Monday, July 17, 2017

பிரபாகரன் ரசித்துக் கேட்ட கழனியூரன் பேச்சு -Sundhara buddhan

பிரபாகரன் ரசித்துக் கேட்ட கழனியூரன் பேச்சு 

படி அமைப்பு, கதை சொல்லி, டிஸ்கவரி புக் பேலஸ் இணைந்து நடத்திய கழனியூரன் நினைவேந்தல் ஞாயிறன்று மாலை நடந்தது. கடந்த வாரத்தில் படி அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்ட நிகழ்வு. 

தோழர் ஆர். நல்லகண்ணு, கே.எஸ். ராதாகிருஷ்ணன், காவ்யா சண்முகசுந்தரம், மணா, மதுமிதா, வேங்கடபிரகாஷ், நெய்வேலி பாலு, வேடியப்பன் ஆகியோருடன் நானும் கலந்துகொண்டேன். மிக மனநிறைவான அஞ்சலியாக நடந்துமுடிந்தது. முதலில் பேசிய பத்திரிகையாளர் மணா, கிராமத்தில் போய் கதைகளையும் வரலாற்றுத் தகவல்களையும் மக்களிடம் கேட்டுத் தொகுப்பது என்பது மிகவும் சவாலான வேலை என்றார்.

 “ஊருக்குள் நுழைந்ததுமே நீங்க எந்த சாதி என்றுதான் கேட்பார்கள். ஒரு இஸ்லாமியராக இருந்துகொண்டு அவர் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டது ஆச்சரியமாக இருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அப்படி ஒரு கிராமத்திற்கு சென்றபோது கேமராமேன் என்ன சாதி என்று கேட்டார்கள். என்ன சாதி என்று சொன்னதும் இந்தக் கோயில் எங்கள் சாதிக்காரர்களுக்கானது. மற்ற சாதியினரை அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். நாங்கள் பேக்கப் செய்துகொண்டு வெளியே வந்தோம். இதுபோன்ற கடுமையான அனுபவங்களில்தான் பல நூறுக்கணக்கான கதைகளை கழனியூரன் தொகுத்திருக்கிறார்” என்று நினைவுகூர்ந்தார்.
 
கவிஞர் மதுமிதா, பல ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியில் ஒரு இலக்கிய நிகழ்ச்சி முடிந்து தன்னை வீடு வரை கழனியூரன் கொண்டுவந்துவிட்ட அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். சித்தர் பாடலுடன் பேச்சைத் தொடங்கிய  ஊடகவியலாளர் வேங்கடபிரகாஷ், மூன்று முறை கழனியூரனைச் சந்தித்த நினைவுகளைப் பற்றிப் பேசினார். 

அடுத்துப் பேசிய நான், புதிய பார்வை பத்திரிகையில் கழனியூரனைச் சந்தித்த நினைவுகளுடன் பேச்சைத் தொடங்கினேன். தமிழர்களுக்கு மறதி அதிகம். மறதி என்ற புதை மணலில் கழனியூரன் போன்ற எளியவர்களை இழந்துவிடக்கூடாது. கழனியூரனை மறப்பது என்பது மண்ணை மறப்பதாகும் பண்பாட்டை மறப்பதாகும் என்றேன். 

பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம், நாட்டார் வழக்காற்றியல் பற்றிய ஆரம்பகால வரலாற்றைச் சுட்டிக்காட்டினார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கிராவை சந்தித்தது பற்றியும், அடுத்து கழனியூரனுடன் சேர்ந்து நாட்டார் இலக்கியத்தில் செயல்பட்டது பற்றியும் குறிப்பிட்ட அவர், பல நூறு பக்கங்கள் கொண்ட நூல்களை வெளியிட்டும் யாரும் வாங்கவில்லை என்று வருத்தப்பட்டார். 

சொந்த பிரதாபங்களைப் பேசுவதுதான் எழுத்து என்ற நிலையில், யாருக்கும் தெரியாமல் நாட்டுப்புற இலக்கியத்துக்குப் பங்காற்றியவர் கழனியூரன் என்று பாராட்டினார். 

கே.எஸ். ராதாகிருஷ்ணன் பேச்சில் கோபம். கல்லூரியில் படிக்கும் காலத்தில் அறிமுகமானவர் கழனியூரன் என்று கூறிய அவர்,

“1972 ஆம் ஆண்டு  பாளையங்கோட்டையில் படித்துக்கொண்டிருந்தேன். அரங்கேற்றம் படத்தைப் பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியே வருகிறேன். அப்போது நீங்க ராதாகிருஷ்ணனா என்று கேட்டுக்கொண்டு ஒரு குரல். என் பெயர் அப்துல்காதர் என்றும், ஆசிரியர் பணிக்குப் படித்துவிட்டு வேலைக்கு முயற்சி செய்துவருகிறேன் என்று அறிமுகம் செய்துகொண்டார். அதுதான் எனக்கும் கழனியூரனுக்கும் முதல் சந்திப்பு” என்று நினைவுகளில் மூழ்கி எழுந்தார்.  

இலக்கியத்திலும் அரசியல் உலகிலும் நேர்மைக்கும் திறமைக்கும் மரியாதையில்லை என்றவர், இரா. செழியன்,  கழனியூரன் இருவரின் மரணங்களும் அண்மையில் தன்னை மிகவும் பாதித்த விஷயங்கள் என்றார்.

அரசியலைப்போலவே இலக்கியத்திலும் புறக்கணிப்பும் 
நிராகரிப்பும் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய கே.எஸ். ராதாகிருஷ்ணன், “நினைவேந்தல் நிகழ்வுக்கு வருவதற்குக்கூட மனமில்லையே” என்று வருத்தப்பட்டார். “எங்கள் வீட்டில் பிரபாகரன் தங்கியிருந்தபோது, அவருடன் பேசிக்கொண்டிருப்பார் கழனியூரன். பிரபாகரனுக்கு அவருடைய பேச்சு ரொம்பப் பிடிக்கும். இப்போதுதான் இந்த தகவலை முதன்முறையாகச் சொல்கிறேன்” என்று இதுவரை வெளிவராத தகவலைச் சொன்னார். 

நினைவேந்தல் நிகழ்வை அமைதியாக கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த தோழர் ஆர். நல்லகண்ணு மெல்ல பேச்சைத் தொடங்கினார்.  இருபது நிமிடங்கள் பேசினார். 

கழனியூரன் இஸ்லாமியர் என்று கடைசிவரை தெரியாது என்றார். “தென்காசிக்கு அருகில் இருக்கிறது கழுநீர்க்குளம். எனக்கு நன்றாக அறிமுகமான செவக்காடு. அதுவொரு மேட்டுக்காடு. மிளகாய் விளைந்து செவப்பாய் தெரியும். அந்த ஊரில் இருந்துகொண்டுதான் கதைகளைத் தொகுத்திருக்கிறார் கழனியூரன். அவருடைய இயற்பெயர் அப்துல்காதர். கிரா, திகசி போன்றவர்களுக்கு உண்மையான சிஷ்யராக இருந்திருக்கிறார் கழனியூரன்”” என்று பாராட்டியவர், கொஞ்சம் அரசியல் பக்கம் போய்வந்தார்.

“இங்கு அதிகமாக கூட்டம் வரவில்லை என்று வருத்தப்பட்டார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அந்த கவலை தேவையில்லை. சிறுகூட்டம்தான் பெரிய கூட்டத்திற்கான கருத்தை விதைக்கும். இன்று அரசியலில் என்னமோ நடக்கிறது. அரசியல் பேச வரவில்லை. ஆனாலும் சொல்லியாக வேண்டும். தீபாவுக்கு முதல்வராக வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஓபிஎஸ்சுக்கு இருக்கிறது. தினகரனுக்கு இருக்கிறது. எடப்பாடிக்கு இருக்கிறது. கழனியூரன் போன்றவர்கள் தன்னை முன்னிலைப்
படுத்திக்கொள்ளாமல் உழைத்தி ருக்கிறார்கள். அவருக்கு என் மரியாதையையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். 

பின்னர், எழுத்தாளர் குலசேகர், ஏக்நாத் மற்றும் மருத்துவர் ஒருவரும் கழனியூரன் நினைவுகளுடன் தங்கள் அஞ்சலியை தெரிவித்தனர். 

நெய்வேலி பாலு அவர்களின் தொகுப்புரை நினைவேந்தலை இயல்பாக நடத்த பேருதவியாக இருந்தது. மு. வேடியப்பன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...