Tuesday, October 3, 2017

நிலையாமை என்பதே நிரந்தரம். மாற்றம் ஒன்றே மாறாதது.

கடந்த சில தினங்களாக ஜே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அமெரிக்க பெண் கவிஞர் சில்வியா ப்ளாத் படைப்புகளை வாசிக்க நேர்ந்தது. ஜே.கிருஷ்ணமுர்த்தி குறித்து ஏற்கனவே பதிவு செய்திருப்பதால் மீண்டும் அறிமுகம் தேவையிருக்காது. உத்தமர் காந்தி அரசியல் எளிமையின் அடையாளம், சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாட்களில் அவர்களுடைய வாழ்க்கை சற்று மனதை ஈர்த்தது. சில்வியா ப்ளாத் மிகவும் தைரியமான கருத்துகளை தன்னிலை கவிதை வழி எடுத்து சொன்னவர். மரணத்துடன் பலமுறை மோதியவர். அவரது தந்தையின் மரணத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்றவர். அவரே இவ்வாறு ஒத்துக் கொள்கிறார்.

" உங்களை புதைத்தபோது
எனக்கு வயது பத்து
இருபது வயதில் மரணத்தை விழைந்தேன்
மீண்டும் மீண்டும் மீண்டும்
உங்களை வந்தடைய
எலும்புகள் கூட விழைந்தன "

சாவதும் ஒரு கலையே அதனையும் இயல்பாக ஏற்பேன் என புன்முறுவலுடன் தற்கொலையை ஏற்றுக் கொண்டவர். அவருடைய இன்னொரு கவிதையும் தற்கொலையை நியாயப்படுத்துகின்றது.

// உதிருமோர் இலையைப்
போல் என் வாழ்வு
ஓ! கடவுளே!
விரைவாக்கு என் முடிவை.//

மேற்காணும் இருவரையும் வாசிக்கும் போது பிறப்புக்கு இறப்புக்கும் நடுவில் இத்தனை போட்டி, பொறாமைகள், ஆசைகள், பேராசைகள், வெறி, சச்சரவுகள் தேவை தானா என சிந்திக்க வைக்கின்றது.  நம்முடைய உணர்வுகள், நேர்மையான. அனுகுமுறை, நல்லெண்ணம் இவைகளுடன் வாழும் போது முடிவும் இயற்கையாகவே இருக்கும் அதனை புன்முருவலுடன் ஏற்றுக் கொள்வோம்.  நம் வட்டத்துக்குள் செயல்பட்டால் நம்மை யாரும் வெல்லவும் முடியாது. வேறு யாரையும் அனுமதிக்கவும் கூடாது.
சிலகாலத்திற்கு முன் தாரமிழந்தேன், சமீபத்தில் தாயை இழந்தேன். இவர்களின் மரணங்கள் நிறைய கற்றுக் கொடுத்தது. வாழும் காலத்தில் அறத்துடன் வாழ்ந்து, அர்த்தமுள்ள பணிகளை ஆக்கபூர்வமாக பணிகளை மேற்கொண்டு நிலை பெற வேண்டும் என்பதே. வாழும் காலத்தில் போற்றுதல் வேண்டாம். ஆனால் மறைவுக்கு பின்னர் தூற்றுதலும் வேண்டாம். சில தலைவர்கள் இறந்த பின்னரும் விமர்சனங்களுக்கு உள்ளாவது உண்டு.

சில தலைவர்கள் குறித்து வரலாறுகள் எழுதப்பட்டாலும் இறுதியில் அவர்களைப் பற்றிய மதிப்பீடு (Estimate) என்று எழுதப்படுவதுதான் அவர்களுடைய புகழை வாழச் செய்யும். இது நடைமுறையில் உள்ள வரலாற்றியல் ரீதியான மரபும் வழக்கமாகும். இதை வரலாற்றின் இலக்கணம் (Histiography) என்பார்கள். அதாவது தாங்கள் வாசித்து அறிந்த வரலாற்றின் அடிப்படையில் செய்த மதிப்பீடு என்று சொல்வார்கள். இதனை கடந்தும் சில இருவகை பார்வைகளும்  இருக்கலாம் என்பதேயாகும்.

நான் நெடுமாறன் அவர்களுடன் இருந்த போது கண்ணதாசனுடன் நெருங்கி பழகிய நாட்களில், அவர் என்னிடம் "நைனா, வைவர்கள் ஏன் திருமண் பூசுகின்றார்கள்? சைவர்கள் ஏன் விபூதி - திருநீறு வைக்கின்றார்கள்?”. மனிதர்கள் வாழ்வு மண்ணுக்கு தான் செல்வது என்பதை உணர்த்ததான். வாழ்க்கை என்பது சில காலங்கள் வாழ்ந்து விட்டு செல்ல வேண்டியது தான். நிரந்தரமானது அல்ல என்பதை இதன் மூலம் உணர்த்தப்படுகிறது.

சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் ஏன் மயில் தோகையால் மண்ணை பெருக்கிக் கொண்டு வருகின்றார்பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் நம்மைவிட வலிமை அற்ற ஈ, எறும்புகளுக்கும் தீமை செய்ய வேண்டாம். அறம் போற்றும் செயல்களை செய்வோம். கடமையை செய்வோம், பணிகளை தொடர்வோம் பேராசையை தவிர்த்து. ஆசை இல்லாத போது தான் மன அமைதி கிடைக்கின்றது. கையை காலை கட்டாந்தரையில் நீட்டினாலும் நிம்மதியான கண் உறக்கம் நிச்சயம்.

சிலமுறை 1996 வரை தேர்தல்களில் போட்டியிட்டு குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோற்ற போதெல்லாம் வேதனையால் தூக்கம் இழந்துள்ளேன். தற்போது, இதற்காகவா கலங்கினோம் என நினைக்கும் போது அற்பத்தனமாக ஆசைப்பட்டுள்ளோமே என்று கூனிக் குறுகுகின்றேன்.

1970களின் இறுதியில் 1980களின் துவக்கத்தில் இந்திராகாந்தி அவர்களுடன் சந்தித்து பேசியதும், பெருந்தலைவர் காமராசருடன் அரசியல் பயின்றும் இருக்கின்றேன்.

ஈழப்போராளி பிரபாகரனுடன் தங்கி ஆரம்பக்கட்டத்தில் அவர்களுடைய செயல்பாடுகளையும் அறிந்தும் உள்ளேன். காலச்சக்கரங்கள் ஓடிவிட்டன. எனக்கு பின்னால் அரசியலுக்கு வந்தவர்கள், என்னிடம் உதவியாளராக பணியாற்றியவர்கள் எல்லாம் சட்டமன்றம், நாடாளுமன்றம் என சென்றுவிட்டனர். அவர்கள் எல்லாம் அறச்செயல் செய்து, தொண்டு செய்து சென்றவர்களா? அவர்களின் சுயவிளம்பரங்களால் தான் உயர்த்தி இருக்கின்றது. ஆனால், களப்பணி என்பது எதிர்கால வரலாற்று பக்கங்களிலே இடம்பெறும்.

உத்தமர் காந்தி, நேதாஜி போஸ் போன்ற தியாகச் சுடர்களுடைய முடிவு சோகமானது என்றாலும் அவர்கள் சரித்திரப் புருஷர்கள். லால் பகதூர் சாஸ்திரி நேர்மையான அரசின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அவருக்கும் எதிர்பாராத மரணம். பேரறிஞர் அண்ணாவும் இன்னும் சில காலங்கள் வாழ்ந்து பொது வாழ்வில் இருந்திருக்க வேண்டும். நல்லவர்கள், ஆளுமையானவர்களுக்கும் இப்படியான நிலை. இயற்கையின் விதியோ, ஊழோ அதன்படி உலகம் சுற்றுகிறது. இவையெல்லாம் நமக்கு நிலையற்ற வாழ்வு என்று உணர்த்துகிறது.

சுயநலம், தற்புகழ்ச்சி என்பதும் நிலையற்றது. புகழ்ச்சியும், பெருமையும் பாராட்டுகளும் அர்ப்பணிப்புகள் மூலமாகவும் தொண்டு செய்வதின் மூலம் வரவேண்டும்.  உன் வட்டத்திற்குள் இரு அதற்குள் யாரையும் அனுமதிக்காதே.

கடமையை சரிவர செய்து வாழ்வோம். வெந்ததை தின்று வாழ்வோம். இயற்கை நம்மை அரவனைத்தால் அதனை புன்முறுவலுடன் வரவேற்போம். கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என்பார்கள். தனிமை நிறைய பாடங்களை கற்றுத் தரும். சிலவற்றுக்காக ஆசைப்பட்டு இவ்வளவு ரணங்களை சுமந்திருக்கின்றோம் என புரிய வைக்கும்.

பிரச்சனைகளை நேரடியாக, நேர்மையாக ணுகுவதில் நம்முடைய தந்திரோபாயங்களை எல்லாம் பயன்படுத்த வேண்டும்.

பசி, பிணி, கடன், பகை, இழிவு இல்லாமல் வாழ்க்கைப் பயணம் அமைந்தாலே அமைதி. இதையும் மீறி தேவையற்ற ரணங்களும், கவலைகளும் தொற்றிக் கொண்டால் அதையும் பொருட்படுத்தாமல் சுமப்பதும் ஒரு கட்டத்தில் சுகமான சுமைகளாகிவிடும். அற்பத்தனமான ஆசைகளையும் தூக்கி எறிந்தால் எதையும் எதிர்கொள்ள முடியும்.

அக்காலத்தில் நாம் பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது நீதிபோதனை, லாஜிக் போன்ற வகுப்புகள் இருந்தன. வாழ்க்கையை கரம் பிடித்து நல்வழியில் கொண்டு செல்ல வழிவகுத்தன. இப்பொழுதெல்லாம் வேகமான பேராசையான உலகத்தில் இதற்கெல்லாம் வழியில்லை. மருத்துவம் படிப்பில் சேர இயற்பியல், வேதியியல், உயிரியல் படிக்க வேண்டும், பொறியாளரக கணிதம் படிக்க வேண்டும் என மதிப்பெண் அடிப்படையில் திசை திருப்பபடுகின்றார்கள் மாணவர்கள்.

மானிட சிந்தனைகள் சிக்கல்களுக்கும் பிரச்சனைகளுக்கும் பரிகாரம் தரும் இசங்களும் இயல்களும் ஆகும். அதிகமாக சொல்லிவிட்டதாக கருத வேண்டும்.


#நிலையாமை_என்பதே_நிரந்தரம்
#மாற்றம்_ஒன்றே_மாறாதது
#மனித_வாழ்வியல்
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-10-2017

No comments:

Post a Comment

வேலுப்பிள்ளை பிரபாகரன்- Velupillai Prabhakaran

https://youtu.be/WrNmTFAoFw8?si=xJMjMucIKPf6JUWQ