Monday, October 1, 2018

Dr G.Venkatasamy

ஒரு மிகப் பெரும் சாதனையாளரின் 100 வது பிறந்தநாள் இன்று.

யார் அவர்?  

தூத்துக்குடி மாவட்டம் எட்டயாபுரம் அருகே வடமலாபுரம் என்ற மிகச் சிறிய கிராமத்தில்,பாரம்பரியமிக்க பெரும் விவசாயக் குடும்பத்தில் மூத்த மகனாக 1-10-1918 ல் பிறந்தார் வெங்கிடசாமி.மிகப் பெரிய விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்,விவசாயத்தை விட  படிப்பில் தான் வெங்கிடசாமிக்கு மிகப் பெரும் ஆர்வமிருந்தது.தான் பிறந்த கிராமப் பகுதி மக்களுக்கு மருத்துவ வசதி இல்லாமல் திண்டாடுவதைப் பார்த்த அவருக்கு தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்ற ஆர்வம் அந்த இளம் வயதில் அவரது மனதில் விதையாக விழுந்தது.

பள்ளிப் படிப்பை படிக்கவே நாள்தோறும் 8 கிமீ நடந்தாலும்,சளைக்காயல் படித்து பள்ளிப் படிப்பை முடித்தார்.அதன் பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1938 ல் B. Sc கெமிஸ்ட்ரி முடித்தார்.பட்டம் பெற்ற கையோடு சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்.1944 ல் மருத்துவப் பட்டம் பெற்றார்.பின் 1954ல் சென்னை அரசு கண் மருத்துவக் கல்லூரியில் கண் மருத்துவத்தில் M. Sc பட்டம் பெற்றார்.மருத்துவ மேற்படிப்பு முடிந்த கையோடு இராணுவத்தில் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்.

ஆனால் 30 வயதில் ருமட்டாய்ட் ஆர்த்தரடீஸ் எனும் எலும்பு முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டதால் அவரால் இராணுவத்தில் தொடர்ந்து பணி செய்ய முடியாமல் போனது.எனவே இராணுவ மருத்துவ சேவை முடிந்ததும்,சென்னை அரசு பொது மருத்துவமனையில் மருத்துவராக சேர்ந்தார்.

பாரம்பரியம் மிக்க பெரும் விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்ததால்,ஏழை எளிய மக்களுக்கு அள்ளித் தருவதிலும்,அவர்களுக்கு உதவுவதிலும் வெங்கிடசாமிக்கு இயற்கையிலேயே பெரும் ஆர்வம் மிக அதிகமாக இருந்தது.அந்த ஆர்வத்தோடு பாண்டிச்சேரி மகான் அரவிந்தர் அறிமுகமும் சேர்ந்து கொண்டது.

1954ல் மதுரை அரசு பொது மருத்துவமனையில் கண் மருத்துவப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் வெங்கிடசாமி.அந்தக் காலகட்டத்தில் மக்களிடையே பார்வை இழப்பு நோய் என்பது மிக அதிகமாக இருந்தது.குறிப்பாக கிராமப் பகுதியைச் சார்ந்த சாதாரண ஏழை, எளிய மக்களிடையே இது மிக அதிகமாக இருந்தது.யாரிடம் சென்று எப்படி மருத்துவம் பார்ப்பது என்பது கூட தெரியாமல் இருந்தது.சிறு வயது குழந்தைகள் கூட முறையான மருத்துவ வசதியின்றி பார்வை இழந்து தவித்தனர்.இதற்கு எதாவது செய்ய வேண்டுமென வெங்கிடசாமி தீர்மானித்தார்.

கண் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு மருத்துவரைத் தேடி வர வேண்டும் என்று மருத்துவர்கள் காத்திருக்கும் முறையை மாற்றி நோயாளிகளைத் தேடி கிராமங்களுக்கு மருத்துவர்கள் செல்ல வேண்டும் என்ற புதிய கோட்பாட்டை முன் வைத்தார் வெங்கிடசாமி.

இந்த நோக்கத்தோடு கிராமியக் கண் மருத்துவமனையை 1962 ல் அவர் தொடங்கிய போது ஒட்டு மொத்த மருத்துவ உலகமும் இதை அதிர்ச்சியாகப் பார்த்தது.

மதுரை மாவட்டம்,கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன் ஆசிரமத்தில் நடந்த அவரது முதல் இலவச கிராமிய கண் அறுவை சிகிச்சை முகாமில்,சுமார் 2000 கண் நோயாளிகள் பங்கு பெற்றனர்.300 அறுவை சிகிச்சைகள் நடந்தன.இவர்கள் அனைவரையும் வெங்கிடசாமி தலைமையிலான மருத்துவக் குழு கிராமம் கிராமமாகத் தேடி தேடி சென்று அழைத்து வந்தது.

இந்த இடத்தில் மீண்டும் நினைவுபடுத்துகிறேன் மருத்துவர் வெங்கிடசாமி இளமையிலேயே முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்.அவரால் சரியாக நடக்கவே முடியாது.

தன் முதல் மருத்துவ முகாம் மூலம் மிக மிக குறைந்த செலவில் கண் நோய்களுக்கான மருத்துவமும்,அறுவைச் சிகிச்சைகளும் சாத்தியம் என்ற உண்மையை உணர்ந்தார் வெங்கிடசாமி.

அதைச் செய்வதற்காகவே ஒரு பிரத்யேக கண் மருத்துவமனையைத் துவக்கினார்.

தான் தொடங்கிய அந்த மருத்துவமனையின் கொள்கையாக,

"ஏழை எளிய சாதாரண மக்களுக்கு எந்தவிதமான லாப நோக்கங்களும் இன்றி தரத்திலும்,சேவையிலும் எந்தவித பாகுபாடும் இல்லாத மருத்துவ சேவையை முழுவதும் இலவசமாக வழங்க வேண்டும்..." என்பதை அறிவித்தார்.

நாற்பது ஆண்டுகளைக் கடந்தும் அந்த மருத்துவமனை இந்த கொள்கைகளில் இருந்து ஒரு இஞ்ச் கூட அடிபிரளாமல் நடந்து வருகிறது.அந்த மருத்துவமனையின் மருத்துவ முகாம் வாகனத்தின் சக்கரங்கள் தொடாத கிராமங்களே தமிழ்நாட்டில் இல்லை எனலாம்.கண் சம்பந்தப்பட்ட மருத்துவ சேவைகள் அனைத்தும் அனைவருக்கும் முழுக்க முழுக்க இலவசம்.இதில் எந்தப் பாடுபடும் இருக்காது.பணம் இல்லை என்பற்காக இந்த மருத்துவமனையில் எந்த மருத்துவமும்,அது அறுவை சிகிச்சையாகவே இருந்தாலும்,அது எக்காரணம் கொண்டும்,எவருக்கும் தடைபடவே தடைபடாது.

இன்னும் சொல்லப் போனால் இந்த மருத்துவமனையைப் பற்றி அதனால் பலனடைந்தவர்களைக் கேட்டால் சொல்வார்கள்,அந்த மருத்துவமனையின் மருத்துவ சேவை,தரம் பற்றி....

அந்த மருத்துவமனை தான் உலகப் புகழ்பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனை.

மருத்துவர் பத்மஸ்ரீ கோ. வெங்கிடசாமி தான் அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர்.

இன்று அவரது 100 வது பிறந்தநாள்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் 

தெய்வத்துள் வைக்கப் படும்.


No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...