Friday, December 20, 2019

02.மார்கழி: " *பரமன் அடி பாடி* "

02.மார்கழி:

 " *பரமன் அடி பாடி* "

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ? பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன், "அடி" பாடி,
நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி,

மையிட்டு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக் குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி,
உய்யும் ஆறு என்று எண்ணி, உகந்து, ஏல்-ஓர் எம் பாவாய்.

புற அலங்காரத்தில் அதிக நேரம் செலவழிக்காமல், அக அலங்காரம் செய்து பார்க்கச் சொல்லுகிறாள் கோதை.

அலங்காரம் எப்பமே மற்றவர்கள் பாத்து வியக்கணும்-னு தானே செய்துகொள்கிறோம்? சரி தான்! தப்பில்லை! ஆனா அலங்காரத்தை உங்களுக்காகவும் செஞ்சிக்கலாமே?-ன்னு கேக்குறா!

* மையிட்டு எழுதோம் = கண்ணில் மை பூசிக்காம, மை வண்ணனைப் பூசிப்போம்!
* மலரிட்டு நாம் முடியோம் = இதயத்தில் ஒரு துளசி தளம் போதாதா! ஜென்ம ஜென்மத்துக்கும் மணக்குமே!

மத்தவங்களுக்காக வருஷம் முழுக்க அலங்காரம் செஞ்சிக்கறீங்க! மார்கழியிலாவது, நோன்பிலாவது, உங்களுக்காகவும் அலங்காரம் செஞ்சிக்குங்க! உங்களை நீங்களே மதிச்சாத் தானே! - என்று சொல்கிறாள்!

இதோ கோதை தரும் அலங்கார டிப்ஸ்..............
 
* நெய்யுண்ணோம் பாலுண்ணோம் = நெய்யும் பாலும் ஆயர்களின் அடிப்படை உணவு! அதையே உண்ண மாட்டோம், நோன்பு முடியும் வரை
 
* நாள் காலே நீராடி = அதிகாலையில்  நீராடி

 *செய்யாதன செய்யோம்* = எது செய்யத் தகாதது-ன்னு அடி மனசுக்கு நல்லாவே தெரியும்! ஆனா மேல் மனசு தான் வலிந்து வலிந்து நியாயம் கற்பிச்சிக்கும்! 
ஏன்னா மேல் மனசில் நாம இருக்கோம்! அடி மனசில் அவன் இருக்கான் (அந்தர்யாமி, உள்ளத்துள்ளான்)!
அதனால் எப்போதாவது ஒரு முறையாவது, அடி மனது என்ன தான் சொல்லுது-ன்னு காது கொடுத்தாச்சும் கேப்போம்! அது செய்யாதே-ன்னு சொல்வதைச் செய்யாம இருக்க முயற்சிப்போம்!
 
 *தீக் குறளை சென்று ஓதோம்* !

குறளை = குறுகிய

குணங்களில், குறுகிய குணம் = குறளை-கோள் சொல்லுதல்!

கோள் சொல்லுதல் மிகவும் கெட்ட குணம்!
சனிக் கோள் கூட ஏழரை ஆண்டில் ஓடி விடும்!
ஆனால் இந்தக் கோள் மனசுக்குள் வந்து உட்கார்ந்து விட்டால்...?

ஒருவரின் வளர்ச்சியை எதிர்க்கவும் துப்பில்லை! வளரவும் முயற்சி இல்லை!
இப்படித் தன்னையும் தாழ்த்தி, அவரையும் தாழ்த்தி, யாருக்குமே எந்தப் பயனும் இல்லாமல் போவதற்கு முதல் படி தான் இந்தக் "கோள்" சொல்லுதல்!
அவர் சொல்லாதவற்றை எல்லாம் சொன்னதாக ஏற்றிச் சொல்லுதல்!
உள் ஒன்று வைத்து, புறம் ஒன்று பேசல்! இந்த உறவு நம்முள் கலவாமை வேண்டும்!

 *ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி* = ஐயம்= நம்மை ஒத்தவர்களுக்குக் கொடுப்பது!
பிச்சை= நம்மை விட மேல் நிலையில் உள்ள (துறவிகள்)/ கீழ் நிலையில் உள்ள இரப்பவர்களுக்குக் கொடுப்பது! ஆக மொத்தம் கொடுக்கணும்!
அன்பு வேணும் வேணும்-ன்னா அன்பு வராது!
அன்பைக் "கொடுத்தா" அன்பு "வரும்"!

அதனால் ஆந்தனையும், ஆகும் தனையும், முடிஞ்ச வரை, கொடுக்கவும் செய்வோம்! நல்ல செயலைக் கொடுக்கலீன்னா கூட, நல்ல சொல்லையாவது கொடுப்போம்!
 
இவ்வளவு தான் அக அலங்கார டிப்ஸ்! அக-அலங்காரம் செஞ்சிக்கிட்டா அக(அல)ங்காரம் அகன்று விடும்!

உய்யும் ஆறு என்று எண்ணி = இது நமக்கு உய்யும் வழி!
உகந்து = அதனால் விதியே-ன்னு (நோன்புக்காக மட்டும்) செய்யாது, உகந்து செய்வோம்!
ஏல்-ஓர் எம் பாவாய் = பொண்ணுங்களா (எம் பாவாய்)

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு, செய்யும் கிரிசைகள் கேளீரோ? = உலக மக்களே, எங்கள் நோன்புக்கு வேண்டிய சமாச்சாரங்களை (கிரியை) நாங்கள் சொல்லிட்டோம்! எங்கள் வார்த்தையைக் கேளீரோ? (கேட்டு, உதவிகளும் செய்யீரோ?)

கிரிசை = கிரியை = கர்ம யோகம் = என்ன அழகா கிரிசை-ன்னு நாட்டுப்புறத் தமிழ் 
ஆன்மீகத்துக்கு வாய்ப் .பேச்சு மட்டும் போதாது! கிரிசையும் வேணும்! செயலும் செய்யணும்!
* பக்தி என்னும் சோறு!
* அது கூட ஞானம், கர்மம் (அனுஷ்டானம்) ரெண்டுமே தொட்டுக்கணும்!

பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் = பாற்கடலில் மெல்லத் தூங்கறானாம் அவன்! பைய = மெல்ல
பையத் துயின்ற "பரமன்" = அவன் தான் "பரமன்"! "பரம்"பொருள்! "பர"ப்பிரும்மம்!

 *நாராயண "பரோ" தேவம், விஸ்வம் நாராயணம்* !
 *விஸ்வம் நாராயணம் தேவம்! அக்ஷரம் "பரமம்" பதம்* !
அக்ஷரம் "பரமம்" பதம் = அகர "முதல" எழுத்தெல்லாம்....* இப்படி தமிழர் மறையும், வட வேதமும், ஒருங்கே சொன்னதை ஆண்டாள் சொல்ல,
* ஆண்டாள் சொன்னதையே, மூன்று ஆச்சார்யர்களும் (சங்கரர், இராமானுசர், மாத்வர்) "பரம்"பொருளாகச் சொல்கிறார்கள்.

பரமன் "அடி" பாடி = அவனைப் பாடாது, அவன் "அடி"யைப் பாடுவோம்!
ஏன்னா அவனைக் காப்பதே அவன் அடிகள் தான்!
நாம் தான், அவன் திருவடிகளை, நெத்தியில் (நாமம்) போட்டுக்கறோம்-ன்னா,
அவனும் தன் திருவடிகளை, தானே நெத்தியில் போட்டுக்கறான்! 🙂

ஏன் இப்படி? பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு...உன் செவ் "அடி", செவ்வித் திருக்காப்பு!

No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...