Sunday, June 11, 2017

UNHRC

*ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் துணை உயர் ஆணையாளர் கேட் கில்மோர் அவர்களுக்கு, கழக செயல் தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தின் தமிழாக்கம்:*

பெருமதிப்புக்குரிய அம்மையார் அவர்களுக்கு வணக்கம்!

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக முன்னால் மத்திய அமைச்சர் திரு. டி.ஆர்.பாலு அவர்கள், தி.மு.க. செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் திரு. கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற அலுவல்கள் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமைக்கு எனது மனப்பூர்வமான வருத்தங்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை வாழ் தமிழர்களின் நலன்களில் இரண்டறக் கலந்து இருக்கும் எனக்கு, இது மிக முக்கியமான தருணம் என்றே கருதுகிறேன். “தமிழர்களின் மனித உரிமைகளை மீறக்கூடாது”, என்று எனது நாடு திரும்பத் திரும்ப இலங்கை அரசுக்கு அறிவுறுத்தியும், 2009 ஆம் ஆண்டு நடைபெற்றப் போரில், தமிழர்களுக்கு எதிரான மிக கடுமையான மனித உரிமை மீறல்களை இலங்கை ராணுவம் செய்தது. இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி, தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வும் அளிக்காமல், அந்த ஒப்பந்தத்தையே இலங்கை அரசு அவமதித்தது. தமிழர்களுக்கு அநீதி இழைப்பதிலும், பாகுபாடுடன் அவர்களை நடத்துவதிலும், அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விடுவதிலும் இலங்கை அரசும், அதன் ராணுவமும் ஒருமித்த நோக்குடன் செயல்பட்டன.

இதுபோன்ற சூழ்நிலையில், போர் மேகங்கள் மூளும் போதெல்லாம் அப்பாவித் தமிழர்களின் மீது இரக்கமற்ற இராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவரை இலங்கை ராணுவம் தமிழர்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலைகள், உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு, மிகப்பெரிய கொடுமையாகப் பதிவாகியுள்ளது. 1956 ஆம் ஆண்டு ஆரம்பித்த இப்படிப்பட்ட இராணுவத் தாக்குதல்கள், 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உச்சக்கட்டத்தை எட்டியது.

அதன்பிறகு, போரில் காணாமல் போன லட்சக்கணக்கான தமிழர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதுசம்பந்தமாக எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் இதுவரை இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை. பாரபட்சமற்ற, சுதந்திரமான, சர்வதேச விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை உத்தரவிட்ட பிறகும் இன்றுவரை இலங்கை அரசு தனது தார்மீக மற்றும் அரசியல் சட்டரீதியான பொறுப்புகளை உணர்ந்து செயல்படாமல் தட்டிக்கழித்துக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் சுயமரியாதையுடன், கண்ணியமாக வாழ்வதற்கு ஏற்ற அரசியல்ரீதியான அதிகாரப் பகிர்வினை வழங்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து வருகிறது இலங்கை அரசு.

இதில் வேதனைக்குரிய செய்தி என்னவென்றால், இன்றுவரை தமிழர் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சி முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இன்னும் 1,46,679 தமிழர்கள் காணாமல் போனவர்களாகவே உள்ளனர். தமிழ் இளைஞர்கள் இன்றும் கொடூரமான உள்ளூர் சட்டங்களின்கீழ் கைது செய்யப்பட்டு கொடுஞ்சிறையில் அடைக்கப்படுகின்றனர். மேலும், தமிழர் வாழும் 18,800 சதுர கிலோமீட்டரில் 7000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. சர்வதேச மனித உரிமை சாசனங்களான “உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம்”, (Universal Declaration of Human Rights) “பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை” (International Covenant on Economic, Social and Cultural Rights) மற்றும் “சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை” (International Covenant on Civil and Political Rights) ஆகியவை இலங்கை அரசாங்கத்தாலும், இராணுவத்தாலும் திட்டமிட்டு மீறப்பட்டு தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் இதில் தலையிட்டு, அங்கு வாழும் தமிழர்களுக்கு தக்கதொரு நியாயத்தை பெற்றுத்தர வேண்டிய மிக முக்கியமான தருணமாக இது அமைந்திருக்கிறது.

எனவே, தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நிகழ்த்திய இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் மற்றும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிக்க சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய ஒரு நம்பகமான, சுதந்திரமான சர்வதேச விசாரணையை நடத்த வேண்டுமென இச்சமயத்தில் கோருகிறேன். தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ, இலங்கையில் நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வரும் அரசியல் தீர்வு அவர்களுக்கு நிச்சயம் தேவைப்படுகிறது.

அப்படியொரு தீர்வை, வெளிநாடுகளில் வசித்து வரும் புலம்பெயர் ஈழத்தமிழர்களையும் உள்ளடக்கிய ஈழத்தமிழர்கள் மத்தியில் நடத்தப்படும் பொதுவாக்கெடுப்பு மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். ஆகவே, இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தின் இந்த முக்கியமான அமர்வில், மனித உரிமைகளின் மகத்துவத்தை போற்றிக் காப்பாற்றவும், ஈழத்தமிழர்கள் விரும்பும் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவும் பயனுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.

No comments:

Post a Comment

*Remember all the trials you've overcome in life*

*Remember all the trials you've overcome in life*. May it remind you to never doubt or give up on yourself. For you have the ability and...