Saturday, October 20, 2018

நாட்டுப்புறவியலும், வைணவப் பாசுரங்களும்

நாட்டுப்புறவியலும், வைணவப் பாசுரங்களும்
---------------------------------------------------------------------
வைணவப் பாசுரங்களில் பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார் நாட்டுப்புறவியலை கொண்டாடியுள்ளனர். நாட்டுப்புறவியல் ஒரு கூறாகவே இலக்கியத்திலும் வாழ்வியலிலும் தொன்றுதொட்டு இருந்து வந்தது. இன்றைக்கு உலகமயமாக்கலில் நாட்டுப்புறவியலின் தொன்மைகள் மாற்றப்படுகின்றன. பொருளாதார ரீதியாக விவசாய நிலங்களை கபளீகரம் செய்வதும், பண்டைய கிராமிய அணுகுமுறைகளை அழிப்பதும் தான் தற்போது நடைபெற்று வருகிறது.

ஆண்டாள் பாடலில்
ஆண்டாள் திருமாலின் மீது அளவுகடந்த பற்றுடையவள். இதனால் இறைவன் அவரை ஆள்கொண்டச் செய்தியினை இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. இவர் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளாவார்.
ஆண்டாள் தன்னிலையை மறந்தவர்,.. கண்ணனுக்கன்றி வேறு யாருக்கும் வாழ்க்கைப்படாதவர், அவர் ஆண்டவனை அடையக் கண்ட வழி, அவருக்கு உதவிய ஒன்று நாட்டுப்புற வாய்மொழிப் பாடலே ஆகும். அவருடைய திருப்பாவையையும் வாய்மொழிப் பாடலின் ஒரு வகை என்று அ.மு.ப. குறிப்பிடுவதாக சண்முக சுந்தரம் (1980:33) கூறுகிறார்.
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினா நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர் (திருப்பாவை: பா1)

ஏல்லே இளங்கிளியே
இன்னும் உறங்குதியோ (பா. 15)
என்பன போன்ற திருப்பாவைப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்களின் சிறப்புகளை வெளிக்கொணரும் பதிப்புகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பெரியாழ்வார் பாடலில்...
தமிழில் முதன்முதலில் பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கியம் தோன்றுவதற்கு முழுமுதற் காரணகர்த்தாவாக இருந்தவர் பெரியாழ்வார் ஆவார். அவருடைய பெருமையினை மு. அருணாசலம் அவர்கள், தாம் தாயாக இருந்து முழுமுதற்பொருளான இறைவனையே குழந்தையாக ஏந்தியெடுத்துத் தாலாட்டுப்பாடி, அதன் மேல் அடியவர்கள் உள்ளமெல்லாம் அன்பு வெள்ளம் கரை கடந்தோடியும் தமிழ் இலக்கியம் பல துறைகளில் விரிந்து வளரவும், புதுவழி வகுத்த உத்தம பக்தரான ஆழ்வாரைத் தமிழுலகமானது பெரியாழ்வார் என்று வியந்து போற்றுகிறது என்று பறைசாற்றுகிறார்.
மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்
பேணி உமக்கு பிரமன் விடுதந்தான்
மாணிக்குறளனே தாலேலோ
வையமளந்தானே தாலேலோ (பா. 1)
என்று கண்ணபிரானை குழந்தையாக்கிப் பாடுகிறார். இது நாட்டுப்புறத் தாலாட்டுப் பாடலை அப்படியே பிரதிபலிக்கின்றமை காணமுடிகிறது.

குலசேகர ஆழ்வார் பாடலில்...
பெரியாழ்வாரைப் போன்று குலசேகர ஆழ்வாரும் இராமனுடைய வரலாற்றினைக் கூறும் போது,
மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென் இலங்கைக் போன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்
கன்னிநன் மாமதில்புடைச்சூழ் கணபுரத்தெம் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலே (8:1)
என்று இராமனை தாலாட்டி மகிழ்கின்றார். மேலும் இராமன் பிரிந்து சென்றதை எண்ணி தசரதன் புலம்பியதை,
கைம்மாவின் நடையன்ன மென்னடையும்
கமலம் போல் முகமும் காணாது
எம்மானை என்மகனை இழந்திட்ட
இழிதகையேன் இருக்கின்றேனே (9:6)
என்று பாடியுள்ளார். இதில் நாட்டுப்புற ஒப்பாரிப் பாடலின் சுவையானது ஊடாடுகின்றமை காணமுடிகிறது. இவைகளிலிருந்து வாய்மொழி இலக்கிய வகைமைகள் ஏட்டிலக்கியமாக உருமாறி புத்துயிர் பெற்று விளங்குகின்றமை புலனாகிறது. இன்றும் புதுக்கவிதைகளிலும் நாட்டுப்புற இலக்கியங்கள் பெரும் செல்வாக்குப் பெற்று திகழ்கின்றமை கண்கூடு.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
20/10/2018

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...