Friday, September 30, 2016

கேரளத்தின் சண்டித்தனம்:பரம்பிக்குளம் - ஆழியாறு பிரச்சினை

பரம்பிக்குளம் - ஆழியாறு பிரச்சினை குறித்து இன்றைய தினமணியில் (30.9.2016) தலையங்க பக்கத்தில்  "கேரளத்தின் சண்டித்தனம்" என்ற தலைப்பில் வந்துள்ள எனது பத்தி,

கேரளத்தின் சண்டித்தனம்


- வழக்கறிஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

நதிநீர் ஆதாரங்களில் அண்டை மாநிலங்களின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டன. தினமும் ஒவ்வொரு அணையிலும், நதிநீரிலும் கேரளமும், கர்நாடகமும், ஆந்திரமும் தமிழகத்துக்கு சிக்கல்களை உருவாக்குகின்றன. தற்போது பரம்பிக்குளம் அணைப் பிரச்சினையில் கேரளா மூக்கை நுழைத்துள்ளது.

பரம்பிக்குளம் - ஆழியாறு - பாசனத் (பி.ஏ.பி.) திட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள 6 ஆறுகளையும் சமவெளிகளையும் இணைத்து 9 அணைக்கட்டுகள் மூலமாக தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் நீர் ஆதாரம் பங்கீடு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு 30.5 டி.எம்.சி. யும், கேரளத்திற்கு 19.5 டி.எம்.சி. யும் நீர் பகிர்மானம் செய்துகொள்ளள ஒப்பந்தமும் பல ஆண்டுகளுக்கு முன்னால் கையெழுத்தானது.

தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் கூட்டுத் திட்டமாக 32 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பல துணைத்திட்டங்களையும் கொண்டதாக பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் 1958 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. மேற்கு நோக்கி ஓடி அரபிக் கடலில் கலக்கின்ற பெரியாறு, சாலக்குடி, மற்றும் பாரதபுழா ஆறுகளின் துணை ஆறுகளை பயன்படுத்தும் கூட்டுத் திட்டமாக இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி சோலையாற்றின் இரு அணைகளும் பரம்பிக்குளம், பெரும்வாரி பள்ளம், தூணக்கடவு மற்றும் நீராறு ஆகிய ஒவ்வொரு நதிகளிலும் ஒரு அணைத்திட்டமாக பல திட்டங்களைக் கொண்டது. இது தவிர ஆழியாற்றில் ஒரு நீர்த்தேக்கமும் பாலாறு நதியின் திருமூர்த்தி நீர்த்தேக்கமும் கட்டப்பட்டுள்ளன. இவ்வணைகள் சுரங்கங்கள் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. சோலையாறு அணை, பரம்பிக்குளம் மலைக்குடைவு, பரம்பிக்குளம் அணை, மேல் நீராறு மற்றும் கீழ் நீராறு அணைகள், காண்டூர் கால்வாய், ஆழியாறு அணை, ஆழியாறு மலைக்குடைவு, நவமலை மலைக்குடைவு, திருமூர்த்தி அணை, வேட்டைக்காரன் புதூர் கால்வாய், பரம்பிக்குளம் பிரதான கால்வாய், சேது மடை கால்வாய், பொள்ளாச்சி கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய பகுதிகள் ஆகும்.  பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் கோயமுத்தூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம், கேரளத்தின் பாலக்காடு மாவட்டம் பயன்பெறுகின்றன.

இத்திட்டங்களில் உள்ள அணைகளைப் பராமரிப்பது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் தமிழகம் செய்துகொள்ள வேண்டும். பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு ஆகிய மூன்று அணைகள் தமிழக- கேரள எல்லையில் கேரளப் பகுதிக்குள் அமைந்துள்ளன. ஒப்பந்தத்தின்படி இந்த மூன்று அணைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு, நீர்மேலாண்மை போன்றவற்றை தமிழகமே செய்துவருகிறது.  அணைகள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் தமிழக அரசின் அதிகாரிகள் பயன்படுத்தும் பகுதிள் போன்றவற்றுக்கு தமிழக அரசு சார்பில் குத்தகைப் பணம் செலுத்தப்படுகிறது. மேலும் கேரளாவுக்கு ஒப்பந்தப்படி தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் உள்ள அணைகள் அனைத்திலும் ரூ. 40 கோடி செலவில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியை பி.ஏ.பி. அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.  இந்நிலையில், பராமரிப்புப் பணிகளைப் பார்வையிட தமிழகப் பொதுப் பணித் துறை அதிகாரிகள் 10.9.2016 அன்று பரம்பிக்குளம் பகுதிக்குச் சென்றனர். முதலில் பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு அணைகளைப் பார்வையிட்ட குழுவினர், பின்னர் பரம்பிக்குளம் அணையைப் பார்வையிடச் சென்றனர்.  வழியில் தமிழக அதிகாரிகள் சென்ற வாகனங்களை கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.  அணைகளைப் பார்வையிட தங்களிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்று கேரள வனத்துறையினர் தெரிவித்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல மணிநேரம் கேரள மாவட்ட வனஅலுவலரிடம் விளக்கமளித்த தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள், செய்வது அறியாது நடுவழியில் நின்றனர்.

தமிழக அதிகாரிகள் தாங்கள் அணையைப் பார்வையிட வேண்டும் என பலமுறை தெரிவித்தும், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரை காத்திருக்கச் செய்து, பரம்பிக்குளத்தை விட்டு வெளியேறுமாறு கேரள வனத்துறையினர் அடாவடியாகத் தெரிவித்ததால், தமிழக அதிகாரிகள் திரும்பிவிட்டனர்.

ஏற்கெனவே பலமுறை தமிழக அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் அணை பராமரிப்புப் பணிளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கும் கேரள வனத்துறையினர் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். பரம்பிக்குளம் அணைப் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட தமிழக பொதுப் பணித் துறையின் சோதனைச் சாவடியையும் கேரள வனத்துறையினர் அப்புறப்படுத்திவிட்டனர்.

ஒப்பந்தப்படி, பி.ஏ.பி. அணைகளைப் பராமரிக்கவும், பார்வையிடவும், பாதுகாக்கவும் தமிழகத்துக்கு உரிமை உள்ளது. மேலும், அணைப் பகுதி தவிர தமிழக பொதுப் பணித் துறை பயன்படுத்தி வரும் இடங்களுக்கு தமிழக அரசு குத்தகை செலுத்திவரும் நிலையிலும், கேரள வனத் துறையினர் கடந்த ஓராண்டாக அதிக இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்தப் பிரச்சினை ஒவ்வொரு வருடமும் சிக்கலாகி, கடந்த ஓராண்டாக மேலும் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளை அணைப் பகுதிகளுக்கு செல்லவிடாமல் கேரள வனத்துறையினர் தடுத்து வருகின்றனர்.  முல்லைப் பெரியாறு, பம்பாறு, சிறுவாணி அடுத்து, இப்போது கேரளா பி.ஏ.பி. யிலும் பிரச்சினையில் இறங்கிவிட்டது.

இப்படி தமிழகம் நீர்ப் பிரச்சினைகளில் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகின்றது. உண்மையான நிலையை சற்று ஆழமாக கவனித்தால் எந்த அளவு தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றது என்பது ஆட்சியாளர்களுக்கும் தெரியவில்லை, மக்களின் பிரதிநிதிகளுக்கும் புரிதல் இல்லை. இப்படித் தொடர்ந்து நீர் ஆதாரங்கள் தடுக்கப்பட்டால், தமிழகத்தின் எதிர்காலம் சூன்யமாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகின்றது.

கேரள அரசால் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யாறு, நெல்லை மாவட்டம் அடவி நயினாறு, உள்ளாறு, செண்பகவல்லி அணை உடைக்கப்பட்டது, அச்சன்கோவில்-பம்பை தமிழக வைப்பாறோடு இணைக்க மத்திய அரசு திட்டமிட்டும் நான் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவையும் கேரள அரசு மதிக்கவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகர் அணை கட்டுவதும் கேரள அரசால் 50 ஆண்டுகள் தள்ளிப் போய்விட்டன. முல்லைப் பெரியாறு சிக்கல் அனைவரும் அறிந்தது. சிறுவாணி, பம்பாறு, பாண்டியாறு-புன்னம்புழா, இப்போது ஆழியாறு-பரம்பிக்குளம் என கேரளா மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழகத்தின் நீர் ஆதார உரிமைகளான கிட்டத்தட்ட 30 திட்டங்களை முடக்க நினைக்கின்றது. மத்திய அரசும் பாராமுகமாக இருப்பது வேதனையும் தருகின்றது.

கர்நாடகமும் காவிரி, ஒகேனக்கல், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வரவேண்டிய மழை வெள்ள நீரையும் தடுக்கின்றது. பெண்ணையாற்றில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகம் மறுக்கின்றது. ஆந்திரமும் பாலாறு, பொன்னியாறு ஆற்றுச் சிக்கல்களிலும், பழவேற்காடு நீர்நிலையிலும் தமிழகத்தை திட்டமிட்டு சட்டத்துக்குப் புறம்பாக வாட்டுகிறது. இதற்கெல்லாம் எப்போது தீர்வு?

நதி ஆதாரங்கள் என்பது இயற்கையின் அருட்கொடை. இது அனைவருக்கும் பாத்தியப்பட்டது. தமிழகத்தில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 592 டி.எம்.சி.  அண்டை மாநிலங்கள் மூலமாக வரும் கிடைக்கும் நீரின் அளவு 261 டி.எம்.சி.  மொத்தம் தமிழகத்தின் 853 டி.எம்.சி. ஆகும். தமிழ்நாட்டில் 89 பெரிய, சிறிய அணைகள் உள்ளன. ஒரே நேரத்தில் 238.58 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இந்த அணைகளில் தேக்க முடியும். அதாவது கிடைக்கும் தண்ணீரில் நான்கில் ஒரு பங்கு தண்ணீரை மட்டும்தான் சேமிக்கக்கூடிய வசதிகள் உள்ளன. இதனால் தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றுவிடுகின்றது. நாடு விடுதலைப் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகு பாசனம் பெறும் நிலங்கள் 52 சதவீதம்தான். மீதி சற்று ஏறக்குறைய சரிபாதி அளவு வானம் பார்த்த விளை பூமிகளாகும். மழைக் காலங்களை நம்பியே விவசாயம் நடக்கின்றது. தமிழ்நாடு திட்டக்குழுவில் 15வது ஐந்தாண்டு திட்ட அறிக்கையின் படி பாசனப் பரப்புளவு (லட்சம் ஹெக்டேரில்)

பாசன முறை          1950-51        2000-01        2010-11
கால்வாய்                    7.88                8.01             7.47
ஏரிகள்                           5.65                5.37             5.33
குழாய்க் கிணறு        4.26              14.49           16.23

மேற்சொன்ன விவரங்களின்படி மொத்த பாசன நிலப்பரப்பில் ஆறுகள், கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் நிலத்தின் பரப்பளவு 1950-51 ஆண்டுகளில் 42.48 சதவீதமாக இருந்தது. 2010-11ல் 25.6 சதவீதமாக குறைந்துவிட்டது. மேலும் குறைந்துகொண்டே வருகின்றது.

ஏரிகள், கால்வாய்கள், குழாய்க் கிணறுகள் மூலம் விளைநிலங்களினுடைய பரப்புகளும் நீர்ப் பற்றாக்குறையால் குறைந்து வருகின்றன. ஒரு பக்கம் கடன்தொல்லையாலும் விவசாயிகள் நிலங்களை விற்றுவிடுகின்றனர். 19 லட்சத்து குழாய்க் கிணறுகள் நீர் ஆதாரமாக இருந்தும் சரியான நிலத்தடி நீர் கிடைப்பதும் இல்லை. இப்படியான நிலையில் நதிநீர் ஆதாரங்களும் தமிழக விவசாயிகளை ரணப்படுத்துகின்றது. இந்த சூழலில் விவசாயி எங்கே போவான்? நீர் ஆதாரங்களும் இல்லை. அண்டை மாநிலங்களால் நம்முடைய உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. மழைநீரை சேமிக்க நீர்நிலைகளோ, தடுப்பணைகளோ கூட திட்டமிட்டும் கட்டப்படாமல் காலம் தாழ்த்தப்படுகின்றது. தமிழ்நாட்டில் 12வது ஐந்தாண்டு திட்டத்தில் நிறைவேற்றப்படவேண்டிய பாசனத் திட்டங்களின் மதிப்பு ரூ. 8702 கோடி. இதனால் 1.47 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும் என்று கணக்கிட்டும் இவை யாவும் அறிக்கைகளாகவே உள்ளன. நடைமுறைக்கு வரவில்லை.

பிரதமர் மோடி கூட்டுறவு சமஷ்டி முறை என்ற (Co-operative Federalism) என நேற்று (10.9.2016) பேசியுள்ளார். அதற்கு பொருள் என்ன? இப்படி கேரளாவும், கர்நாடகாவும், ஆந்திரமும் தமிழ்நாட்டுக்கு நீர் ஆதாரங்களை திட்டமிட்டு முடக்கி தடுப்பதுதான் கூட்டுறவு சமஷ்டி முறையா? ஹெல்சிங் விதிகளின்படி கடைமடை பகுதிதான் நீர் ஆதாரங்களை முழுமையாக பயன்படுத்தவேண்டும் என்று இருந்தும் தொடர்ந்தும் தமிழகத்தின் உரிமைகளை அண்டை மாநிலங்கள் கபளீகரம் செய்வது நியாயம்தானா?

கேரளாவின் நொண்டியாட்டத்தை பல ஆண்டுகளாக அணைகளில் காட்டி வருகின்றது.  தமிழகத்திடமிருந்து அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் பெற்றுக்கொண்டு கடவுளின் தேசம் என்று சொல்லிக் கொள்ளும் கேரளம் வம்புத்தனமாக சண்டித்தனம் செய்வது முறைதானா?


No comments:

Post a Comment

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things that makes you sad.

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things th...