Wednesday, November 21, 2018

எழுவர் விடுதலையும், தமிழக ஆளுநரின் விசித்திரமான ஏற்றுக் கொள்ளமுடியாத அறிக்கையும்.*

எழுவர் விடுதலையும், தமிழக ஆளுநரின் விசித்திரமான ஏற்றுக் கொள்ளமுடியாத அறிக்கையும்.*
---------------------------------
ஜெயலலிதாவின் 1991-96 ஆட்சிக்காலத்தில் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் கட்டிய வழக்கில் விதிகளை மீறி அனுமதி அளித்ததற்காக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் அவருக்கு எதிராக கடந்த 2000ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கோரத் தாண்டவத்தை ஆடினர். அந்த தீர்ப்பின் காரணமாக காரணமாக தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அருகே கோவை வேளாண்மை கல்லூரி பேருந்தை தீவைத்து எரித்ததால் மூன்று மாணவிகள் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி தீப்பிழம்புகளுக்கு பலியாகி பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த துயர சம்பவத்திற்கு காரணமான அதிமுகவை சேர்ந்த நெடுஞ்செழியன், இரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவர் தண்டிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தற்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1,858 ஆயுள் தண்டனை கைதிகளை அரசியலமைப்பு பிரிவு 161ன்படி விடுதலை செய்ய ஆளுநரிடம் தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால், அதில் 1,627 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்கு தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், இராஜீவ் படுகொலையில் தொடர்பில்லாத முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், இரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேர் தண்டிக்கப்பட்டு ஆயுள் கைதிகளாக 27 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தின் வெவ்வேறு சிறைகளில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய அனைத்து தரப்பிலிருந்தும் கோரிக்கை வைத்தும், தமிழக அரசு பரிந்துரைத்தும் அவர்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விடுவிக்கவில்லை என்பது அனைவரையும் வேதனைப்படுத்தியது.
இதில் மேலும் வேதனையான விடயம் என்னவென்றால் கேட்பவர்களை கேணையர்களாக நினைத்துக் கொண்டு “*தமிழக ஆளுநர் ஏன் இவர்களை விடுவித்தார்*” என்று ஒரு விசித்திரமான, ஏற்றுக் கொள்ளமுடியாத அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் விவசாயக் கல்லூரி மாணவிகளை எரிக்க வேண்டுமென்ற நோக்கம் இந்த மூவருக்கும் இல்லையென்றும், கும்பலாக சேரும்போது உணர்ச்சி வேகத்தில் பேருந்துக்கு தீவைத்துவிட்டனர். அதனால் அந்த மாணவிகள் இறந்துவிட்டனர் என்று ஒரு அரசியல் சாசனப் பொறுப்பிலிருக்கும் கவர்னராக இருப்பவர் சாதாரணமாக இத்தகைய அறிக்கையை வெளியிட்டிருப்பது எந்த விதத்தில் நியாயம். இப்படியும் தீங்குகளுக்கு முட்டுக்கொடுத்துப் பேசுகிறார் என்றால் இவரிடம் என்ன நேர்மையான போக்கை நாம் எதிர்பார்க்க முடியும். ராஜீவ் படுகொலையை சரியாக புலனாய்வும் செய்யவில்லை, விசாரணையும் செய்யவில்லை என்று அந்த கொடுந்துயரம் நடைபெற்ற காலத்திருந்து இந்த கருத்துகளை வைத்து வருகிறேன். இந்த கோணத்தில் ஏன் புலனாய்வையும், விசாரணையும் நடத்தவில்லை என்பது தான் நம்முடைய வினா. இந்த விடயங்களையெல்லாம் மறுக்கப்பட்டு ஒரே பார்வையாக விசாரணையும், புலனாய்வையும் நடத்தியதில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படவில்லை என்பது தான் ஒரு வருத்தம்.
நாம் எழுப்பிய வினாக்கள் இதோ.
*ராஜீவ் கொலை வழக்கில் விடை தெரியாத கேள்விகள்*
1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி அந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டாம் என சொல்லியும்; ஏன் அங்கு கூட்டம் நடத்தப்பட்டது. ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?
2. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி.சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்?
3. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ் காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?
4. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்தில் இருந்த சர்க்யூட் ஹவுசுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?
5. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்ல வேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?
6. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்கு உள்ளானதா? இன்று வரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?
7. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்? யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?
8. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் தா.பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?
9. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?
10. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?
11. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார். உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக் காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?
12. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?
13. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத், ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார். அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்? என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?
மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டு இருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு!
14. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவே இல்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?
15. சிவராசனும், தாணுவும் இராஜீவ் வளையத்தில் செல்ல யார் உதவினார்கள் ? என்பது பற்றியும் இதுவரை தெரியவில்லை.
16. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?
17. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப்படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.
18. காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?
19. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?
20. பொட்டுவும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத்துறை கேட்டதாகச் சொல்லப்படுவது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?
21. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?
22. சிறப்பு விசாரணைக் குழு அமைத்து சந்திரா சுவாமி, சுப்பிரமணியன் சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி ஆகியோரையும் ராஜீவ் கொலை வழக்கில் விசாரிக்க வேண்டும் என ஜெயின் கமிஷன் கூறியுள்ளதே? விசாரணை நடைபெற்றதா? அதன் முடிவு என்ன?
23. அரசாங்கமே ஏதும் ஒரு முடிவுக்கு வராத போது சுப்பிரமணிய சுவாமி மட்டும் விடுதலைப் புலிகள் தான் ராஜிவை கொன்றார்கள் என கூறியதன் மர்மம் என்ன? பல கோணங்களில் விசாரிக்கப்பட வேண்டிய ஒரு கொலைப் பின்னணியை விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்ற ஒற்றைக் கோணத்தில் மட்டும் நடத்த வற்புறுத்திய கார்த்திகேயனின் நோக்கம் என்ன?
24. சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமன் இந்திய புலனாய்வு துறையின் இயக்குனராக இருந்த எம்.கே. நாராயணன் ராஜீவ் கொல்லப்பட்ட அந்த இடத்தில் பிடிக்கப்பட்ட வீடியோ டேப்பை தராமல் மறைக்கிறார் என்ற பகிரங்கக் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன?
25. திருச்சி வேலுச்சாமி கூற்றுபடி சுப்ரமணியன் சாமி இராஜீவ் படுகொலைக்கு ஒரு சிலநிமிடங்களுக்கு முன்பே இராஜீவ் கொலை செய்யப்பட்டார் என்று கூறியதை பற்றி ஏன் இதுவரை விசாரிக்கவில்லை.
26. ராஜீவ் கொலை வழக்கில் ஜெயின் மற்றும் வர்மா கமிஷன் அரசாங்கத்துக்கு கொடுத்த முக்கியகோப்புகள் அடங்கிய (File No. 1/12014/5/91-IAS/DIII) எங்கே? சந்திரா சாமியின் நெருங்கிய நண்பரும் அன்றைய பிரதம மந்திரியுமான நரசிம்மராவ் அந்த முக்கியக் கோப்புகளை அழித்ததின் மர்மம் என்ன? எந்த முக்கிய நாடுகளையும், நபரையும் காப்பதற்காக அந்த கோப்புகள் அழிக்கப்பட்டது?
27. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்டவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் ஸ்ரீ பெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தியது உண்மையா?
28. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக் கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக் கூடாது?
29. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை” என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன்கொலை செய்ய வேண்டும்?
30. இந்தியா மற்றும் தமிழகத்தில்தான் தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்பதுபிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற தவறைச்செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான முட்டாள் தனத்தையாபிரபாகரன் செய்தார்?
31. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனித வெடிகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில்இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தி தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? இது சம்பந்தப்பட்டவர்கள் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு?
32. தனு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீ பெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று சொல்லப்பட்டது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்படவில்லை?
33. ராஜீவின் பயணத் திட்டத்தை தீட்டிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?
34. வெளிநாட்டு உளவு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சங்கேத மொழியில் சந்திராசாமி மற்றும் சுப்ரமணியன் சாமியிடம் ராஜீவ் கொலை பற்றி நடத்திய உரையாடல் என்று பதிவு செய்து வைத்திருந்த முக்கிய ஆதாரம் ஒன்று பிரதமர் அலுவலக உயர் அதிகாரி தொலைத்துவிட்டதாக கூறுவது எப்படி?
35. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அந்த இடத்தில் கூட்டம் வேண்டாம் என்று மறுத்த போதும், டெல்லி மேலிடத்தில் இருந்த மார்கிரெட் ஆல்வா அங்கு தான் நடத்தியாக வேண்டும் எனக் கூறியது உண்மையா என்று விசாரிக்கப்பட்டதா?
36. பெல்ட் பாம் (வெடிகுண்டு) தயாரிக்கப்பட்டது எங்கே, யார் தயாரித்தது, என்று இதுவரையில் விசாரிக்கவே இல்லை என சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமன் தெரிவித்திருக்க வெடிகுண்டுக்கு பயன்படுத்தப்பட்ட பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக சொல்லி பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை அறிவித்து 22 ஆண்டுகள் சிறையில் அடைத்திருப்பது எதனால்?
37. ராஜீவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக விடை தெரியாத கேள்விகள் இது போன்று பல இருக்க காவல் துறை அதிகாரிகளின் விசாரணையில் ஒப்புக் கொண்டதாக சொல்லி ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்குவது உலகில் எந்த நாடுகளின் நீதித்துறையும் பின்பற்றாத ஒரு நடைமுறையை இந்தியாவில் பின்பற்றுவது நியாயத்திற்கும், நேர்மைக்கும் உகந்ததா?
இந்த வினாக்களை எல்லாம் கவனத்தில் கொண்டு உண்மையை அறிய முற்பட்டார்களா என்பது தான் நமது கேள்விக்குறி.
Image may contain: fire and outdoor

No comments:

Post a Comment

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things that makes you sad.

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things th...