Saturday, November 14, 2015

நெல்லைக்கு ஓர் அடையாளம் - அரசன் மெஸ்





நெல்லைக்கு ஓர் அடையாளம் - அரசன் மெஸ் ___________________________________________ நெல்லைக்குச் சென்றால் நண்பர் பிரபு மனோகரன் அவர்களுடைய பிரபு அசைவ ஹோட்டலில் மட்டன் சுக்கா வருவல் கறி சாப்பிட சுவையாக இருக்கும். அவருடைய நேரடிப் பார்வையிலே தயார் செய்யப்படுகின்றது. இன்றைக்கும் நல்ல ஆடுகளைத் தேர்ந்தெடுத்து உணவுக்குப் பயன்படுத்துகிறார்கள். பிரபுஹோட்டல் சுக்காவையும் கிரேவியையும் சோற்றில் பிணைந்து சாப்பிட்டாலே பிரியாணியை விட சுவையாக இருக்கும். எண்ணெய் வழிய வழிய இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் சாப்பிடுவது உண்டு. திருநெல்வேலி டவுணில் உள்ள திமுக பிரமுகர்களான மறைந்த சூர்ய நாராயணன் மற்றும் துவாரகா லாட்ஜில் உள்பக்கம் இருக்கும் நம்பி ஆகியோருடைய உணவு விடுதிகள் சைவ சாப்பாட்டுக்கு பிரபல்யமானது. இங்கெல்லாம் வைகோ அவர்களும், டி.ஏ.கே.இலக்குமணன், முன்னாள் தி.மு.க மாவட்டச் செயலாளர் மஸ்தான், ஏ.எல்.எஸ், புளியங்குடி பழனிச்சாமி, கா.மு.கதிரவன், ச.தங்கவேலு போன்றவர்களோடு சென்று சாப்பிட்டதும் உண்டு. தினகரன் ஏட்டின் நிறுவனர் மறைந்த கே.பி.கே அவர்கள் நெல்லைக்கு வரும்பொழுது இங்கிருந்து சில நேரங்களில் சாப்பாடு வாங்கிவரச் செய்வார். கோவில்பட்டியிலிருந்து நெல்லைக்குப் பயணிக்கும்பொழுது, தச்சநல்லூர் புறவழிச்சாலையில் அமைந்திருக்கும் அரசன் மெஸ்ஸில் கிடைக்கும் மண்பானை சோறும், மீன் மற்றும் கருவாட்டுக் குழம்பு சுவையாகவும், ஆரோக்கியத்துக்கு உகந்ததாகவும், மலிவான விலையிலும் கிடைக்கும். இப்படி கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு என்று ஒவ்வொரு நகரத்திலும் அந்த வட்டார மண்வாசனைச் சுவையோடு உணவு விடுதிகள் உள்ளன. அந்த சுவையான உணவுவிடுதிகள் மாதிரி சென்னையில் இல்லையே. எங்களைப் போன்ற தென்மாவட்ட வாசிகளுக்கு நெல்லையும் மதுரையும் தான் சாப்பாட்டுக்கும் ருசிக்கும் பிரசித்தம். அதுவும் மண்பானைச் சமையல் நெல்லையிலிருந்து கன்னியாகுமரி வரை ஒரு வாடிக்கை. அளவாகத் தண்ணீர் ஊற்றி ,அரிசியை இத்தனை நிமிடங்கள் என்று ஊறவைத்து, கொதிக்கும் உலையில் போட்டு வடிப்பதின் பக்குவம் தான் இந்த ருசிக்குக் காரணம். ரசிகமணி டி.கே.சி சோற்றை எப்படி வடிக்கவேண்டும், வத்தக்குழம்பு எப்படி செய்யவேண்டும், தோசைக்கு எந்த அரிசியை உபயோகிக்க வேண்டும், எப்படி மாவு பதமாக அரைக்க வேண்டும், இட்லிக்குக்கு எப்படி மாவு அரைக்கவேண்டும் என்பதையெல்லாம் விவாதப்பொருளாகவே பேசுவது உண்டு. உணவும் அன்றாட மனிதர்களுடைய பழக்கமும் வாடிக்கையுமாகும். இது ஏதோ சாப்பாடு பிரச்சனை என்று நினைத்துவிடக்கூடாது. இந்த அரசன் மெஸ்ஸைப் பற்றிச் சொல்லும்பொழுது, வெறும் வருமானத்திற்கு மட்டுமில்லாமல். வந்தவர்கள் வயிறாற சாப்பிட்டு நிறைவாகச் செல்லவேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கமாக இருக்கின்றது. இதை நடத்துபவர்கள் பெரிய வசதிபடைத்தவர்களும் கிடையாது. பசிப்பிணி நீக்கும் மருத்துவன் இல்லம் போல வந்தவர்கள் பசியை ஆற்றி திருப்தியுடன் திரும்புவதைப் பார்த்துத்தான் இந்த அரசன் மெஸ் உரிமையாளர் குடும்பம் மகிழ்ச்சி அடைகின்றது. இப்படிப்பட்ட பெரிய மனம் வசதிபடைத்தவர்களுக்குக் கூட வராது. அவர்களுடைய கடமையையும் பணியையும் பாராட்டவேண்டும். -கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 14-11-2015. #NImiravaikkumNellai #KsRadhakrishnan #KSR_Posts

No comments:

Post a Comment

‘’*தூக்குக்கு தூக்கு*’’

‘’*தூக்குக்கு தூக்கு*’’                இராண்டாம் பதிப்பு வெளிவருகிறது.