Wednesday, September 9, 2015

இன்று(09-09-15), ஆதிச்சநல்லுர் சென்று விட்டு தூத்துக்குடிக்கு பெருங்குளம் வழியாக செல்லும் பொழுது,அந்த மண்ணின் மைந்தர்களான அ.மாதவையா, அவருடைய உறவினர் பெ. நா.அப்புசாமி ஆகிய இருவரை பற்றிய அறிந்த நினைவுகள் மேலோங்கின.
பெருங்குளத்தில சாலையோரமே பெரிய குளம் உண்டு, அந்த குளக்கரையில் கிடைத்த பதனீரை அருந்திவிட்டு இந்த இருவரை பற்றிய பதிவுகளை இங்கே இடுகிறேன்
அ.மாதவையா
______________
தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். தெலுங்கும் தெரியும். 20 வயது முதல் பத்திரிகைகளுக்கு எழுதினார். விதவை மறுமணத்தை ஆதரித்தார். சங்க இலக்கியம் முதல் அனைத்து செவ்வியல் படைப்புகள், அரிய ஆங்கில இலக்கிய நூல்கள் என ஒரு நூலகம் வைக்கும் அளவுக்கு நூல்களை சேகரித்திருந்தார்.
இவரது நண்பர் சி.வி.சுவாமிநாத ஐயர் தொடங்கிய ‘விவேக சிந்தாமணி’ பத்திரிகையில் ‘சாவித்திரியின் கதை’ என்ற தொடரை எழுதினார். இது 1903-ல் ‘முத்துமீனாட்சி’ என்ற நாவலாக வெளிவந்தது. தனது புகழ்பெற்ற ‘பத்மாவதி சரித்திரம்’ நாவலின் முதல் 2 பகுதிகளை 1898-1899ல் எழுதினார். 1924-ல் எழுதத் தொடங்கிய 3-ம் பாகம் முழுமை அடையவில்லை.
* ‘இந்திய கும்மி’ என்ற கவிதைப் போட்டி 1914-ல் நடந்தது. பாரதியாரும் அதில் கலந்துகொண்டார். மாதவையாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே’ பாடலுக்காக பாரதிக்கு 2-ம் பரிசு கிடைத்தது.
* ‘பஞ்சாமிர்தம்’ என்ற பத்திரிகையை 1925-ல் தொடங்கினார். நாவல், சிறுகதைத் தொகுப்பு, நாடகங்கள், கவிதைகள், ஏராளமான கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.
* சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக 1925-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில் தமிழை இளங்கலைப் பட்டப்படிப்பில் கட்டாயப் பாடமாக சேர்க்க வேண்டும் என உரையாற்றினார். பேசி முடித்து அமர்ந்ததும் அந்த இடத்திலேயே உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 53.
பெ. நா.அப்புசாமி
_________________
இவர் தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் உள்ள பெருங்குளத்தில் பிறந்தவர். அறிவியல் தமிழ் முன்னோடி, தொழிலால் வழக்கறிஞர். தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம் ஆகிய பன்மொழிப் புலமை கொண்ட இவர் அறிவியல் தமிழுக்காக 70 ஆண்டுகள் தொண்டாற்றினார். தமது இறுதி மூச்சு அடங்கும் அன்று கூட இவர் பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பிவிட்டே மறைந்தார் 1917 ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு வரை இவர் எழுதியுள்ள கட்டுரைகள் 5000க்கும் மேலாக இருக்குமெனக் குறிப்பிடப்படுகிறது. இவற்றுள் 3000க்கும் மேற்பட்டவை அறிவியல் கட்டுரைகள் ஆகும். இவரது அறிவியல் கட்டுரைகள் தமிழர் நேசன், தினமணி, இளம் விஞ்ஞானி, தியாக பூமி, கலைக்கதிர், கலைமகள், செந்தமிழ், ஆனந்த விகடன் முதலான பல இதழ்களில் வெளிவந்துள்ளன. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே நூற்றுக்கணக்கான கட்டுரைகளைத் தமிழில் எழுதியவர். சிறந்த மொழிபெயர்ப்பாளரான அப்புசுவாமியின் மொழிபெயர்ப்புகள் தரமானவை. இவரின் முதல் கட்டுரை பிரபஞ்சத்தில் மனிதன் தனித்திருக்கிறானா? என்ற தலைப்பிலானது
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-09-2015.
‪#‎A‬.Madhavayya
‪#‎P‬.N.Appusaami
‪#‎KsRadhakrishnan‬
‪#‎KSR_Posts‬

No comments:

Post a Comment

*All you have to decide is what to do do with the time that is given*

*All you have to decide is what to do do with the time that is given*. You can rise from anything. You can completely recreate yourself. Not...