Wednesday, March 11, 2015

நில கையகப்படுத்தும் மசோதா நிறைவேறியது -Land Acquisition Bill (2)




விவசாயிகளுக்கு எதிரான, நாடுமுழுவதும் பல கண்டனங்களுக்கு உள்ளான ”நிலம் கையகப்படுத்தும்  மசோதா” நேற்றைக்கு நாடாளுமன்ற மக்களவையில் ஒன்பது திருத்தங்களோடு நிறைவேற்றப்பட்டது.

எதிர்கட்சிகள் ஐம்பதுக்கும் மேலான திருத்தங்கள் வழங்கியும், சிவசேனா போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்தும், அ.தி,மு.க ஆதரவோடு மோடி அரசு இம்மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
ஆனால், மாநிலங்கள் அவையில்  இந்த மசோதாவினை நிறைவேற்ற மத்திய அரசு பல நெருக்கடிகளுக்கு உட்படும்.

2011ல் மன்மோகன்சிங் ஆட்சிகாலத்திலே நிலம் கையகப்படுத்தும் மசோதா  கொண்டுவரப்பட்டது. இந்தப் புதிய மசோதாவின் படி, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குதல், மாற்று நிலம் வழங்குதல் போன்ற பல விஷயங்கள் சேர்க்கப்பட்டன.

நில உரிமையாளரின் ஒப்புதல், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் செய்ய குறிப்பிடும் பிரிவுகளை பலமிழக்கச் செய்யும் வகையில் இம்மசோதா உள்ளது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. மத்தியில் ஆளும் பா.ஜ.க கட்சியின் கூட்டணிக்கட்சிகளே இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

நேற்றைக்கு (10-03-2015) வாக்கெடுப்பின் போது எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன, கூட்டணிக்கட்சியான சிவசேனா வாக்களிக்காமல் புறக்கணித்தது.

மத்திய அரசு கொண்டுவந்த இந்த மசோதாவில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் :

1.நிலம் கையகப்படுத்தும் போது அப்பகுதி விவசாயிகள் 70சதவிகிதம்பேரிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்பதிலிருந்து குறிப்பிட்ட திட்டங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

2.சமூக கட்டமைப்பு திட்டங்கள் இந்த பட்டியலிலிருந்து நீக்க்கப்பட்டுள்ளது.

3.பள்ளி, மருத்துவமனை போன்ற திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் போது 70சதவிகித  விவசாயிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

4.இரயில்பாதை, நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள நிலங்களை கையகப்படுத்தும் போது, சில கட்டுப்பாடுகளும், நெறிமுறைகளும் விதிக்கப்படும்.

5.நிலம் கையகப்படுத்துதல் பற்றிய முறையீடு குறித்து, உரிமையாளர் உயர்நீதி மன்றத்தை அணுகத் தேவையில்லை என்றும், மாவட்ட நிர்வாகத்திடம் முதலில் முறையிட வேண்டும் என்ற சில உப்புச்சப்பற்ற திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதற்கும் அதிமுக ஆதரவு.

அப்பாவிகள் யாரென்று பார்த்து, யார்மீது கைவைக்கலாம் என்றால் ஏழைபாழையாக இருக்கும் விவசாயிதான் இந்த அரசுகளின் கண்ணுக்குப் புலப்படுகின்றான். விவசாயியின் அடி மடியில் கைவைத்துவிட்டது மத்திய அரசு.

-கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
11-03-2015.

No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...