Thursday, September 17, 2015

இரபிந்திரநாத் தாகூர் - Rabindranath Tagore

    ந்தியாவின் தேசிய கீதத்தை மட்டுமல்ல வங்கதேசத்தின் தேசிய கீதத்தையும் எழுதியவர் கவியரசர் இரபிந்திரநாத் தாகூர். இரு நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர் என்ற பெருமை வேறு எவருக்குமில்லாத சிறப்பாகும். தாகூர் ஒரு ஓவியர், கல்வியாளர், நாடக ஆசிரியர், நடிகர், நாவலாசிரியர், பேச்சாளர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். 

      மனிதநேயம் கொண்டவர் மட்டுமல்லாமல் சர்வதேச வாதியாகவும் திகழ்ந்தார்.உழைப்பாளிகளை  “பிரமதேவன் கலையிங்கு நீரே என்று பாரதி கூறியது போல தாகூர் தன் உழைப்பினால் உயர்ந்தவர். கீதாஞ்சலிக்காக 1913ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற தாகூரின் மீது அன்றைய எழுத்தாளர்கள், தத்துவமேதைகள், அரசியல்தலைவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர்.

அவர் மிகப்பெரிய நிலப்பிரபு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக, 1878-ல் இங்கிலாந்து சென்று சட்டம் படிக்க ஆர்வம் இல்லாமல்  இலக்கியம், இசை, நாடகங்களின் பக்கம் கவனம்பெற்று 'பார் அட் லா’ பட்டம் வாங்காமலே இந்தியாவுக்குத் திரும்பினார்.

மகாத்மா காந்தி,விஞ்ஞானி ஐன்ஸ்டீன்,   ஆங்கிலக்கவிஞர் டபிள்யூ.பி.யீட்ஸ் எனப் பல ஆளுமைகளின் பிரியத்திற்குரியவராக தாகூர் விளங்கினார். அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, உள்ளிட்ட மேலைநாடுகளிலும் சரி, சோவியத் யூனியன், ஐரோப்பிய நாடுகள், சீனா, ஜப்பான்,உள்ளிட்ட கீழை நாடுகளிலும் பல்வேறு கருத்தரங்குகளில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டியவர் இரபிந்திரநாத் தாகூர்.

இங்கிலாந்தில் கல்வி கற்கும் காலத்திலே அங்குள்ள ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெற்றிருந்தார். பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்த தேவேந்திரநாத் தாகூர் இரபீந்திரநாத்தின் தந்தை ஆவார். தன் தந்தையுடன் இமயமலைப் பகுதிகளில் சுற்றிய அனுபவங்கள் தான் தாகூரை இயற்கையை நேசிக்கும் பண்பையும், கீதாஞ்சலியை எழுதிடவும், இயற்கைச் சூழலுடன்கூடிய சாந்தி நிகேதனை உருவாக்கிடவும்  காரணமாக அமைந்தது எனலாம்.

இன்றைக்கு புகழ்பெற்று விளங்கும் இங்கிலாந்தின்  பல்கலைக் கழகங்களுக்கெல்லாம் முன்னோடியாக இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்று விளங்கியிருக்கிறது. 

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான விஸ்வபாரதி பல்கலைக்கழகம் சாந்திநிகேதன் வளாகத்திலே அமைந்துள்ளது. 1863ம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூரின் தந்தை யால்  கல்வி ஆசிரமமாக ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் ஆரம்ப காலத்தில் விஸ்வ வித்யாலயா என்ற பெயரில் நடத்தப்பட்டது. 

பின்னர் ரவீந்திரநாத் தாகூர் இதை மிகப்பெரிய கல்விநிறுவனமாக உயர்த்தினார். சுதந்திரத்துக்குப் பின் 1951ம் ஆண்டு இந்நிறுவனம் பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டது.


முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, திரைப்பட இயக்குனர் சத்யஜித் ரே, நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென் போன்ற பல சாதனையாளர்கள் இங்கு கல்விகற்றவர்களே. 

இந்தியக் கல்விமுறையின்  அடிப்படையை உணர்ந்த தாகூர் கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்தாமல், மக்களிடம் சுதந்திர வேட்கையை ஏற்படுத்த முடியாது என உறுதியாக நம்பினார்.  விஞ்ஞானம், இலக்கியம், நுண்கலை, தத்துவம், வரலாறு எனப் பிரித்து வைக்காமல் ஒரே வளாகத்தில் எல்லா அறிவுத் துறைகளும் இணைந்திருக்கும்படியான ஓர் கல்வி நிலையமாக சாந்திநிகேதனை உருவாக்கினார். 

மாணவர்களுடன் கலந்துரையாடினபடியே அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத்தூண்டும் விதமாக கற்றல்முறை இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் தாகூர்.  

கர்சன் பிரபு வைஸ்ராயாக இருந்தபோது வங்காளத்தை இரண்டாகப்பிரித்தார். அதனை எதிர்த்து எழுதவும், பேசவும் தொடங்கி நேரடியாக அரசியலில் நுழைந்தார் தாகூர். தாய்மொழியிலே மேடைகளில் பேசினார். ஆங்கிலத்தில் பேசும் தலைவர்களின் பேச்சை வங்காளத்தில் மொழிப்பெயர்த்தார். பிற்காலத்தில் நேரடி அரசியலில் இருந்து விலகி எழுத்துப்பணிகளில் மூழ்கிவிட்டார். அந்த நேரத்தில் இவருடைய அரசியல் பணிகளை அவரது சகாக்கள் சிலநேரங்களில் விமர்சனங்கள் செய்ததன் விளைவாகத்தான் பொதுவாழ்க்கையை உதறினார் என்ற கருத்தும் நிலவுகின்றது. சுபாஸ் போஸ் எப்படி புறக்கணிக்கப்பட்டாரோ அதே நிலைமை தாகூருக்கும் ஏற்பட்டது.
தகுதியே தடை என்பது தாகூரையும் போஸையும் கூட விட்டுவைக்கவில்லை.

தாகூருடைய எழுத்து, பேச்சு, அரசியல், உலகப்பயணங்கள் ஒருகட்டத்தில் முற்றிலும் குறைந்து சாந்திநிகேதனை நிர்வகிப்பதில் திரும்பியது. ஒரு முறை இத்தாலிசென்றபோது, அதன் தலைவராக விளங்கிய முசோலினி,  “உங்கள் எழுத்தின் வாசகன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன்” என்று முகமன் கூறினார்.  ஆனால் தாகூரின் உரையில் அவர் பேசாத சிலவாக்கியங்களையும் சேர்த்துப் பிரசுரித்து தன் பாசிச கொள்கைகளுக்கு பயன்படுத்திக்கொண்டார். ஆனால் விரைவிலேயே முசோலியின் வேஷம் கலைந்துபோனது. ஜப்பானின் நாடுபிடிக்கும் சாம்ராஜ்ஜியக் கனவுகளையும் தாகூர் கண்டித்து எழுதினார்.

1930ல் சோவியத் சென்றுவந்த தாகூர் அங்கே ஒரு புதிய நாகரீகம் மலர்ந்திருப்பதாகவும், தாய்மொழிக்கல்வி கற்பிக்கப்படுவதாகவும், சமத்துவ ஒளிவீசுவதாகவும்  அந்த நாகரீகம் உலகம் முழுக்கப்பரவ வேண்டும் என்றும் விரும்பினார். 

அவர் ஒரு உலகளாவிய மனிதர். எல்லோரும் இன்புற்றிருக்க நினைத்தவர். காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் தாகூரும், சாந்தி நிகேதனில் காந்தியும் தங்கிய நிகழ்வுகள் எல்லாம் நடைபெற்றதுண்டு. ஆந்திரா மதனப்பள்ளியில் தேசியகீதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தமிழ்நாட்டின் சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட நகரங்களுக்கெல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தாகூர் இலங்கைக்கும் பயணம் செய்தார். 

தாகூரின் எழுத்து வன்மையும், செயல்திறனும், ஆழ்ந்த மொழிப்புலமையும், அறிவுத்திறனும் எல்லோராலும் போற்றப்படவேண்டியது. டாக்கா பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் போன்றவை அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. இங்கிலாந்து அரசாங்கம் “சர்” பட்டம் வழங்கி கவுரவித்தது. 1913ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து இங்கிலாந்து தனக்களித்த  “சர்” பட்டத்தைத் துறந்தவர் இரபிந்திரநாத் தாகூர்.

மனிதன் தன்  கல்வி அறிவால் எதையும் சாதிக்கமுடியும், மண்வாசனையோடு தாய்மொழி அறிவு மற்றும் கல்வி மிகமுக்கியம் என்பதையும் கடைசி வரை வலியுறுத்தின தாகூர் மக்களுக்காகவே தன்னை அர்பணித்துக்கொண்டார்.  





-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-09-2015

No comments:

Post a Comment

*கனிமொழி அவர்களே*! தூத்துக்குடி பெரியசாமி குடும்பம் அப்படித்தான் இருக்கும்!

*காலத்தால் காயங்கள் ஆறினாலும் நெஞ்சத்தில் ஓலமிட்ட ஞாபகங்கள் கேள்விகளை தொடுத்துக் கொண்டே இருக்கும்….. நான் பெற்ற அனுபவங்கள்*… *இது உண்மையா*❓ ...