Sunday, October 13, 2019

அந்தக் கால டுட்டோரியல் கல்லூரிகள்

கடந்த 1972 வரை பள்ளி இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி), கல்லூரியில் புகுமுக வகுப்பு (பி.யூ.சி), இளங்கலை (பி.ஏ), இளம் அறிவியல் பட்டப்படிப்புகள் (பி.எஸ்.சி) தேர்வு முடிவுகள் செய்தித்தாள்களில் வரும்போது பரபரப்பாக இருக்கும். தேர்வு எண்ணை ஒரு முறைக்கு பலமுறை பார்த்து பத்திரிக்கைகளில் சரியாக தான் இருக்கிறதா என்று உறுதி செய்யப்பட்டபின் நிம்மதி பிறக்கும். தேர்வில் வெற்றி பெற்றபின்னர் அடுத்த எந்த படிப்பிற்கு சேர்வது என்று சிந்தனைக்கு செல்வார்கள்.
தேர்வுகளில் தோற்றவர்கள் எந்த டுட்டோரியல் கல்லூரியில் சேரலாம் என்று வேதனையோடு வருத்தத்தோடு சிந்திப்பார்கள். வீட்டைவிட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடந்து டுட்டோரியல் கல்லூரியல் சேரும்போது தான் வீட்டுப்படியில் இருந்து இறங்கும் மாணவர்களும் உண்டு. டுட்டோரியல் கல்லூரியில் சேர்ந்தாலும் கலைக் கல்லூரியில் நடத்திய ஆட்டம் பாட்டத்தோடு எந்த திரைப்படத்தையும் தவறவிடாமல் தேர்வில் தோற்றுவிட்டோமே என்று கவலையில்லாமல் பலர் காலத்தை போக்குவதும் உண்டு.

No photo description available.


No photo description available.

No photo description available.

இந்த தேர்வு முடிவுகள் வெளிவரும் செய்தித் தாள்களின் இரண்டு பக்கங்களிலும் டுட்டோரியல் கல்லூரியின் விளம்பரங்கள் இடம்பெற்றிருக்கும். அப்போது பிரபலமாக இருந்த தமிழகத்தின் டுட்டோரியல் கல்லூரிகள் என்று எடுத்துக் கொண்டால் நாகர்கோவில் டயட்ரஸ், திருநெல்வேலியில் தமிழறிஞர் நா. வானமாமலை நடத்திய டுட்டோரியல் கல்லூரி (முருகன்குறிச்சி), தூத்துக்குடியில் ஒரு கல்லூரி இருந்தது பெயர் நினைவில் இல்லை. மதுரையில் விக்டரி டுட்டோரியல் கல்லூரி (மேற்கு வெளிவீதி, விடிசி - ஜெகதீசன்), மதுரை டுட்டோரியல் காலேஜ் (எம்.டி.சி), ஸ்டூடன்ட் டுட்டோரியல் (மதுரை), திருச்சியில் டுட்டோரியல் காலேஜ் (டி.டி.சி - தெப்பக்குளம், மதுரை, கோவையிலும் இதற்கான கிளைகள் இருந்தன), ராஜேந்திரா டுட்டோரியல் (தஞ்சை, கும்பகோணத்தில் இயங்கியது), கோவையில் கோயமுத்தூர் டுட்டோரியல்ஸ், எம்.பி. டுட்டோரியல் (பாலக்காட்டில் இதன் கிளை இருந்தது), சேலத்தில் சேலம் டுட்டோரியல், சென்னையில் மினர்வா டுட்டோரியல் காலேஜ் (எழும்பூர் - பரசுராமன்), ஜெயந்தி டுட்டோரியல் (புதுப்பேட்டை - சென்னை), மூர்த்தி டுட்டோரியல் (லஸ், மயிலாப்பூர்), சென்னை மணி டுட்டோரியல் (மொபரீஸ் ரோடு), மவுண்ட் டுட்டோரியல் காலேஜ் (அண்ணா சாலை), சுப்பிரமணியன் டுட்டோரியல் கல்லூரி (பாரீஸ், சென்னை), என முக்கிய கல்லூரிகள் இருந்தன. மாயவரம் எஸ்.என்.டி.சி. (ஸ்ரீ நடராஜ் டுடோரியல் காலேஜ்) மிகவும் பிரபலம். மதுரை வி.டிசி.யில் எழுத்தாளர் ஜி. நாகராஜன் வகுப்பு எடுக்கப்போகிறார் என்கிற செய்தியை திரையரங்குகளில் ஸ்லைடு மூலம் விளம்பரப்படுத்துவார்கள். பொள்ளாச்சியில் கேடிசி மற்றும் ஆர்டிசி அன்றைய காலகட்டத்தில் முக்கியமானதாக இருந்தது.
நாவலர் நெடுஞ்செழியன் இதனைத் தமிழில் 'தோற்றோரியல் கல்லூரி' என்று குறிப்பிட்டார்.
மாணவர்களுக்கு தங்கும் விடுதிகளும், கலைக் கல்லூரிகள் பல அமைப்பு ரீதியாக இந்த தனிப்பயிற்சி டுட்டோரியல் கல்லூரிகள் செயல்பட்டன.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் கூட சாத்தூர் டுட்டோரியல் கல்லூரியில் பணியாற்றியவர் தான். படைப்பாளி நாகராஜன் மதுரை விடிசி யில் சில காலம் வகுப்புகளை எடுத்தார். மினர்வா கல்லூரியின் பரசுராமன் நேரடியாக வகுப்புகளை எடுப்பார். எல்லா பாடங்களுக்ளும் துணை நூல்கள் (Guide) பதிப்பித்து வெளியிட்டார். இந்த கலாச்சாரம் இப்போது இல்லை. எனக்குத் தெரிந்த வரை 1972 வரை இத்தகைய டுட்டோரியல்கள் கலைக் கல்லூரிகளுக்கு நிகராக செயல்பட்டன. தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட தனிப்பயிற்சி கல்லூரிகள் இயங்கி வந்தன. கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் முன்பிருந்த இந்த கல்விக் கலாச்சாரம் இன்றைக்கு வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய நடவடிக்கையாக உள்ளது. தேர்வில் வெற்றிபெறாத இலங்கை, மலேசிய மாணவர்களும் இந்த டுட்டோரியல் கல்லூரியில் படிப்பதுண்டு.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
13.10.2019.

No comments:

Post a Comment

*Life is a circle of happiness, sadness, hard times, and good*

*Life is a circle of happiness, sadness, hard times, and good*. If you are going through a hard time, you've got to stay strong to be st...