Tuesday, October 16, 2018

நிஜப்பணந்தானா?

நிஜப்பணந்தானா?
(தி. ஜானகிராமன் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற ‘அதிருஷ்டம்’)
--------------------

சாமானியன் அன்றாடம் வாழ்வதும், தனக்கென்று தேவைகளையும், வசிக்க வீட்டையும் பெறுவதில் அவன் படும்பாடு ஏராளம். இதற்கு தேவையான பணத்துக்காக ஓட வேண்டும். சில்லரைக் காசுகள் ஓடாது. அதிக மதிப்பு பெற்ற காகிதப் பணம் ஓரிடத்தில் நிற்காமல் காற்றோடு வரும், போகும் என்று சீனப் பழமொழி ஒன்று சொல்கிறது. சென்னைவாசியான சிதம்பரம் என்ற சாமானியனின் அன்றாட வாழ்க்கையின் பணத் தேவைக்காக அல்லற்படும் தி. ஜானகிராமனின் சிறுகதையில் வரும் வரிகள் சில:

நான் சம்பளமாக வாங்கிக்கொண்ட பணம் அசல் வெள்ளியும் நிக்கலும் போட்டு அடித்துச் சர்க்கார் வெளியிட்ட பணமா? அல்லது செப்பிடு வித்தைக்காரன் தருவித்த பணமா? மந்திரக்காரன் வரவழைத்த காசோ, பண்டமோ மூன்றேமுக்கால் நாழிகைக்குமேல் நிற்காதாம். பார்த்துக் கொண்டேயிருக்கையில் மறைந்துவிடுமாம். முப்பது நாள் செலவுக்காக்க் கொடுத்த பணம் முக்கால் நாளில் செலவழிந்துவிட்டால்? அதாவது, நேற்றுச் சாயங்காலம் சம்பளக் கவரைக் கொண்டுவந்து கொடுத்து நோட்டில் கையெழுத்து வாங்கிப் போனான் காரியாலயச் சேவகன். வீட்டுக்குப் போனதும் வீட்டு வாடகை, பால் பணம், மளிகைப் பற்று, டாக்டர் பில், டிராம், பஸ் எல்லாம் போக மிஞ்சியிருப்பது இரண்டே கால் ரூபாய்.
மீதி அவ்வளவும் முக்கால் நாளில் செலவழிந்துவிட்டது. இது நிஜப் பணமா? பொய்ப் பணமா? பொய்ப் பணமாகயிருந்தால் இந்த இரண்டேகால் ரூபாய் எப்படி மிச்சம் இருக்கும்? கோட்டின் வலது பையில் கனச் சில்லறையாக உட்கார்ந்திருக்கும் அந்தப் பணம் கோட் நுனியை வலப்பக்கம் ஓர் அங்குலம் கீழுக்கு இழுத்துத் தொங்குகிறது. அந்தக் கனமும் இழுப்பும் உடலில் நன்றாகப் படுகின்றன; நிஜப் பணந்தான்!!!

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18/10/2018
#KSRPostings
#KSRadhakrishnanPostings
#நிஜப்பணந்தானா

#வாழ்வியல்


No comments:

Post a Comment