்கிறார்.

அகழாய்வு சான்றுகளில் இதுவரைக்கும், சங்ககாலம், சாதவாகனர்களின் காலம், பாண்டிய, சோழ, விஜயநகர நாயக்கர்களின் காலம்,  ரோமானிய நாணயங்கள், சிலைகள், தாமிரத் தட்டுகள் மைக்ரோ லித்திக் கருவிகள், கல்வெட்டு ஆவணங்கள், செப்புப் பட்டயங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காவிரிப் பூம்பட்டிணம், காஞ்சிபுரம், கொற்கை, அரிக்கமேடு, கரூர், உறையூர் ஆகிய பகுதிகளில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த நகரங்களைக் காட்டிலும் பழமையான மதுரையில் பாண்டியர் கால கட்டமைப்புகள் பல நாயக்கர் மற்றும் பிரிட்டிஷ் கால கட்டமைப்புகளால் மண்ணில் புதைந்து இருக்கக் கூடும். அவற்றை ஆய்வு செய்ய முற்படும்போது பழமையான மதுரையின் பல சான்றுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

பிரிட்டிஷ் காலத்தில் துவரிமான் மற்றும் அனுப்பாண்டி பகுதிகளில் மேற்கொண்ட அகழாய்விலும், 1981ம் ஆண்டுமதுரையின் பழங்கா நத்தம், கோவலன் பொட்டல் பகுதிகளில்  மாநில அகழ்வாராய்ச்சித் துறை மேற்கொண்ட ஆய்விலும் பல முதுமக்கள் தாழிகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சோழர்களின் ஆட்சியின் கீழ் மதுரை சோழபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்கச் சோழனுக்கு ‘திரிபுவன வீர தேவன்’ என்று முடிசூட்டுவிழா மதுரையிலே நடைபெற்றிருக்கிறது.   கால ஓட்டத்தில் பரந்த நகரமாக மதுரை மாறியிருந்தாலும் ஒன்றுபட்ட இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மதுரை ஒரு முக்கியமான இடமாகவே இருந்துள்ளது.

பல சமயங்களையும், பல வெளிநாட்டுப் பயணிகளையும் ஆதரித்தும், உபசரித்தும் தமிழகத்தின் கலாச்சாரத் தலைநகரமாகத் திகழ்ந்த மதுரையின் தொன்மையான தடயங்களை ஆய்வு செய்வதின் மூலம் வளர்ச்சி என்ற பெயரில் அழிக்கப் பட்டுவரும் பண்பாட்டுச் சிறப்புகளைக் காப்பாற்றமுடியும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-07-2015

மதுரை பற்றிய தொடர்புடைய என்னுடைய பதிவுகள்

1 : http://ksr1956blog.blogspot.in/2015/02/blog-post_12.html

2 :  http://ksr1956blog.blogspot.in/2015/02/blog-post_66.html

No comments:

Post a Comment