Tuesday, August 7, 2018

கார்த்திக்கின் ‘கடைக்குட்டி சிங்கம்’ – ஒரு பார்வை.

கார்த்திக்கின் ‘கடைக்குட்டி சிங்கம்’ – ஒரு பார்வை. -------------------------------
கிராமிய வாழ்க்கையும், கூட்டுக் குடும்பங்களும் அரிதாகி வரும் நாட்களில் எங்களைப் போன்றவர்கள், சொந்த கிராமத்திற்கு சென்றால் ஏதோ இழந்ததை போல இருந்தாலும், கிராமத்தில் போய் எப்போது உட்காருவோம் என்ற எதிர்பார்ப்போடு இருப்போம். கிராமத்திற்கு போய் கால் வைத்தாலே ஒரு நிம்மதி. நகரப்புறங்களுக்கு வந்த என் போன்றவர்களுக்கு எல்லாம் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தைப் பார்த்தபோது, கிராமத்தின் தொன்மைகளும் அங்கு வாழும் ஜீவன்களின் வெள்ளந்தித்தனங்களும் கண்முன்னே காட்சிகளாகப் பார்க்க முடிகிறது. கடைக்கோடி மக்களும் பார்த்து ரசிக்க வேண்டியது தான் இந்த அமர்க்களமான திரைப்படம்.
பண்டைய கிராமங்களில் நடக்கும் ஆண் வாரிசு வேண்டுமென்ற மனநிலை, திருமண உறவுகள், அக்கா – தம்பி உறவுகள் என்பதை 1960களில் இருந்த காட்சிகளை அப்படியே தத்ரூபமாக வெள்ளித் திரையில் காணும் போது ஒரு ஆறுதல். சிங்கம் போல நடையும், புலி போல பாய்ச்சலும் கொண்ட இளைஞன், தன்னை ஒரு விவசாயி என்று பெருமையோடு கையை மடக்கிச் சொல்லும் போது, கார்த்திக்கினுடைய ஆளுமையான திறமை வெளிப்படுகிறது. மாமன் மகள், காது குத்து, உடன்பிறந்த அக்காக்களின் வருத்தம், கோபம், மகிழ்ச்சி, அன்பு என்று குடும்ப பாங்கான உறவுகளை காண முடிந்தது. மண்குவளையில் தேநீரும், வீட்டிற்கு வரும் விருந்தாளிக்கு மரக்கன்றும், நுங்கும், மூங்கில் கூடையும், கிராமப்புறத்தின் ஆடல் பாடலும் என பலவற்றை ரசிக்க முடிந்தது. ஒரு விவசாயியை அழைத்து கல்லூரி மாணவரிடம் பேசவைத்து கௌரவப்படுத்தும் காட்சி நிச்சயமாக விவசாயியை மதிக்க வைக்கும் விழிப்புணர்வாகும். இதில் அந்த காலத்தில் விளையாடிய சில்லாங்குச்சி, கோலி விளையாட்டுகள், கோலாட்டம், நாட்டுப்புறக் கலைகள் போன்றவற்றை சற்று குறியீட்டோடு அடையாளப்படுத்தி இருக்கலாம். அனிமேசன், கிராபிக் இல்லாமல் யதார்த்தமாக கிராமம், வயல்வெளி, காடுகளை முன்னிறுத்தியதெல்லாம் பார்க்கும்போது திருப்தியைத் தருகின்றது. எங்களைப் போன்ற கிராமவாசிகள் இந்த படத்தைப் பார்த்தது மனதிற்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல, கடந்தகால சம்பவங்கள் பலவற்றை மலரும் நினைவுகளாக நினைக்கத் தோன்றியது. விவசாயத்திற்கும், விவசாயிக்கும் பெருமை சேர்த்த கடைக்குட்டி சிங்கத்திற்கு வாழ்த்துகள். பாராட்டுகள். சல்யூட் டூ கார்த்திக், சத்யராஜ் மற்றும் இத்திரைப்படக் குழுவினருக்கு...
#கடைக்குட்டி_சிங்கம் #Kadaikutti_singam #Folklore #கிராமிய_வாழ்க்கை #விவசாயம் #KSRadhakrishnan_Postings #KSRPostings கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 06-08-2018

No comments:

Post a Comment