Thursday, June 21, 2018

மஞ்சனத்தி மரம்

கிராமப்புறங்களில் ஒரு காலத்தில் மஞ்சனத்தி செடியும், மஞ்சனத்தி மரங்களும் தென்படும். அவையாவும் இப்போது அரிதான காட்சிகளாக மாறிவிட்டது.

#மஞ்சனத்தி
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-04-2018

மஞ்சனத்தி....

எங்க வெவசாய நெலங்கள இந்த கோடை காலத்துலயே பக்குவம் பண்ண ஆரம்பிச்சிருவோம். தையில அறுவடை முடிஞ்சதுன்னா மானாவாரிக்காடுகள்ல
பெருசா பயிர் ஒன்னும் இருக்காது.

காட்டை பண்படுத்துற வேலை தான் 
முக்கியம்.கர்சக்காட்டையும் இந்த 
மஞ்சனத்தி செடியையும் பிரிக்கவே
முடியல.இங்க சீமைக்கருவை கூட
அந்தளவுக்கு இருக்காது.

உழவு உழுக வாய்க்குறதுக்கு முன்னாலேயே இந்த மஞ்சனத்திய 
காலி பண்ணியாகனும். ஒருகாலத்துல 
இந்தச்செடிய சுத்தி ரெண்டடி ஆலத்துக்கு 
தோண்டுவோம். வேர் தெரியும் அது வரை
வெட்டிச் செடிய தூக்கிப்போட்டுட்டு நெலம் பூராம் இதை செய்ற வரை ஒரு நா
ரெண்டு நா காயவிடுவோம்.

மூனா நாத்துல (மூன்றாம் நாள்) அந்தக்
குழியில சோத்து உப்பை ஒரு கிலோவ 
போட்டு மேல மண்ணத் தள்ளி குழிய
மூடிறுவோம்.அதோட அத்து போகும்னுறது எங்க நம்பிக்கை.ஆனா
என் அனுபவத்துல சொல்றேன்.அந்த
வருச வெவசாயத்துக்கு இடைஞ்சலா 
வேணும்னா இருக்காது.மறு வருசம்
அந்த இடத்துல திரும்ப துளிர்க்கும்.

இப்ப இதுக்குன்னு 2 -4 டி சோடியம் சால்ட்னு பவுடர் ஒன்னு வந்துருக்கு.
இதுக்கு பேரே கடையில வெவசாயிக 
மத்தியில மஞ்சனத்தி மருந்துன்னு தான்
பேரு.செடி பக்கத்துல லேசா தோண்டி 
இந்த பவுடர பேஸ்டாக்கி சுத்தி தடவி
ஒரு ஈரத்துணிய கட்டி வச்சா பட்டு 
போகுது.

ஆனா இந்த மஞ்சனத்தி வேர் நெலம்
பூரா பரவியிருக்குமோ என்னமோ தெரியல.எங்கிட்டோ நிலத்துல மண்ண
விலக்கி மேலே தலை காட்டிடும்.

முன்னால வளர்ந்த வரைக்கும் வெட்டி
வெறகாக்குவோம் வெறகு அடுப்பு 
காலத்துல.இப்ப வெறகுக்கு வேலையில்லை.அந்த காலத்துல இது இல்லைன்னா வருசம் முந்நூத்தி அறுபத்தஞ்சு நாள் அடுப்பு எரிஞ்சிருக்காது.

இப்ப ஜே.சி.பி.ய வச்சி தூரோட பிடுங்கி எரிஞ்சாலும் நெலத்துல இருந்து வந்துக்கிட்டே தான் இருக்கு.முந்தி ஓடை காட்டுல,வரப்புகள்ல ஒன்னு ரெண்டு மரத்தை தப்ப விடுவோம்.

அது பெருசாக பழம் கொடுக்கும்.கருப்பா
அழகா மூட்டை மாதிரி அன்சைஸ்ல பழம்
இருக்கும்.சுவையும் கூட. பெரிய 
மரங்கள் பலகைகள்,கலப்பைகளுக்கு 
ஆகும்.

கெணத்துகள்ல, காடுகள்ல மண்டிக்
கெடக்கும் மஞ்சனத்தியையும் எங்க கர்ச காட்டு மக்களையும் இயற்கை எந்த
காலத்துலயும் பிரிக்க விடல.அது ஏன்னு
தெரியல.

இப்ப இந்த மஞ்சனத்தியில இருந்து மருந்து,ஹெல்த் டானிக் எல்லாம் தயாரிக்கிறதா சொல்றாங்க.மஞ்சனத்தியோட மகத்துவம் ஒரு நாள் வெளிப்படலாம்.அன்று அது கொண்டாடப்பலாம்.பயிரிட வேண்டிய நிலை கூட வரலாம்.காலம் பதில்
சொல்லும்.
-




No comments:

Post a Comment