Wednesday, June 29, 2016

காந்திமதி அம்பாள் உயர்நிலைப் பள்ளி - திருநெல்வேலி

திருநெல்வேலிக்கு பல அடையாளங்கள் உண்டு. நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி ஜங்ஷன், ரயிலடி, நட்ராஜ் ஸ்டோர், கா.மு. கட்டிடம், சிவாஜி ஸ்டோர், சந்திரவிலாஸ் ஹோட்டல், பாளை பஸ் ஸ்டாண்ட், மரியா கேண்டீன், தெற்கு பஜார், பாளை மார்க்கெட், முருகன் குறிச்சி என்று பல இடங்களை பேச்சு வழக்கில் சொல்வதைப் போல, ஹை கிரவுண்ட் காந்திமதி அம்பாள் பெண்கள் உயர்நிலைப் பள்ளியும் அடங்கியதாகும். திருநெல்வேலியில், கதீட்ரல் உயர்நிலைப்பள்ளி, சேப்டர் உயர்நிலைப்பள்ளி, ம.தி.தா. இந்து கல்லூரி உயர்நிலைப்பள்ளி, திருநெல்வேலி டவுன் மந்திரமூர்த்தி உயர்நிலைப்பள்ளி, செயிண்ட் ஸேவியர் கல்லூரி உயர்நிலைப்பள்ளி, செயிண்ட் ஜான்ஸ் கல்லூரி உயர்நிலைப்பள்ளி, என்று பல உயர்நிலைப்பள்ளிகள் 1960, 70களில் முக்கியமான கல்வி நிலையங்கள் ஆகும். இப்பள்ளி துவங்கி 60 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 21.6.1956 அன்று நெல்லையப்பர் தேவஸ்தானத்தால் நிறுவப்பட்ட பள்ளியாகும். அன்றைக்கு அறநிலைய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த பக்தவத்சலம் இந்த பள்ளியை திறந்து வைத்தார். இன்றைக்கும் இப்பள்ளி இந்து அறநிலையத் துறையின் கீழ்தான் இயங்குகின்றது. இந்த பள்ளியின் எதிர்புறத்தில் உள்ள ஆல மரம்தான் நகரப் பேருந்து பயணிகள் நிற்குமிடம். இப்பள்ளியின் தெற்கே மகாராஜா நகர், மேற்கில் ஹை கிரவுண்ட் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கிழக்கே மருத்துவக்கல்லூரி விடுதிகள், மாவட்ட நீதிபதி இல்லம், மூத்த போலீஸ் அதிகாரிகளின் இல்லங்கள் எல்லாம் அமைந்துள்ளன. அப்போது இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்காது. பேருந்துக்கு குறைந்தது 20 நிமிடங்களாவது காத்திருக்க வேண்டும். ஒரு முறை பேருந்துக்காக காத்திருந்தபோது, இப்பள்ளியின் நுழைவாயில் திறந்திருந்து, உள்ளே வேப்ப மரம் பச்சை பசேல் என்று இருந்தது. சீருடை அணிந்த பெண் குழந்தைகள் விளையாடி கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. அப்போது 'சர்வர் சுந்தரம்' படம் ஹிட்டாகி ஒடியபோது இப்பள்ளியின் மாணவிகள் ஒரு நிகழ்ச்சியில் "சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு" என்ற பாடலை பாடியதை காதில் கேட்டது நினைவுக்கு வருகிறது. தமிழ் அறிஞரும், தமிழில் விஞ்ஞான நூல்களை கொண்டு வந்த பெ.நா. அப்புசாமி அவர்களுடைய புதல்வி அம்மணி அம்மாள் இந்த பள்ளியின் தலைமையாசிரியராக நீண்ட காலம் பணியாற்றினார். அவர் மாணவிகளிடம் கண்டிப்பாகவும், பாசமாகவும் இருந்த தலைமையாசிரியர் என்று சொல்வார்கள். 60 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இப்பள்ளியில் படித்த பலர் பெரிய பொறுப்புகளுக்கு வந்த பாரதி கண்ட புதுமைப் பெண்களாக திகழ்கின்றனர்.

No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...