Wednesday, January 25, 2023

*எனக்குத் தெரிந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்1970களில்….*




கடந்த எழுபதுகளின் தொடக்கத்தில்  பழ.நெடுமாறனோடு,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த எம்.பி.சுப்பிரமணியம் அவர்களோடு  (இவர் அண்ணா காலத்தில்  முதன்முறையாக திமுக போட்டியிட்டு வென்ற  சட்டமன்றத் தேர்தலில்  (1957) வெற்றி பெற்ற 15 எம்ஏல்ஏகளில் ஒருவர் ) அண்ணன் வாழப்பாடி ராமமூர்த்தியோடு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின்  தந்தையார் ஈ.வெ.கி.சம்பத் அவர்களைப் பார்க்க,  இன்றைக்கு வேப்பேரியி்ல் உள்ள அவருடைய  இல்லத்துக்குச் சென்றிருக்கிறேன். 

அப்போது,  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அங்கே பார்த்ததுண்டு.  புல் ஹேண்ட் சட்டை, பெல்பாட்டம், பெல்ட்அணிந்து ஹிப்பி முடியுடன் காட்சி அளிப்பார். டிஸ்கோவில் ஆர்வமானவர். 
சர்ச் பார்க் பள்ளியில் ஜெயலலிதாவும் இவரும் ஒரு சாலை மாணாக்கர்கள். ஜெயலலிதாவோடு அன்றைக்கு இவருக்குத் தோழமையும் உண்டு. அதேசமயம் பிற்காலத்தில் ஜெயலலிதா மீது மிகக் கடுமையான எதிர்வினை ஆற்றியவரும் கூட. அன்றைக்கு சர்ச் பார்க் பள்ளிக்கூடம் மாணவர்களும், மாணவிகளும் சேர்ந்து படிக்கும் பள்ளிக்கூடமாக இருந்தது. 
 
சிவாஜிகணேசனின் ஆதரவாளர் என்ற நிலையில் 1984 - ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அதிமுக ஆதரவில் இங் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதன்முறையாகச் சட்டமன்றத்துக்கு சென்றார். எம்ஜிஆர் ஆட்சிக் காலம். 1984 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனோடு மற்றும் இரண்டு பேருக்கு சிவாஜி கோட்டாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்புக் கிடைத்தது. அவர்களில் ஒருவர் உடுமலைப்பேட்டையில் திருமலைசாமி கவுண்டர், இன்னொருவர் பெயர் மறந்துவிட்டது.
 
சட்டையில் காலர் இருப்பதே தெரியாத  சிறிய காலர் உள்ள வெள்ளைச் சட்டையைப் போட்டுக் கொண்டு அவரின் தந்தையை போல அப்போது அவர்  சட்டமன்றத்துக்கு வருவதெல்லாம் நினைவுக்கு வருகிறது. 
மிகவும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர். யார் மீதும் எந்த தனிப்பட்ட  கோப, தாபங்களையும் காட்டாதவர். 

நான் பார்த்த அரசியலில், இவர் தந்தையார் சம்பத்தைப் போல - கவிஞர் கண்ணதாசனைப் போல - பழநெடுமாறனைப் போல,   தன்னோடு துணை நின்றவர்களை நன்றியோடு நினைத்துப் பார்த்து, அவர்களின் முன்னேற்றத்துக்கு  துணை நிற்கும் நல்ல மனிதர்களில் இவரும் ஒருவர்.

#KSR_Post
25-1-2023.

No comments:

Post a Comment

‘’*தூக்குக்கு தூக்கு*’’

‘’*தூக்குக்கு தூக்கு*’’                இராண்டாம் பதிப்பு வெளிவருகிறது.