Monday, December 16, 2019

செய்தி_ஊடகங்கள் - எங்கே செல்லும் இந்தப் பாதை?

#செய்தி_ஊடகங்கள் - எங்கே செல்லும் இந்தப் பாதை?
————————————————
இன்றைக்கு செய்தி ஊடகங்கள் உண்மையான பிரச்சனைகள் புறந்தள்ளப்பட்டு, அவசியமற்ற சில சங்கதிகளை பெரிய பிரச்சனைகள் என்று வெளிச்சம் போட்டு காட்டி திசை திருப்புகின்றனர். விவாதங்கள் என்ற பெயரில் தங்களது விருப்பத்திற்கேற்றவாறு அந்த விவாதங்களை நடத்தி, கருத்தாக்கம் இல்லாமலும், சரியான தீர்வுகளையும் கண்டறியாமல் ஒப்புக்கு இரவு நேரங்கில் கூடி சம்பாணஷனைகளை நடத்தி கலைகின்ற நடவடிக்கை தான்.
என் சிறுபிராயத்தில் பார்த்து வளர்ந்த உலகம் மாறிவிட்டது. ஊடகம் மட்டும் மாறாமல் இருக்குமா? அதிநவீன தொழில்நுட்பத்தில் மீடியா என்ற வார்த்தையின் எல்லையும் பரப்பும் விரிந்திருக்கிறது. ஆனால் அதன் கடமையும் பொறுப்பும் சமூகத்தையும் மக்கள் நலன்களையும் புறக்கணித்த நிலையில் பயணிக்கிறதோ என்ற கவலையும் வருத்தமும் மனதில் தேங்கியிருக்கிறது. தமிழகத்தில் காட்சி ஊடகங்களின் நிலை கவலைக்குரியதாக மாறிவருகிறது. பல ஆண்டுகளாக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுடன், பத்திரிகையாளர்களுடன் தொடர்பில் இருப்பவன் என்ற முறையில் சில அக்கறைகளை தெரிவிக்கவேண்டியிருக்கிறது.
முன்பொரு காலத்தில் வார, திங்கள் இதழ்கள் தாம் நினைத்ததை வெளியிடும் அச்சுப்  பதிப்புகளாக வெளியாகின. அன்றாடச் செய்திகளுக்கு நாளிதழ்களைத்தான் நாட வேண்டும். நாளிதழ்களுக்கு வேறு முகம். பிற இதழ்களுக்கு வேறு உள்ளடக்கம். சிறுகதைகள், தொடர்கள், கவிதைகள், கேள்வி பதில்கள், துணுக்குகள் என்று களைகட்டும்.  நாளிதழ்களைப் படிப்போர் வேறு நாட்டமுடையவர்கள். நாளிதழ்களிலேகூட உள்ளூர்ச் செய்திக்கு தனியிடம் தரப்பட்டிருக்காது. உள்ளூர் மாவட்ட இணைப்பிதழ்களும் வரத்தொடங்கவில்லை.  ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, ராணி, தேவி போன்ற இதழ்களை வாங்குவோரின் விருப்பம் வேறு. மீறிப்போனால் அவ்விதழ்களில் அவ்வாரத்தின் தவிர்க்க முடியாத நிகழ்வினைப் பற்றிய தலையங்கமோ ஒரு கட்டுரையோ இருக்கும்.எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. 
பத்திரிகையை எழுத்துக்கூட்டிப் படித்த தலைமுறை வாட்ஸ் ஆப்பில் செய்தியைப் பார்க்கிறது. பேஸ்புக்கில் உள்ளூர் பிரச்சினை முதல் உலகப்பிரச்சினை வரை கருத்து சொல்கிறார்கள். கட்டற்ற சுதந்திரமான காலம். உண்மைதான். தனிமனித சுதந்தரம் தேவைதான். இதே நிலை தனிமனிதர்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் சமூக ஊடகங்களில் தொடர்கிறது. இன்று இணைய தொடர்பும் ஸ்மார்ட்போன்களும் வைத்திருக்கிற ஒவ்வொருவரும் ஊடகர்களாக மாறியுள்ளனர். பொதுவெளிகளில் ஒரு விஐபியைப் பார்க்கும் அவர்கள், அதன் சாட்சியாக செல்பியாக, புகைப்படங்களாக உடனே எடுத்து வெளியிடுகிறார்கள். அதுவே காட்சி ஊடகங்களின் செய்திகளுக்கான தீணியாகவும் மாறிவருகிறது.
ஒடிசா மாநில காவல்துறை கூடுதல் தலைவர் மனோஜ் சாப்ரா ஒரு பத்திரிக்கையில் எழுதிய பத்தியில், “கடுமையான தணிக்கைகளையும் தகவல்கள் உண்மையா என்பதற்கான சோதனைகளையும் தாண்டி வரவேண்டியிருந்தது. தற்போது அதற்கு போட்டியாக உருவெடுத்துள்ள சமூக ஊடகங்கள் புதிய திசை மாற்றத்தை உருவாக்கியுள்ளன. இதுவொரு பேரழிவுத் தொழில்நுட்பமாகிவிட்டது. தற்காலத்தில் எல்லோருமே செய்திகளைப் படிக்கும் வாசகரோ தொலைக்காட்சி பார்வையாளரோ மட்டுமல்ல. அவரே தகவல்களையும் செய்திகளையும் உருவாக்குபவராக இருக்கிறார். டிஜிட்டல் வெளியில் செய்திகளின் உண்மைத்தன்மையைப் பரிசோதிக்க வழியே இல்லை” என்று கவலையுடன் குறிப்பிடுகிறார்.
தற்கால ஊடகங்களின் நிலையைப் பற்றி சுட்டிக்காட்டும் அவர் மிர்சா காலிப்பின் கவிதையை எடுத்துக்காட்டுகிறார். ஒவ்வொரு முறை கண்ணாடியைத் துடைத்தாலும், அதில் முகத்தைக் காணும்போது அழுக்காகவே தெரிகிறது. முகத்தை சுத்தமாக்காமல் கண்ணாடியைத் துடைத்து என்ன பயன்? ஆயினும் வாழ்க்கை முழுவதும் கண்ணாடியைத் துடைத்துக்கொண்டே இருந்தேன். காட்சி மாறவேயில்லை என்கிறது அந்தக் கவிதை.
இன்றைய நிலையை இதைவிட தெளிவாக சொல்லிவிடமுடியாது. தமிழகத்தில் பெருகியுள்ள தனியார் காட்சி ஊடகங்களில் நேர்மையற்ற உண்மைக்குப் புறம்பான பல செய்திகளை அன்றாடம் பார்க்கமுடிகிறது. வாட்ஸ் ஆப்பில் வெளியாகும் எடிட் செய்யப்படாத காட்சிகளை செய்திகளில் ஒளிபரப்புகிறார்கள். உள்ளூரில் நடக்கும் குற்றச்செயல்கள் அப்படியே வெளிவருகின்றன. எத்திக்ஸ் என்பதை மண்ணில் புதைத்துவிட்டதைப்போன்ற உணர்வு.
வைரமுத்து – சின்மயி மீடூ பிரச்சினையை தீவிரமாக தமிழ்ச் சூழலில் தீவிரமாக விவாதிக்கப்பட்ட தருணத்தில், சின்மயி பேஸ்புக்கில் லைவ்வாக பேசுவதை அப்படியே லைவ் செய்தார்கள். ஒன்றுமே புரியவில்லை. தனக்கான பிரத்யேகமான சமூக ஊடகப்பரப்பில் தன்னுடைய சொந்த கருத்துகளை அல்லது புகார்களை தெரிவிக்கும் ஒருவருடைய பேச்சை லைவ் செய்வது ஊடக தர்மமா என்று தெரியவில்லை. அதை ஆதாரமான ஒரு செய்தியாகக் கொள்ளமுடியுமா. அதிலிருந்து மக்களுக்கு ஊடகங்கள் என்ன கருத்தை தெரிவிக்க விரும்புகின்றன.
இந்தப் பக்கம் வந்தால், தமிழில் பெருகியுள்ள செய்தி சார்ந்த பரபரப்பூட்டும் யூடியூப் சேனல்கள். பெருமைப்பட முடியவில்லை. பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் பசியில், அவர்கள் வைக்கும் தலைப்புகள் கவலை அளிக்கின்றன. பேசுவதற்கு கூசும் வார்த்தைகளை தலைப்பாக வைக்கிறார்கள். இந்தக் கட்டுரையில்கூட குறிப்பிடமுடியாத அவச்சொற்கள். ஒரு சாதியினர் பற்றி அவதூறாகப் பேசும் பிற சாதித் தலைவர்களின் பேச்சுகளை எடிட் செய்யாமல் யூ டியூப் சேனல்களில் வெளியிடுவதன் மூலம் எளிதாக ஒரு கலவரத்தை உருவாக்கிவிடமுடியும். மத இணக்கத்தைக் கெடுத்துவிடமுடியும். அதற்கான வாய்ப்புகளை யூடியுப் சேனல்கள் உருவாக்குகின்றன.
சமூக வெளியில் சின்ன பிழை நேர்ந்தாலும், ஒரு பிரபல மனிதரை கேவலப்படுத்திவிடமுடிகிறது. சமூக ஊடகங்களில் இருக்கிற எல்லோருமே விமர்சகர்களாக, சிறு தவறும் செய்யாத மாமனிதர்களாக, குற்றம் செய்யாத குணவான்களாக தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள். அபத்தமாக இருக்கிறது.
நடிகர் சிவகுமார், ஏதோவொரு சூழலில் செல்பி எடுக்கும் செல்போனை தட்டிவிடுகிறார். அவ்வளவுதான், அவருடைய சாதியில் இருந்து அவர் பேசும் பேச்சில் இருந்து விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவரே தவறு என்று உணர்ந்து அறிக்கை வெளியிட்ட பிறகும் அவரை விடவில்லை. எனக்குப் புரியவில்லை. என்ன மனநிலையில் நாம் இருக்கிறோம். மன்னிக்கும் மனநிலையை மறந்துவிட்டோமோ. நாம் செய்யாத ஒரு தவறை அவர் செய்துவிட்டாரா… மகாத்மாகவே இருக்கட்டும். தவறுகள் நேராதா. தினமும் சமூகவெளியில், அலுவலகத்தில், குடும்பத்தில் என தனிமனித வாழ்வில் எத்தனையோ அபத்தங்களையும் குற்றவாளி  மனிதர்களையும் சகித்துக்கொள்கிற, கண்முன்னால் நேர்கிற குற்றங்களை எதிர்த்துக் கேட்கத் திராணியற்ற நாம்தான் பிரபலங்களைப் பற்றி வாய்கிழியப் பேசுகிறாம். இது சரியான அணுகுமுறையா… யோசிக்கவேண்டும்.
வாட்ஸ்ஆப்பில் தினமும் ஆதாரமற்ற அவதூறுகளை அதிகம் வெளிவருகின்றன. அந்த செய்திகளைக்கூட விசாரிக்காமலேயே பத்திரிகைகள் வெளியிடத் தொடங்கிவிட்டன. நான் முந்தி, நீ முந்தி என்கிற ரேட்டிங் போட்டியில் மக்கள்தான் பணயக்கைதிகளாக மாறுகிறார்கள். அவர்களுக்குத் தேவையற்ற அனாவசியமான நூற்றுக்கணக்கான செய்திகளை ஊடகங்கள் திணிக்கின்றன.
சேலம் ஆத்தூரில் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்ட சிறுமி ராஜலெட்சுமியை ஊடகங்கள் மறந்துவிட்டன. அவரைப் பற்றிய கரிசனம் யாருக்குமில்லையா. அந்த ஏழைச் சிறுமியின் உயிருக்கு மதிப்பில்லையா.. டெல்லியில் நடந்தால்தான் கண்டுகொள்வோமா… ராஜலெட்சுமி கொலையுண்ட செய்தியைவிட சர்க்கார் பட சர்ச்சைதான் தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாக மாறிப்போனது. தமிழகத்தில் சென்னைக்கு வடக்கே சோழவரம், உளுந்தூர்பேட்டை, செட்டிநாடு, கோவில்பட்டி, கயத்தாறு என்ற 5 இடங்களில் விமான நிலையங்கள் கடந்த ஒரு நூற்றாண்டாக உள்ளன. இன்னும் அவை விமான நிலையங்களாகவே கருதப்பட்டு பேணப்படுகின்றன. இதற்கு பராமரிப்பு செலவும் வீணாக செய்யப்படுகிறது. இந்த விமான நிலையங்களை சரக்கு போக்குவரத்து, விமானப் படை பயிற்சியகம், விமானம் கட்டுதல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால், வெறுமனே நிலமாகவே ஓடுதளத்தோடு இருக்கின்றது. இம்மாதிரியான பிரச்சனைகள் தமிழகத்திலுள்ள ஆட்சியாளர்கள், பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு கூட தெரியாது. இப்படிப்பட்ட வெளிச்சத்துக்கு வராத முக்கிய பிரச்சனைகள் தமிழகத்தில் 100க்கும் மேல் உள்ளது. இதை ஒரு சிறு பிரசுரமாகவே வெளியிட்டுள்ளேன். இப்படியான தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை எல்லாம் பேசுவதற்கு ஊடகங்களுக்கு மனமில்லை. புலனாய்வு ஊடகவியல் – இதழியல் என்பதெல்லாம் நடிகையின் வாழ்க்கையில் நடந்தது என்ன? போன்ற கருமாந்திரங்களையே இன்றைக்கு புலனாய்வுக்கான ஊடக இலக்கணமாக திகழ்கிறது. வாழ்வாதாரப் பிரச்சனைகளில் புலனாய்வு என்பதில் அக்கறைப்படுவதுமில்லை. அதனால் அவர்களுக்கு ரேட்டிங்கும், உரிய விளம்பர வருமானமும் கிடைக்காது என்பதற்காக மேற்சொன்ன தமிழ்நாடு பிரச்சனைகளில் எல்லாம் கவனம் செலுத்த மாட்டார்கள். மக்களும் இதற்கு ஒரு காரணம் தான். சில திடீர் தலைவர்கள் எந்த தியாகமும், தகுதியும் இல்லாமல் பொது வாழ்வில் நுழைந்து அவர்களுக்கும் ஊடக வெளிச்சத்தை தாராளமாக ஏற்படுத்திக் கொடுக்கும் வேலையைத் தான் இன்றைய ஊடகங்கள் செய்கின்றன. இப்படியான சில திடீர் தலைவர்களுக்கு இந்த ஊடக வெளிச்சங்களால் தான் தங்களுடைய இருப்புகளையும் காட்டிக் கொள்கிறார்கள். இரவுநேர விவாதங்கள் என்ற சம்பாஷனைகளில் பிரச்சனைகளின் தன்மையை தெரியாத சிலரை எல்லாம் எதற்கு அழைத்து முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதும் கமுக்கமாக உள்ளது. இதுவே இன்றைய ஊடகங்களின் 24 மணி நேர செய்திச்சேவையாக உள்ளது.
களநிலவரம் தெரியாத செய்தி ஊடகங்கள் ஒரு நாள் மக்களால் புறக்கணிக்கப்படும். இன்றே அது மெல்ல நடக்கத் தொடங்கிவிட்டது. ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு செய்திகளை ஆர்வத்துடன் பார்த்தவர்கள், சீரியல்கள் தேவலாம் என்று பேசுகிறார்கள். இன்றைய செய்தி ஊடகங்களின் பின்னணி அரசியலை மக்கள் தெரிந்துவைத்துப் பேசுகிறார்கள். இந்த செய்தி ஏன் இப்படி வருகிறது… என்ற மக்களின் கேள்விக்குப் பின்னால் உள்ள அரசியல் வெளிப்படையாக தெரியத் தொடங்கிவிட்டது.
டெல்லியில் நடந்த ஒரு விருதுவிழாவில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறிய கருத்து நினைவுகூரத்தக்கது. “நம் நாட்டில் பத்திரிகை துறைக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது. சமூக சீர்திருத்தம், விடுதலைப் போராட்டம் ஆகியவற்றுடன் பத்திரிகை துறைக்கு நெருங்கிய தொடர்பும் பங்களிப்பும் இருக்கிறது. 1819 ம் ஆண்டு ராஜாராம் மோகன்ராய் கொண்டு வந்த சம்வாத் கெமுதி முதல் மகாத்மா காந்தி கொண்டு வந்த ஹரிஜன், யங் இந்தியா வரையில் சமூகத்தையும், தேசியத்தையும் வளர்த்ததில் அச்சு ஊடகங்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியால் ஊடகங்களின் எல்லை பரந்து விரிந்து விட்டது. சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்துவிட்டது” என்றார்.
பிரிட்டனில் சமூக ஊடகங்கள் இளைஞர்களின் மனநலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்ற ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இளைஞர்களின் மனநலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூவலைதளங்களின் தரவரிசையில் இன்ஸ்டாகிராம் மிக மோசமானது என்று தெரியவந்தது. இதுபற்றிய செய்தி பிபிசி தமிழ் இணையதளத்தில் வெளியானது. ''சமூக ஊடகங்கள் இளைஞர்களிடையே மனநல பிரச்னையை தூண்டுவதாக இருக்கலாம்" என்று அறிக்கை எச்சரித்துள்ளது.
சமூக ஊடகங்களை நன்மைக்கான ஒரு கருவியாக பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ள அதே நேரத்தில், இன்ஸ்டாகிராம், சுய வெளிப்பாடு மற்றும் சுய அடையாளம் ஆகிவற்றின்மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுததியிருப்பதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.
ஆய்வில் வெளியாகியுள்ள கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், மனநலத்தை பாதிக்கும் பிரச்சனைகளை சரிப்படுத்துவதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை சமூக ஊடகங்கள் அறிமுகப்படுத்தவேண்டும் என்று பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மனநல பாதிப்பு உள்ளவர்களை சமூகஊடகங்கள் அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான உதவியை பற்றிய தகவல்களை மறைமுகமாக அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
சமூக ஊடகங்களின் தாக்கம் ஒருபுறம், மறுபுறத்தில் செய்தி என்ற பெயரிலான யூ டியூப் சேனல்களின் கட்டற்ற சுதந்திரம் எல்லாமே வளர்ச்சியுடன் கலந்த கவலையாகவே தெரிகிறது. சிலர் அவசியற்றைதை  ஊதிப்பெருக்கு
வதிலேயே குறியாக இருப்பார்கள் சமீபத்தில் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட பிரச்சனைகளே இல்லாத சமாச்சாரங்கள், உப்புக்கு சப்பில்லாத பேட்டிகள் பெரிதாக்கக்பட்டு நேரத்தை வீணடித்து இதுதொடர்பான செய்திகளில் வெளியிடப்பட்ட யூ டியூப் காட்சிகள், டிரோல்கள், மீம்ஸ்கள் ஆராயப்பட வேண்டியவை. இவை நாகரிக சமூகத்தின் அடையாளமா என்று நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.  
Issues are non - issues here, Non - issues are issues here.
என்ன செய்ய? இது தான் இன்றைய நிலை.....
விதியே விதியே தமிழக சாதியே, என் செய்ய நினைத்தாயோ?

#ஊடகங்கள்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
16-12-2019.
#KSRadhakrishnan_postings
#KSRpostings


No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...