Wednesday, September 16, 2015

மோடி ரணில் சந்திப்பு -Narendra Modi, Ranil Wickremesinghe meet


நேற்றைக்கு (16-09-2015) பிரதமர் மோடிக்கும்,  ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு கையெழுத்தான ஒப்பந்தத்தில் இலங்கையின் சிங்கள அரசுதான் பயனடைந்துள்ளது.

ஏற்கனவே  மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலத்தில், இந்தியா வழங்கிய நிதிஉதவிகள் அனைத்தும், சிங்களர்கள் வாழும் தென் இலங்கைப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டது. அங்கே ரயில் நிலையங்கள் அமைக்கவும் வேறு வளர்ச்சிப் பணிகளுக்கும் அந்த நிதி பயன்படுத்தப்பட்டது.

வவுனியாவில் மருத்துவமனைகள் கட்டப்பட்டும்
அங்கு பணிகள் முழுமையாக  பூர்த்தியடையவில்லை. தற்போது அதே வவுனியா மருத்துவமனைக்கு திரும்பவும் மருத்துவ உபகரணங்கள் வாங்க இந்திய அரசு நிதிஉதவி வழங்க  சம்மதித்து  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அதேபோல சிங்கள என்.ஜி.ஓக்களுக்கு தமிழர்பகுதியில் பணியாற்றவும், நலத்திட்டங்களை நிறைவேற்றவும் இந்தியா நிதி உதவியும் செய்ய இருக்கின்றது. 13வது சட்டத்திருத்தத்தின் மூலம் கடந்த 25ஆண்டுகளுக்குமேலாக காணப்படாத தீர்வையா  இனி சிங்கள அரசு சாதிக்கப்போகிறது. அதையும் இந்தியா வழிமொழிந்து நிற்கின்றது.

நேற்றைக்கு செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் ஏட்டுச்சுரைக்காய் கதை தான். ஏற்கனவே அமெரிக்கா உள்ளக விசாரணைக்கு தலையாட்டிவிட்டது, சர்வதேச விசாரணையும், அதைக்குறித்த புலனாய்வும் என்பதெல்லாம் ஏமாற்று வார்த்தைகளாகிவிட்டன.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுடைய காணிகளையும், வீடுகளையும் திரும்ப ஒப்படைக்காதது பற்றியோ, தமிழர்வாழும் பகுதிகளிலிருந்து  இராணுவத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பாகவோ எந்த உத்திரவாதத்தையும் மோடி அரசு ரணிலிடமிருந்து பெறவில்லை.

வடக்கு கிழக்கு மாகாண கவுன்சிலுக்குத் தேவையான அதிகாரங்களான, உள்துறை, சட்ட ஒழுங்குப் பாதுகாப்பு, நிலநிர்வாகம் மற்றும் வருவாய், மீன்பிடி நிர்வாகம் குறித்து மாகாண கவுன்சிலின் கோரிக்கைகள் குறித்து மோடி எதுவும் பேசவில்லை.

வடக்குமாகாண கவுன்சில் முதல்வர் விக்கினேஸ்வரன் தலைமையில் முன்மொழிந்த சர்வதேச சுதந்திரமான நம்பகமான விசாரணை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி எதுவும் பேசப்படாதது.
இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்கள் மீதான அக்கறையின்மையையே காட்டுகிறது. திக்கற்ற நிலையில் ஈழத்தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-09-2015.

#KsRadhakrishnan #KSR_Posts #SriLankaTamilsIssue #Modi_Ranil_Meeting

No comments:

Post a Comment

கச்சத்தீவை குறித்து அறியா செய்தி ஒன்று…

#* *….. ———————————— கச்சத்தீவை 1974-இல் இந்தியா இலங்கைக்கு வழங்கிய பொழுது ஏற்பட்ட சர்ச்சைகளின் போதும் ஈழத்தில் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர...