Sunday, March 29, 2015

விமர்சன வித்தகரும், சிறியன சிந்தியா தி.க.சி. -Tee.Ka.cee






 நம்மிடம் வாழ்ந்த முக்கிய இலக்கிய கர்த்தாவாக இருந்த தி.க.சி அவர்கள் மறைந்து ஒராண்டு காலம் நிறைவு பெற்றுவிட்டது.
பல எழுத்தாளர்களை தாமரை இதழ் மூலம் ஊக்குவித்தவர் தி.க.சிவசங்கரன்.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடும் குணமுடையவர். பல நேரம் இதனால் தி.க.சிக்கும், ஜெயகாந்தன் அவர்களுக்கும் சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்றன.

கி.ராவின் கதையே ”தாமரையில்” வெளியிட மறுத்த போது, நா.வானமாமலை, என்.டி.வானமாமலை போன்றோர் முன்னிலையில் பெரிய விவாதமே நடந்தது. நவீன இலக்கிய போக்கில் திறனாய்வு என்ற வாசலைத் திறந்து வைத்தவர் தி.க.சி.

நெல்லையில் பிறந்து, கேரளத்தில் தொழிற்சங்கப் பணியாற்றி, சென்னையில் தாமரை இதழில் ஆசிரியராகவும், சோவியத் நாடு இதழில் பணியாற்றியும், தன்னுடைய இறுதிகாலத்தில் நெல்லை டவுணில் உள்ள தன்னுடைய சுடலைமாடன் தெரு வீட்டிலேயே வாழ்ந்து மறைந்தார்.

நேற்றைக்கு அவருடைய முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, அவரோடு ஏற்பட்ட பழக்கத்தாலும், நெருக்கத்தாலும் தான். என்னுடைய “நிமிரவைக்கும் நெல்லை” நூலினை விரும்பி, நேசித்து பல சமயம் பலரிடம் என்னைக்குறித்து   அவர் பாராட்டிப் பேசியதெல்லாம் செவிகளுக்கு வந்ததுண்டு.

 தன் முகநூல் பதிவில், அண்ணன் எஸ்.ஏ. பெருமாள் ( Sap Marx​ )  குறிப்பிட்டது போல  “ஒரு கல்லைக்கூட கார்டு (போஸ்ட் கார்டு) எழுதி எழுத்தாளனாக்கிவிடும் அற்புத மனிதர் தான் திகசி” .

தி.க.சி.யின் கால் காசு கடுதாசி பல விசயங்களைப் பேசும். பொதுவுடைமைவாதியாக, தொழிற்சங்கத் தலைவராக, கனிந்த மனம்கொண்டவராக, இளைஞனுக்கும் தோழனாக, ஏகலைவன்களை உருவாக்கும் துரோணராக, தத்துவ மேதையாக, நிறைவாக வாழ்ந்த மாமேதை எங்கள் பாசத்துக்குரிய தி.க.சி. அவர்கள்.  அவருடைய எழுத்துகளும் , கடிதங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றைச் சொல்லும். நம்முடைய “கதைசொல்லியின்” ஆலோசகர். இப்படி அவருடைய புகழ்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

காலம் எத்தனை வேகமாகச் சுழல்கிறது. தி.க.சி யை என்றும் தமிழ்கூறும் நல்லுலகம் நினைவில் கொள்ளும்.

*
கே.எஸ்.இராதாகிருஸ்ணன்.
29-03-2015.

நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்ட புதிய தலைமுறை. திரு.வேங்கட பிரகாஷ்  அவர்களின் பதிவையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

***
தி.க.சி.

விழா இரவு 8மணிக்கு முடிந்ததும் திரு.கே.எஸ்.ஆர். என்னையும் (வேங்கட பிரகாஷ்) திரு.கல்கி ப்ரியனையும் காரிலேற்றி அசோகா ஓட்டலுக்குக் கொண்டு சென்றார். நான்கு பேர் அமரக்கூடிய மேசையில் மூன்று பேர் அமர்ந்திருக்கிறோம். ’’காபி சாப்பிடுவோம்’’ என்றார். ஒரு சந்தேகத்தில்தான் கேட்டேன் ’‘என்ன மாமா இங்க?’’ அவர் சொன்னார்….’’இல்ல இங்கதான் தி.க.சி.யக் கூட்டிட்டு வந்து சாப்பிடுவோம். இன்னைக்கு அவர் ஞாவகமாவே இருக்குல்ல…..அதான் !’’ என்றார்.

தி.க.சி.காப்பியென்று ஒரு காப்பியை இன்று சுவைத்தோம். குடித்ததும் எழுந்துவிடவில்லை. ஏனென்றால் அந்த நான்காம் இருக்கையில் தி.க.சி. இன்னும் காபி குடித்து முடித்திருக்கவிலை…..!

......................
தி.க.சி. குறித்துப் பேச ’கதைசொல்லி’கள் திரு.கே.எஸ்.ஆர்., மற்றும் திரு.கழனியூரன் பணித்திருந்தனர். எழும்பூர் இக்சா மையத்தில் நேற்று மாலை நிகழ்ச்சி சிறப்புற நடந்தேறியது. என்னை எழுதவைக்கிறார்கள் பேசவைக்கிறார்கள்…. இன்னும் என்னென்னவோ தெரியவில்லை….. தி.க.சி. என்பது அடையாளம்தானே…. ஒவ்வொருவருக்கும் வாழ்வில் தி.க.சி.க்கள் கிடைப்பார்கள்! எனக்கு இவர்கள். நன்றி… ’நீங்களும் வாசிச்சி நானும் வாசிக்கவா..!’ என்று கலவரத்தோடுதான் ஒவ்வொரு மேடையிலும் திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்டோரைப் பார்க்கிறேன்.

ஆனால் அவர்களோ சிரித்த முகமென்கிறார்கள்! ஊடகப் பழக்கம்….! இலக்கியவாதிகளோடு உறவு இனிக்கத்தான் செய்கிறது. இந்த இனிப்பெல்லாம் ‘ உங்கள் ஆட்சியில் நீங்கள் மட்டும் என்ன செய்தீர்களாம்? ‘ என்பது போன்ற கசப்புக்கேள்விகளில் கரைத்துவிடத்தானா…?!

இனி நான் பேசியது:

‘’ திறனாய்வுத்தென்றல் தி.க.சி. அவர்களின் முழுமையான விமர்சனக் கட்டுரைத் தொகுப்புநூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருக்கின்ற, கதைசொல்லியைத் துயிலெழுப்பியிருக்கும் கரிசல்குயில், தாமரை இலைத் தண்ணீர் போல் அரசியலில் வீற்றிருக்கும் அன்பர், (தாமரை ஆசிரியர் தி.க.சி.யை விரும்பும் மனிதர் அரசியலில் அப்படித்தானே இருக்க முடியும்!) பெருமதிப்பிற்குரிய கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களே, நான் எப்போதும் விரும்பிக் கேட்கின்ற பேச்சுக்குச் சொந்தக்காரர், சொற்களை அருவியாய்க் கொட்டும் அன்புநிறைந்த ஐயா திருப்பூர் கிருஷ்ணன் அவர்களே, வரலாறு வாழ்த்துகின்ற பணிகளாகத் தொடர்ந்தாற்றிவரும் பெருமதிப்பிற்குரிய கழனியூரன் அவர்களே, ஐயா செந்தில்நாதன் அவர்களே, ஐயா முகம் மாமணி அவர்களே, ஐயா தருமராசன் அவர்களே, காவ்யா பதிப்பகத்தார் ஐயா சண்முகசுந்தரம் அவர்களே மற்றும் அரங்கில் முன்னமர்ந்திருக்கும் பேரன்புள்ள இலக்கிய ஆர்வலர்களே வணக்கம்.

என் இலக்கிய வாழ்வு நிறைவாழ்வென்றுதான் நான் கருதுகிறேன் என்பது திகசி தன்னைப் பற்றிச் சொன்னது. இந்த மனநிறைவு ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இருக்கவேண்டும். மிகச்சிலரைத் தவிர பெரும்பாலானோர்க்குச் சில புத்தகங்களை எழுதியதுமே வாழ்நாள் முழுவதும் இந்த மனநிறைவென்பது வந்துவிடுகிறது. திகசியின் விமர்சனங்களை முழுமையாகப் படித்தால்தான் சமூகத்திற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நல்கக்கூடியவனாக ஒரு எழுத்தாளன் எப்படி மிளிர வேண்டும் என்பது தெரியும் என்று கருதுகிறேன்.
அந்த இலக்கணத்தில் நின்று இயங்கி பிறகு மனநிறைவு வந்தால் அதுவே உண்மையான மனநிறைவாக இருக்கமுடியுமென்று கருதுகிறேன்.

பொதுவில் யாரும் விரும்பாத ஒன்று விமர்சனம். தப்பித்தவறி ஒருவர் ஒரு விமர்சனத்தை விரும்புகிறாரென்றால அதில் அவரைப் பற்றிப் பாராட்டுவார்த்தைகள் இருக்குமென்பது திண்ணம். இடித்துரைக்கும் சொற்களை எந்தக் கண்களும் காணத்துடிக்காது எந்தக்காதுகளும் கேட்கத்துடிக்காது.

தொடக்கத்தில் வல்லிக்கண்ணன் பணியாற்றிய கிராம ஊழியன் இதழில் திரைப்பட விமர்சனங்களை எழுதிவந்தவரை பேராசிரியர்.நா.வானமாமலை இலக்கிய விமர்சனப் பாதைக்கு இட்டுச்செல்கிறார். ஆனால் இன்றைக்கு அவர் இருந்தால் திரைப்படங்களுக்கு மட்டும் விமர்சனங்களைத் தொடர்ந்து எழுதுங்கள். நாட்டை அது பாழ்படுத்துவது போல் வேறெதுவும் பாழ்படுத்தவில்லை என்று நாம் மன்றாடிக் கேட்டுக்கொண்டிருப்போம்.

ஜெமினி எஸ்.எஸ்.வாசன் தயாரித்த மங்கம்மா சபதம் திரைப்படத்தில் பாலுணர்வைத் தூண்டக்கூடிய காட்சிகள் நிரம்ப இருந்தது கண்டு கொதித்துப்போய்த் தமிழகத்தின் பெரும் பண்பாட்டை மண்ணாக்கும் மசாலாத்தனமான படம் என்ற வகையில் எழுதிவிட்டார். அந்த இதழுக்கு அதுவரை அளிக்கப்பட்டு வந்த விளம்பரத்தை நிறுத்திவிட்டார் வாசன். ஆனால் அத்தோடு இவர் நிறுத்தினாரா என்றால் இல்லை. விகடன் நிறுவனம் நடத்திவந்த நாரதர் இதழில் நடிகையர் பயன்படுத்தும் வாசனைத்திரவியங்கள் குறித்தெல்லாம் கவர்ச்சியாக எழுதப்படுவதையும் கண்டித்தார் திகசி. விளைவு அந்த இதழ் இவர்களுக்கு அனுப்பப்பட்டதேகூட நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நா.வானமாமலை தி.க.சி.யை மடைமாற்றிவிடுகிறார். சரி அங்கும் என்னதான் ஆயிற்று?! மு.வ.வின் நூல்கள் தமிழகத்தில் பரபரப்பாக விற்பனையாகிக்கொண்டிருந்த காலகட்டமல்லவா அது? அவரது 80 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கி ஊன்றிப் பயின்று ஆழ்ந்த விமர்சனக் கட்டுரைகளை ஜனசக்தியில் தொடர்ந்து எழுதினார். பின்னர் அதைத் தொகுத்து அவருக்கே அனுப்பியும் வைத்தார். வந்த பதிலென்ன தெரியுமா? ஓர் அஞ்சலட்டையில் ஒற்றை வரி. ‘உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள் நன்றி’ என்று மட்டுந்தான்.

நான் இப்பெருமகனார்களைக் குறை சொல்லவில்லை. ஆனால் விமர்சனத்தை எதிர்கொள்ளும் பாங்கு இப்படித்தான் இருந்திருக்கிறது. இத்தனைக்கும் மென்மையான மனிதர்தான் திகசி. நெல்லையிலிருந்து மூன்று மைல் ஆற்றிலிறங்கி நடந்துசென்று அக்கரையில் வண்ணார்பேட்டையில் அப்போது குடியிருந்த டி.கே.சியோடு அளவளாவி வருவார்களாம். அவரும் இவரைப் போல் மென்மையானவர்தானே. வயதில் மிக இளையவர்கள் என்றாலும் பேரன்போடு டிகேசி நடத்துவாராம். அடிப்படையில் திகசி மென்மையான மனிதரென்றாலும் விமர்சனம் என்று வந்துவிட்டால் கறார் தன்மை வந்துவிடும். கூடவே இருந்த வல்லிக்கண்ணனையும் விடவில்லை. ஜெயகாந்தனையும் விடவில்லை. நேர்மையாக அளவிட்டுச் சென்றுகொண்டே இருந்தார்.

விமர்சகர்கள் என்றாலே கசப்போடு பார்க்கும் போக்குதானே இருக்கிறது. காலம் கடக்கக் கடக்கத்தான் உலகம் விமர்சகர்களின் அளப்பரிய பணியைப் புரிந்துகொள்ளும்.

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி 20000 த்திற்கும் மேற்பட்ட இலக்கியத்தரம் வாய்ந்த கடிதங்களை எழுதியிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அப்படியாக இலக்கியத்தரம் வாய்ந்த கடிதங்களை வெறும் அஞ்சலட்டைகளிலேயே எழுதிக்குவித்தவர்கள் திகசியும் வல்லிக்கண்ணனும். தனது விமர்சனக் கட்டுரைகளின் வாயிலாக தி.க.சி.என்றென்றும் தனது பணியை ஆற்றிக்கொண்டே இருக்கிறார். இளைய தலைமுறையினர் தி.க.சி.யைச் சிக்கெனப் பிடித்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகிறேன். இந்த முழுமையான தொகுப்பை ’நம்மை விமர்சிக்கவில்லையே…. வேறு யார்யாரையோதானே விமர்சித்திருக்கிறார்’ என்ற எண்ணத்திலேனும் படித்துவிடவேண்டும்.

 படித்துமுடிக்கும்போது இந்த நூல் நம்மைச் செதுக்கி முடித்திருக்கும். ஒரு சிறந்த எழுத்தாளர் பிறந்திருப்பார்.  இந்நூலின் வாயிலாக தி.க.சி. என்றும் நம்மோடிருப்பார் நம்மைச் செதுக்கிக்கொண்டும்..! நன்றி..’’
- வேங்கட பிரகாஷ் .

No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...