Friday, October 19, 2018

கம்பராமாயண காட்சிகள்

கம்பனின் இராம காவியத்தை இன்று காலை படித்துக் கொண்டிருக்கும் போது பின்வரும் பாடல் வரிகளும், பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் அவர்களுடைய உரையும் கவனத்தை ஈர்த்தது.

1734. ‘நதியின் பிழை அன்று
நறும் புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று;
பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று;
மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு
என்னை வெகுண்டது?’ என்றான்.

‘மைந்த! - மகனே!; நறும் புனல் இன்மை - (என்றும் நீர் உள்ள ஆற்றிலே ஒரு சில காலங்களில்) நல்ல நீர் இல்லாமல் வற்றிப் போவது; நதியின் பிழைஅன்று -அவ் ஆற்றின் குற்றம் அன்று; அற்றே – அது போலவே; பதியின் பிழைஅன்று - (என்னைக் காடு செல்லும்படி சொன்னது) தந்தையின் குற்றம் அன்று; பயந்துநமைப் புரந்தாள் - (காடு செல்லும்படி வரம் வாங்கியது) பெற்று நம்மைக் காப்பாற்றி வளர்த்தவள்
ஆகிய கைகேயியின்; மதியின் பிழை அன்று - அறிவினது குற்றமும் அன்று; மகன் பிழை அன்று - அவள் மகனாகிய பரதனது குற்றம் அன்று; விதியின் பிழை- விதியால் (நமது ஊழ்வினையால்) விளைந்த குற்றமே ஆகும். இங்ஙனம் இதனை ஆராயாது; நீஇதற்கு வெகுண்டது என்னை?’ - நீ இந்தச் செயலுக்கு இவர்களைக் காரணமாக்கிக் கோபித்தது ஏன்?’ என்றான் -.

ஊழ்வினை செலுத்தத்தாயும் தந்தையும் அவ்வினையின் கருவியாக இருந்து செயல்பட்டனரேஅன்றி அவர்களாக நம்மேல் பகை கொண்டு செய்தாரில்லை. மழைநீர் வரத்து இன்மையால் சிலகாலம் ஆற்றில் நீர் வற்றுவது போல்வினைவலியால் பெற்றோர் அன்பின்மை உடையார் போலத் தோன்றுவர், அவ்வளவேஎன்றானாம். மூவரையும் தாயர் என ஒப்பக் கருதல் பற்றிக் ‘கைகேயியைப் பயந்து மைப்புரந்தாள்’ என்றான் இராமன்.

---------------------

வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த
திருத்தோளும் மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும்
இடம்நாடி இழைத்தவாறோ
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை
மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உடல் புகுந்து
தடவினவோ ஒருவன்வாளி

ஒருவன் வாளி - ஒப்பற்ற இராமபிரானின் அம்பு; வெள் எருக்கம் சடைமுடியான்- வெள்ளை எருக்கம் பூவை (முடியில்) சூடும் சிவபெருமானுடைய; வெற்பு எடுத்த திருமேனி – கயிலை மலையைத் தூக்கிய இராவணனுடைய அழகிய உடலின்; மேலும் கீழும் - உடம்பின் மேல்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும்; எள் இருக்கும் இடம் இன்றி - எள் இருக்கும் இடம் கூட இல்லாமல்; உயிர் இருக்கும் இடம் நாடி- உயிர் இருக்கும் இடம் முழுவதையும் தேடி; இழைத்த ஆறோ?- ஆராய்ந்த வண்ணமோ? கள் இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை- தேன் குடிகொள்ளும் மலர்களைச் சூடிய கூந்தலையுடைய சீதாதேவியை; மனச் சிறையில் கரந்த காதல் - மனம் எனும் சிறையில் ஒளித்து வைத்திருந்த காதலானது;உள் இருக்கும் எனக் கருதி - உள்ளே (இன்னும் எங்காவது) பதுங்கியிருக்கும் என்று எண்ணி; உடல் புகுந்து தடவியதோ? - உடல் முழுதும் நுழைந்து (நுழைந்து) தடவிப் பார்த்ததோ?

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
19/10/2018

#KSRPostings
#KSRadhakrishnanPostings
#கம்பராமாயணம்_காட்சிகள்


#அ_ச_ஞானசம்பந்தன்

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...