Tuesday, September 6, 2016

தூத்துக்குடி

தூத்துக்குடி விமானநிலயத்தில் 
இறங்கி,திருநெல்வேலி செல்லும் போது இந்த கடையை எட்டி பார்ப்பது உண்டு .

வாழ வைக்கும் வடை!
 -------------------    
சிங்கிள் டீயே 8 ரூபாய்க்கு விற்கிற இந்தக் காலத்திலும் ஒரு ரூபாய் வடை எப்படி சாத்தியம் என்பதையும், 15 ஆண்டுகளாக வடையின் விலையை உயர்த்தாமலே இருக்கிறீர்களே, உங்கள் பிசினஸ் ரகசியம் என்ன என்றும் இந்தக் கடையின் உரிமையாளர் ராபின்ஸ்டனிடம் கேட்டோம்.

“தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வசவப்பபுரம் என்னோட சொந்த ஊர். வேலை தேடி 31 வருடத்துக்கு முன்பு பாளையங்கோட்டைக்கு வந்தேன். பள்ளி, கல்லூரிகள் இருக்கும் இந்தத் தெருவில் டீக்கடை போடலாம்னு முடிவு செஞ்சேன். ஆரம்பத்தில் இங்கே டீ மட்டுமே விற்பனை செஞ்சேன்.

என்னோட கடைசி தங்கை ஜெயந்தி மீதுள்ள பாசத்தில் அவளது பெயரையே கடைக்கு வச்சேன். தரமாகவும் சுவையாகவும் டீ போட்டதால் கூட்டம் வர ஆரம்பித்தது. எனக்கு திருமணமானதும் டீக்கடையில் வடை போடலாம் என முடிவு செஞ்சேன். என் மனைவியின் சகோதரர்களை அழைத்து வந்து கடையில் வேலை செய்ய கற்றுத் தந்தேன்.

அதன்பிறகு, வடை போடுறதையே பிரதானமா செய்யுறதுன்னு முடிவு செஞ்சோம். ஆனா அப்படி முடிவுஎடுத்தப்ப, ‘கடையில விக்கிற வடையோட விலை ஒரு ரூபாயாத்தான் இருக்கணும். எக்காரணம் கொண்டும் விலையை ஏத்தக்கூடாது’ன்னு தீர்மானிச்சோம். இந்த முடிவுதான் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெயரை வாங்கிக் கொடுத்திருக்கு. அன்றிலிருந்து இன்று வரை வடையோட விலையை நாங்க உயர்த்தலை. அதே ஒரு ரூபாய்தான்.

ஆரம்ப காலகட்டத்துல ஐநூறு வடை வரைக்கும் விக்கும். ஆனால், இன்று ஏழாயிரம் வடை வரைக்கும் விற்பனை ஆகுது. நாங்க குடும்பத்தோடு உழைக்கிறதால, எங்களால குறைஞ்ச விலைக்கு வடையை விற்பனை செய்ய முடியுது. ஒரு நாளுக்கு 25 கிலோ கடலை பருப்பு வாங்குறோம். மொத்த விற்பனைக் கடையில் பொருட்களை மூட்டையாக வாங்குவதால், குறைந்த விலைக்கு கிடைக்கிறது. அதேபோல, எண்ணையையும் மொத்தமா கொள்முதல் செய்றோம்.

நாங்க இந்தத் தொழிலுக்கு வந்தப்ப ஒரு கிலோ உளுந்து 25 ரூபாய். கடலைப்பருப்பு 10 ரூபாயா இருந்தது. இப்ப உளுந்து 140 ரூபா; கடலைப்பருப்பு 48 ரூபா. அதனால வடையோட சைஸைக் கொஞ்சம் சின்னதாக்கிட்டோமே தவிர, நாங்க விலையை உயர்த்தலை. ஒரு ரூபாய்க்கு தேங்காய் சட்னியுடன் வடை கிடைக்கிறதால, பள்ளிக் குழந்தைங்க ஐந்து ரூபாய்க்கு வயிறார வடையை சாப்பிட்டுப் போறாங்க.

பள்ளிக் குழந்தைகளை கூட்டிகிட்டு போகவரும் பெற்றோரும் வீட்டுக்கு வடையை வாங்கிட்டுப் போறாங்க. பக்கத்தில் உள்ள இடங்களில் இருந்து எங்கக் கடைக்கு  வடை சாப்பிடு வதற்காகவே நிறைய பேர் வர்றாங்க. தவிர, கல்யாண ஆர்டரும் அடிக்கடி வரும். அவங்களுக்கும் நிறைவா வடை செஞ்சு தர்றோம்.

தினமும் காலையில, 5 மணி முதல் 8 மணி வரையிலும் மொத்த வியாபாரத்துக்கு வடை செஞ்சு கொடுக்கிறோம். அதாவது, வேறு டீ கடைகளைச் சேர்ந்தவங்க எங்க கடைக்கு வந்து வடையை வாங்கிட்டு போவாங்க. அவங்க அதை 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விற்கிறாங்க. காலையில 8 மணிக்கு பிறகு எங்க வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். அதுக்குப் பிறகு இரவு 8 மணி வரைக்கும் கடையில் விற்பனை நடக்கும். தரத்தில் நாங்க எப்பவுமே சமரசம் செஞ்சுகிட்டது கிடையாது.

நாங்க இந்தத் தொழிலை தொடங்கினப்பவே எங்க கடையில நல்ல லாபம் கிடைச்சுது. அப்ப கிடைச்ச லாபம் இப்பவும் கிடைக்குது. அதுக்கு காரணம், இப்ப விற்பனை அதிகமானதுதான்.

உணவுப் பொருளைத் தரமாகவும் ருசியாகவும் கொடுக்கிறதால, எல்லாரும் விரும்பி ஏத்துப்பாங்க என்பதை அனுபவமாக உணர்ந்து இருக்கோம். புதுசா தொழில் பண்ணனும்னு நினைக்கிறவங்க, கடுமையாக உழைக்கணும். செய்ய நினைக்கும் தொழிலைப் பத்தி முழுமையாகத் தெரிஞ்சுகிட்டு உழைக்கணும். யாருக்காவும் எதுக்காகவும் தரத்துல சமரசம் செஞ்சிக்கவே கூடாது” என்று புதிய தொழில்முனைவோருக்கு டிப்ஸ் வேறு தந்தார்.

ஆசிரியையாக பணியாற்றும் அவரது மனைவி ஆரோக்கிய அமுதா, “ஆரம்ப காலத்துல ‘வடைக் கடைக்காரரோட மனைவி’ என்று எல்லோரும் சொல்லும்போது எனக்குக் கூச்சமாக இருந்துச்சு. ஆனா, என் கணவர் சுயமாக உழைத்து அதிகமான வாடிக்கையாளர்களை வைத்திருக்கிறார். இப்ப என்னைப் பலரும், ‘ஒரு ரூபாய் வடைக்காரரின் மனைவி’ என்று சொல்லும்போது மனதில் உற்சாகமும் பெருமிதமும் ஏற்படுகிறது” என்கிறார், பெருமை பொங்க.

ராபின்ஸ்டனால் ஒரு ரூபாயிலேயே தரமாக வடை தரமுடிகிறது எனில், அதிக விலை வைத்து விற்கப்படும் வடையில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை வாசகர்களே கணக்கு போட்டு பார்த்துக்கொள்ளலாம். தரமும், ருசியும், நேர்மையும் இருந்தால், ஒரு சிறிய வடைக் கடை கூட உங்களைச் சிறப்பாக வாழ வைக்கும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம்!

வடை விற்பனையில் சத்தமில்லாமல் சாதனை செய்து வருகிறார், நெல்லையைச் சேர்ந்த ஒருவர். ஒரு ரூபாய்க்கு வடை விற்பனை செய்வதால், இவரது கடையில் எப்போதும் கூட்டம் ஜேஜேதான்!

நூறு வருடங்களுக்கு முன்பு ஒரு ரூபாய் இருந்தால், ஒருவர் ஒரு நாளில் ராஜ வாழ்க்கை வாழ்ந்துவிடலாம். ஒரு  ரூபாய்க்கு அவ்வளவு மதிப்பிருந்த காலம் அது. ஆனால், இன்றைக்கு ஒரு ரூபாயை யாரும் மதிப்பதில்லை. விலைவாசி விண்ணை முட்டிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், கடந்த 15 வருடங்களாக நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ‘ஒரு ரூபாய் வடை கடை’யில் வடையின் விலை உயரவே இல்லை என்பது அதிசயமான உண்மை.

இந்தக் கடையின் உண்மையான பெயர் ஜெயந்தி டீ ஸ்டால். சின்னக் கடைதான்.  ஆனால் வேலை செய்யும் தொழிலாளர்களும், அந்தக் கடையைச் சுற்றி நிறைந்திருக்கும் வடை பிரியர்களும் என கடை முன்னால் எப்போதுமே கூட்டம் அலைமோதுகிறது. இந்த வடைக் கடைக்கு அருகில் பள்ளி, கல்லூரிகள் அமைந்திருப்பதால் மாலை நேரத்தில் மாணவர்கள் கூட்டம் வேறு முட்டி மோதுகிறது.

-நாணயம் விகடன்

No comments:

Post a Comment

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things that makes you sad.

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things th...