Wednesday, August 15, 2018

ஈழத்தமிழர் பிரச்சனை குறித்தான நூல்களுக்கு தலைவர் கலைஞரின் அணிந்துரை


ஈழத்தமிழர் பிரச்சனை குறித்தான நூல்களுக்கு தலைவர் கலைஞரின் அணிந்துரை
-----------------------------------
தலைவர் கலைஞர் அவர்கள் 2012இல் சென்னையில் நடந்த டெசோ மாநாட்டையொட்டி தமிழிலும், ஆங்கிலத்திலும் ஈழத்தமிழர்கள் குறித்தான வரலாற்றையும், அதன் பிரச்சனைகளின் பரிமாணத்தையும் குறித்து ஒரு நூல் எழுதி வெளியிடுமாறு என்னை பணித்தார். தமிழிலும், ஆங்கிலத்திலும் நூல்களாக தயாரித்து தலைவரிடம் அளித்தபோது, அவர் நூல்கள் முழுவதையும் படித்துவிட்டு, என்னை பாராட்டி, அதற்கு அணிந்துரையும் வழங்கினார். அந்த அணிந்துரை…

மு.கருணாநிதி,
தலைவர், திமுக
அணிந்துரை
----------------------

வழக்கறிஞர் தம்பி கே.எஸ்.இராதாகிருஷ்ணன் – மிகுந்த பாடுபட்டு, தொடர்புடைய பல்வேறு நூல்களையும் தேடிப் பிடித்து நுணுக்கமாகப் படித்து, ஆய்ந்து எழுதியிருக்கும், “ஈழத் தமிழர் பிரச்சினை – சில குறிப்புகள்” என்ற நூலைப் படித்தேன். தம்பி கே.எஸ்.இராதாகிருஷ்ணன், எந்தப் பொருளைப் பற்றி எழுதினாலும், அதன் அடியாழத்திலுள்ள வேர்களிலிருந்து தொடங்கி விழுதுகள் வரை, முழுமையாகவும், எளிமையாகவும்தெளிவாகவும் எழுதக் கூடிய சிறந்த ஆற்றல் பெற்றவர் என்பதை – அவர் எழுதி வெளியிட்ட பயனுள்ள பல்வேறு கட்டுரைகளையும், நூல்களையும் படித்திடும் வாய்ப்பினைப் பெற்றவன் என்ற முறையில் – என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
இலங்கைத் தீவுக்கும், தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு 2650 ஆண்டுகளுக்கு முற்பட்டது; நீண்ட நெடிய வரலாறு கொண்டது என்று தொடங்கி – சங்க காலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், பாண்டியர் காலம், நாயக்கர் காலம் ஆகிய கால கட்டங்களைக் கடந்து – தமிழீழ அரசின் வீழ்ச்சிக்கும் பின்னர் மோனாட்டார் ஆட்சிக் காலம், ஆங்கிலேயர் காலாம் ஆகிய காலங்களின் நிகழ்வுகளோடு – தற்கால அறவழிப் போராட்ட – ஆயுதம் தாங்கிய போராட்ட அரசியல் நிகழ்வுகளையும் இணைத்து, வரலாற்று அரசியல் வடிவில் வழங்கியிருப்பது – இலங்கைத் தமிழர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமுடையோர்க்கு அரிய பலனை அள்ளித் தரும் என்பதால் – வரவேற்றுப் பாராட்டக் கூடியதாகும்.
தம்பி கே.எஸ்.இராதாகிருஷ்ணன், பட்டினப் பாலையில் வரும் கடியலூர் உருத்திரங் கண்ணனாரைப் பற்றி ஒரே வரியில் குறிப்பிட்டுச் சொல்கிறார். ஆனால், 25 ஆண்டுகளுக்கு முன்பே ஈழப் பிரச்சினை பற்றிய எனது உரையில்,
“காவிரிப்பூம்பட்டினத்தின் துறைமுகத்தைப் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறுகிற பட்டினப்பாலையில் ஒரு பழம்பெரும் பாடல் உண்டு. அந்தப் பாடலில் பூம்புகார் துறைமுகப்பட்டினத்தில், என்னென்ன பொருள்கள் ஏற்றுமதிக்காகவும், இறக்குமதிக்காகவும் வந்து இறங்குகின்றன என்ற விவரங்களைச் சொல்கிற போது-
“நிரின் வந்த நிமிர் பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்” எனத் தொடங்கி,
ஈழத்து உணவும் காழகத் தாக்கமும்” என வருகிறது. பழம்பெரும் பட்டினப் பாலையிலே ஈழத்து உணவும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது” என நான் விளக்கமாகப் பேசியிருக்கிறேன்.
தம்பி கே.எஸ்.இராதாகிருஷ்ணன், ‘‘தமிழீழ அரசின் வீழ்ச்சி” என்ற தலைப்பில், “காக்கை வன்னியன் காட்டிக் கொடுத்ததால் தமிழீழ அரசு வீழ்ந்தது” என்று ஒரே வரியில் குறிப்பிட்டுள்ளதைப் படித்தபோது, எனது நினைவில், நான் எழுதி வெளியிட்ட “பாயும் புலி பண்டாரக வன்னியன்” எனும் வரலாற்றுப் புதினம் பளிச்சிட்டது. அதில் “தமிழ் ஈழ மண்ணின் பகுதியான வன்னி நாடான அடங்காப்பற்றின் காவலன் வைரமுத்து, பண்டாரக வன்னியன் என்னும் சிறப்புப் பெயரில் வரலாற்றுப் புகழ் கொண்டவன். இலங்கையில் மண்ணின் உரிமை காக்கப் போராடியவன். அவனது காலைச் சுற்றிய கருநாகமாக, ஈழத்துக் கரிக்காட்டு மூலையின் காவலனாக, காட்டிக் கொடுத்திடக் கூசாத காக்கை வன்னியன் இருந்தான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“1815-இல் கண்டி அரசின் வீழ்ச்சி” என்று மிகச் சுருக்கமாகச் சொல்லியிருக்கும் தம்பி கே.எஸ்.இராதாகிருஷ்ணன், அந்தக் கடைசித் தமிழ் மன்னனைப் பற்றிய விபரங்களைக் கொஞ்சமாவது குறிப்பிடாதது வியப்பாக உள்ளது.
வெள்ளைக்காரன் 1814-ஆம் ஆண்டு வாக்கில் இலங்கையிலே கண்டி என்ற இடத்தில் கடைசியாக வெற்றி கொண்டு தோற்கடித் மன்னனுக்குப் பெயர் விக்கிரமசிங்கராஜா. கண்டியிலே ஆண்டவன் தமிழன். அப்படித் தோற்கடிக்கப்பட்ட அந்த அரசனை, இலங்கையிலே வைத்திருந்தால் மீண்டும் படையெடுத்து வெள்ளையனை விரட்டக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, மதுரை சிறைச் சாலைக்குக் கொண்டு வந்து அமைத்து, பின்னர் வேலூர் சிறைச் சாலைக்கு அனுப்பி அங்கே அவனை அடைத்து, அந்த சிறைச்சாலையிலே அவன் பல ஆண்டுக் காலம் வாடி, சிறையிலேயே மாண்டான். கழக ஆட்சிக் காலத்தில் அவனது கல்லறையை நினைவுச் சின்னமாக மாற்றி நானே நேரடியாகச் சென்று திறந்து வைத்த நிகழ்ச்சி என் நெஞ்சில் நிழலாடுகிறது.
ஈழத் தமிழர்கள் அமைதியான அறப் போராட்டங்களிலேயே பெரிதும் நாட்டமுடையவர்கள் என்பதை நிரூபித்திட; 1931-இல் தேர்தல் புறக்கணிப்பு அறப்போராட்டம் எனத் தொடங்கி ஆறு அறப் போராட்டங்களைத்து தொகுத்து, இந்த நூலில் தந்திருப்பது போற்றத்தக்க முயற்சியாகும். அதைப் போலவே உடன்பாடுகளையும், ஒப்பந்தங்களையும் மீறுவதில் உலகப் புகழ் பெற்றவர்கள் (!) சிங்களவர்கள் என்பதைக் காட்ட ஒன்பது முறை அவர்கள் எப்படியெல்லாம் எல்லை மீறிப் போனார்கள் என்பதற்கான விளக்கம் வியக்க வைக்கிறது.
சிங்களவர்கள் – சிங்களவர்களைத் தவிர மற்றெல்லோரையும் வெறுக்கிற, வெறுத்து ஒதுக்குகிற வேண்டாக் குணம் படைத்தவர்கள் என்பதற்கு; தமிழர்களுக்கெதிராக மட்டுமல்லாமல், இஸ்லாமியர்களுக்கெதிராகவும், மலையாளிகளுக்குகெதிராகவும், மலையகத் தமிழர்களுக்கெதிராகவும் அவர்கள் நடந்து கொண்ட நிகழ்வுகளை தம்பி கே.எஸ்.இராதாகிருஷ்ணன் விவரிக்கும் பாங்கு – படிப்பவர் யாராக இருந்தாலும் கூச்சமும் கோபமும் ஏற்படுத்தும்.
பண்டித நேரு அவர்களை – பொதுவுடைமைத் தோழர் ஏ.கே.கோபாலன் அவர்களை – சிங்களவர்கள் தாக்கி விரட்ட முயன்ற நிகழ்ச்சிகளைப் படிக்கும் போது நமக்கு வேதனை ஏற்படுகிறது.
கொழும்பு நகர மண்டபத்தில், 1944இல் பொன்னம்பலனார் அவர்களும், கொழும்பு மாநாட்டில், 1949இல் தந்தை செல்வநாயகம் அவர்களும் ஆற்றிய உரைகளின் பகுதிகள் இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளன. அவை ஆழச் சிந்திக்கத் தூண்டுபவை.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் 1956 முதல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆற்றி வரும் பணிகளையும் தம்பி கே.எஸ்.இராதாகிருஷ்ணன் தொகுத்துள்ளார்.
புகழ்மிக்கதொரு தேசிய இனத்தைப் பற்றி, தம்பி கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பெரிதும் முயன்று, எளிமையாகப் படிக்கத் தக்க வகையிலும், படித்துப் பாராட்டத்தக்க முறையிலும் எழுதியிருப்பது பெருடைப்படத் தக்க நல்ல பணியாகும். ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்புக்காக “டெசோ” மாநாடு நடைபெறப் போகும் இந்த வேளையில் – சரியான நேரத்தில் தகுதியுடைய ஒருவரால் தேவையான தகவல்கள் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட்டிருப்பது கண்டு ஈழத் தமிழர் பிரச்சினையில் அக்கறையுள்ள அனைவரும் மகிழ்ந்து புகழ்ந்துரைத்திட வேண்டிய ஒன்றாகும். நல்லதொரு நூலை வழங்கியதற்காக வழக்கறிஞர் தம்பி கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களைப் போற்றி வாழ்த்துகிறேன்.

அன்புள்ள,                                                                   03/08/2012
மு.கருணாநிதி                                                             சென்னை.

#ஈழத்தமிழர்_பிரச்சனை
#கலைஞர்
#தமிழீழம்
#Kalaignar
#Tamil_Eelam
#Kalaignar_Karunanidhi
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-08-2018






No comments:

Post a Comment

#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம்

#மாண்புமிகு  முதல்வர்  மு.க.ஸ்டாலின்         அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன்  முகாம் - குருஞ்சாக்குளம...