சென்னை சாலைகளில் டிராம்:
-----------------------------
ரயிலுக்கு அடுத்தப்படியாக மெட்ராஸ்வாசிகளுக்கு அறிமுகமாகியது, மினி ரயிலைப் போல சாலைகளில் வளைந்து நெளிந்து ஓடிய #டிராம் வண்டிகள்.
1877இல்தான் #மெட்ராஸ்வாசிகளுக்கு டிராம் வண்டி அறிமுகமானது. ஆனால் அப்போதெல்லாம் குதிரை இழுத்துச் செல்லும் டிராம் வண்டிதான் புழக்கத்தில் இருந்தது. மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.
இதன் பலனாக மே 7, 1895இல் சென்னை நகர வீதிகளில் முதன்முறையாக எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடின. இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் டிராம் ஓடுவது அதுதான் முதல்முறை. அந்த சமயத்தில் லண்டனில்கூட எலெக்ட்ரிக் டிராம் அறிமுகமாகவில்லை. எப்படி இது தானே ஓடுது.. ஏதாவது செய்வினை வெச்சிருப்பாய்ங்களோ.. என்று நம்ம ஆட்கள் மிரண்டு போய் இதில் ஏற மறுத்ததால், சில காலம் வரை ஓசிப் பயணம் அழைத்துச் சென்று அவர்களின் அச்சத்தை போக்கியிருக்கிறார்கள்.
வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பாரிமுனை, சென்ட்ரல் ரயில் நிலையம், மவுண்ட் ரோடு, ராயப்பேட்டை, மயிலாப்பூர் என பல தடங்களில் டிராம் வண்டிகள் இயக்கப்பட்டன. இதற்க்கு மக்களிடம் நல்ல கிராக்கி இருந்தது. நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் பேர் இந்த வண்டிகளைப் பயன்படுத்தினார்கள். துறைமுகத்திற்கு சரக்குகள் கொண்டு செல்லவும் டிராம் வண்டிகள் பயன்படுத்தப்பட்டன.
மெட்ராஸ் மக்களுக்கு வரமாய் வந்த டிராம் வண்டிகள், அதை இயக்கிய லண்டன் நிறுவனத்திற்கு சாபமாய் மாறிவிட்டது. இதனை இயக்க அதிகப் பணம் தேவைப்பட்டதால், டிராம்களால் வரும் வரவை விட செலவு அதிகமாகிக் கொண்டே போனது. ஒருகட்டத்தில் நிறுவனத்தையே விற்க வேண்டிய நிலை வந்துவிட்டது. அப்படியே அது இரண்டு நிறுவனங்களுக்கு கைமாறியது. ஆனால் நிலைமை மாறவில்லை. விளைவு, 1953, ஏப்ரல் 11ந் தேதி நள்ளிரவுடன் மெட்ராசின் டிராம்கள் கடைசியாக ஓடி ஓய்ந்தன.
இப்படி சாலையிலேயே விதவிதமாக பயணித்துக் கொண்டிருந்த மெட்ராஸ்வாசிகளை ஒருநாள் அண்ணாந்து பார்க்க வைத்தார் ஒரு பிரெஞ்சு சமையல்காரர்.
No comments:
Post a Comment