Monday, February 17, 2020

#தமிழக பிரச்சினைகளை_முழுமையாகப்_ #புரிந்து_கொள்ளுங்கள்..



————————————————
#தமிழகத்தில் அரசியல் ரீதியாகவும், சமூகரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் சொல்வதற்கு எவ்வளவோ செய்திகள் இருக்கின்றன.  எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன.
இவற்றை எந்த அளவில் நாம் புரிந்து வைத்திருக்கிறோம் அல்லது புரிந்து கொள்ள முயற்சித்திருக்கிறோம்? அவற்றைப் பற்றிய நம்முடைய பார்வை என்னவாக இருக்கிறது? 

உதாரணமாக-தமிழகத்தில் காவேரிப் பிரச்சினை மிக முக்கியமானதொரு பிரச்சினைதான். முல்லைப் பெரியாறும் தமிழகத்தின்வாழ்வாதாரப்பிரச்சினை
தான். ஆனால் இந்தப் பிரச்சினைகள் மட்டுமே நம்மிடம் தொடர்ந்து சிக்கலாக இருப்பதாக  சிலர் பேசுகிறார்கள்.
தமிழக நதிநீர்ச் சிக்கலில் குமரி மாவட்ட நெய்யாறு, நெல்லை மாவட்டம் அடைவிநையாறு, செண்பகத்தோப்பு, விருதுநகர் மாவட்டம் அழகர் அணை, திண்டுக்கல் மாவட்டம் குடகனாறு, மஞ்சளாறு, கொங்கு மண்டலத்தின் ஆழியாறு பரம்பிக்குளம், பாண்டியாறு புன்னம்புழா,  சிறுவாணி,  பம்பாறு, அமராவதி, தென்பெண்ணையாறு, பாலாறு, பொன்னையாறு என பல நதி நீர்ப் பிரச்சினைகள் எண்ணிக்கையில் 50க்கும் மேல் உள்ளன.பலவேற்காடு ஏரி என உள்ளன.
அதற்கு நாம் அதற்க்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. இருப்பினும் காவேரியை காவிரிஎன்றுஎழுதுவதும்,மேகதாட்டை
(ஆடுதாண்டி)  மேகதாது   என்று குறிப்பிடுவதும்,   புரிதல்   இல்லாத தன்மையாகும்.

அதேபோல ராஜீவ்காந்திபடுகொலையில் அப்பாவிகள் ஏழு பேர்  சிறையில்  வாடுகின்றனர். பேரறிவாளனின் தியாகம் ஒப்பற்றது மறுக்கவில்லை. அது ஒற்றைப் பிரச்சினை அல்ல.அதே  வழக்கில்  மதுரை மத்திய சிறையில்  இருக்கும் ரவிச்சந்திரன், வேலூரில் சிறையில் இருக்கும் நளினி, முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் போன்றவர்களின் பெயரை பலர் உச்சரிப்பதே இல்லை என்பது கவலைக்குரிய செய்தியாகும். 
இப்படி  பல தமிழக சிக்கலகள்......
ஒவ்வொரு பிரச்சினையிலும் தெளிவான பார்வையும்  அணுகுமுறையும் தமிழகத்தில்  பலரிடம்  பல்வேறு பிரச்சினைகளில்  இல்லாமல் இருப்பது ஆரோக்கியமான    அணுகுமுறை கிடையாது. 

இதற்குக் காரணம் என்னவென்றால் வாசிப்பும், புரிதலும் இல்லாமல் இருப்பதே. 

இதேமாதிரி தான்    தொல்லியல் ஆய்விலும் நடக்கிறது. அண்மையில் தொல்லியல் அபூர்வமாக உணரப்பட்டு, பொது வெளிக்கு அறிமுகமாகி பெரிதும் பிரபலமாகிவிட்ட கீழடி ஆய்வு  பெற்ற ஊடக மற்றும்  அதிகார   மையங்கள் சார்ந்த  வெளிச்சத்தை வெறெந்த அகழாய்வுகளும் பெறவில்லை. அதற்காக கீழடி ஆய்வை நாம் எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை.
இதேமாதிரி தொல்லியல் ஆய்வில் முன்பு வெளியே தெரியவந்த ஆதிச்ச நல்லூர், அரிக்கமேடு, கொடுமணல், கொற்கை, அழகனகுளம்.பூம்புகார், கரூர், பழநி போன்று எத்தனையோ தொல்லியல் முக்கியத்துவம்  வாய்ந்த   இடங்கள் இருந்தும் அவற்றை நாம் உரிய அளவுக்கு மதிப்பளித்து போற்றத் தவறிவிட்டோம். 
இதேமாதிரி தான் பல பிரச்சனைகளிலும் ஒன்றை மையப்படுத்தி பலவற்றைத் தவற விட்டிருக்கிறோம்.

எந்தவொரு  பிரச்சினையிலும் அதனை முழுமையாகத் தெரிந்துகொண்டு பேசுவதுதான் நல்லது. பொதுவாழ்வில் உள்ளவர்கள் அன்றாடம் மேலோட்டமாக தொலைக்காட்சிச் செய்திகளை மட்டும் பார்க்கிறார்கள். தினமும் வெளிவரும் செய்தித் தாள்களைக் கூட, முழுமையாக வாசிக்காமல், அதை ஒரு புரட்டுப் புரட்டி போட்டுவிட்டுப் போய்விட்டால் போதும் என்று நினைப்பவர்களிடம்   என்ன சொல்ல முடியும்? எப்படி அரசியல், சமூக நிகழ்வுகளில் முழுமையான செய்திகளை அவர்கள்  பெற்று,   உள்வாங்கிப் பொது வெளியில் பேச முடியும்?.
இப்படி  மேலோட்டமாக.  நுனிப்புல் மேய்கிறவர்களிடம்  தமிழகப் பிரச்சினைகளை   பற்றி   என்ன எதிர்பார்க்க முடியும்.?

இதற்காகவே  தமிழகத்தைப்    பற்றிப் பலரும் அறிந்த மற்றும் அறியப்படாத 100 பிரச்சினைகளை ஒரு சிறு வெளியீடாக வெளியிட இருக்கின்றேன். அதற்க்கான வேலைகள் நடக்கின்றன.தமிழக நலனில் உண்மையாகவே  ஈடுபாடு கொண்டவர்களுக்கு அதை இலவசமாக அனுப்பலாம் என்றும்   நினைக்கிறேன்.

#தமிழக_பிரச்சினைகள்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்
17-2-2020.
#ksrpost

No comments:

Post a Comment

*If you're not making mistakes. Then you're not making decisions*

*If you're not making mistakes. Then you're not making decisions*. You know success seems to be connected with action. Successful pe...