Thursday, September 29, 2016

தமிழனின் பழந்தொன்மை கீழடி

தமிழனின் பழந்தொன்மை கீழடி
=============

சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல் அகழாய்வுத் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் வடமொழி எழுத்து, மண்பானைகள் உட்பட 5,300 சங்கக்கால பொருட்கள் கிடைத்துள்ளன. அது குறித்து உரிய ஆய்வு நடத்த மத்திய அரசுக்கு வேண்டுகோள்கள் விடப்பட்டன. மாமதுரை 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமை நகரம் ஆகும். ஏதென்ஸ், ரோம்-க்கு ஒப்ப தமிழகத்தின் கலாச்சார நகரம் மதுரை. இந்நிலையில் மதுரை வைகை ஆற்றங்கரையில் கடந்த 2015 ஆண்டு முதல் மத்திய தொல்துறை அகழாய்வுத் துறை பெங்களூர் பிரிவு கீழடியில் நிலத்தை வெட்டி ஆகழராய்ச்சி செய்ததில் பல தரவுகள் கிடைத்துள்ளன. மொத்தம் 43 தொல்லியல் குழிகள் வெட்டப்பட்டன. சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டப் பொருட்கள் கிடைத்துள்ளன. அன்றைக்குள்ள நாகரீகம் கண்டறியப்பட்டுள்ளது. எழுத்துக்கள் கூடிய சுடுமண் பானைகளும், இரண்டாவது கட்டமாக 2016 ஜனவரி முதல் செப்டம்பர் வரை நடந்த ஆய்வில் 59 குழிகளில் 3500 அரிய வகை பண்டைய காலத்தில் புழக்கத்தில் இருந்த பொருட்கள் கிடைத்துள்ளன. யானை தந்தத்திலான தாயக் கட்டைகள், சதுரக் கட்டைகள், பெண்கள் காதனிகள், மான் கொம்பிலான கத்தி, மேலும் எழுத்துக்கள் கொண்ட 39 சுடுமண் பானைகள் கிடைத்துள்ளன. பிராகிரிதம் என்ற பிரம்மி எழுத்துக்களிலான 71 பனை ஓடுகளும் கிடைத்துள்ளன. இரண்டு ஆண்டுகளில் 102 குழிகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 50 சென்ட் தான் மொத்தப் பரப்பு கண்டறியப்பட்டுள்ளது. தனியாரிடமும் ஒப்பந்த அடிப்படையில் ஆய்வு நடத்தப்படுகிறது.  இதைப் பற்றி அறிய நேரில் சென்று ஆய்வு செய்தபோது, கிடைத்த தரவுகள் ஏராளம். 5300 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இப்பகுதி சிந்து சமவெளி நாகரிகம் போன்று நகர நாகரீகமாகும்.  எண்ணற்ற கட்டடங்களும், ரோம், ஆப்கான் போன்ற தொடர்புகளும் இந்தப் பகுதிக்கு இருந்ததாக தெரியவருகிறது. நகரித்தின் குடியிருப்புப் பகுதிகள், கால்வாய்கள், தொழிற்காலைகள் எல்லாம் அமைந்துள்ளதாக தெரிகிறது. 1964ல் பத்துப்பாட்டை ஆராய்ச்சி செய்த மா. ராசமாணிக்கனார், பழந்தமிழ் இலக்கியங்களான பரிபாடல், திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, சிலப்பதிகாரம் மற்றும் திருவிளையாடற் புராணம் அடிப்படையில் தற்போதுள்ள மதுரை நகரம் சங்க கால மதுரை இல்லை என்றும் திருப்புவனத்திற்கு மேற்கிலும், திருப்பரங்குன்றத்திற்கு கிழக்கிலும் அமைந்ததுதான் பண்டைய மதுரை என்று தனது ஆய்வு மூலம் வெளிப்படுத்தினார்.  அது இந்த நகரமாக இருக்கலாம் என்று நமக்குப் படுகின்றது. 

தமிழகத்தில் அகழராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றாலும் அதற்கான முடிவுகளும் செயல்பாடுகளும் திருப்திகரமாக இல்லை. அரிக்கமேடு, காவிரிபூம்பட்டினம், உறையூர், ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் அகழ் ஆய்வில் பல தரவுகள் கிடைத்தன. குறிப்பாக இறந்தவர்களின் எலும்புகள், முதுமக்கள் தாலிகள்தான் கிடைத்தன. ஆனால் கீழடியில் வேறு சில அரிய பொருட்கள் அகழ் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  மொகஞ்சதரோ, ஹரப்பாவில்தான் இங்கு கிடைத்த கழிவுநீர் கால்வாய் மாதிரி இருந்தன என்ற செய்திகள். 

வைகை நதிக்கரையில் பல நூறாண்டுகளாக மனிதர்கள் நாகரீகத்தோடு, சமூக அமைப்போடு வாழ்ந்தார்கள் என்றும் வைகை ஆற்றில் வைகை நதி தொடங்கும் வருச நாட்டை அடுத்த வெள்ளி மலையிலிருந்து வைகை நதி கடலில் கலக்கும் ராமநாதபுரம் மாவட்டம் அழகன் குளம் ஆற்றங்கரை வரையில் சுமார் 400 கிராமங்கள் வரை வைகை நதி ஓரத்தில் இருந்துள்ளன. இந்த கிராமங்களில் கீழடியும் ஒன்று என்று தெரிய வருகிறது.  இங்கு விவசாயம் பிரதானத் தொழிலாகவும் இருந்திருக்கலாம். தற்போது இந்த மண்ணில் தென்னை மரங்கள்தான் ஏராளம். 

தோண்டி எடுக்கப்பட்ட அகழ் ஆய்வுகளில் 36:22:6, 34:21:5, 35:22:6, 32:21:5 செ.மீ. அளவுள்ள செங்கற்கள் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன. கட்டடங்கள் யாவும் சதுரம், செவ்வகம், நீள் சதுர வடிவங்களில் அமைந்திருந்தன. அது போல சில கட்டடங்களில் உலைக்கலன்களும் இருந்துள்ளன. கிடைத்த மண்பாணை குவளைகளில் இலங்கையைச் சேர்ந்தவர்களின் பெயர்களும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. செம்பினால் ஆன வளையல்கள், பாசிகள், மோதிரங்கள், இரும்பினால் செய்யப்பட்ட கோடாரி, இடுக்கி, ஈட்டி முனை, விலங்குகளின் கொம்புகள், அம்பு முனைகள், சில்லான் குச்சிகள், இடைகற்கள், கண்ணாடி மணிகள் என பலத் தரவுகள் வேறுபட்ட நிலையில் கிடைத்துள்ளன. காவிரிபூம்பட்டினம், அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர் போன்ற அகழ் ஆய்வுப் பணிகளை விட இது சற்று வித்தியாசமாக இதுவரை கிடைக்காத பண்டையக் காலத்து அடையாளங்கள் கிடைத்துள்ளன. 

இந்த ஆய்வுகள் 2016 செப்டம்பருக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இங்கு சேகரிக்கப்பட்ட பொருட்களை மைசூரில் உள்ள அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வருகின்றனர். இன்னும் பல ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றால் மேலை நாடுகளுக்கு அனுப்பவேண்டிய நிலை. 

தமிழகத்தில் கிடைத்த இந்த அரிய பழங்காலப்பொருட்களை மைசூருக்கு அனுப்பாமல் பழந்தமிழர் தொன்மையை விளக்கக்கூடிய அருங்காட்சியகத்தை இதே கீழடியிலேயே அமைக்கலாம். தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியும் இந்த அரியப் பொருட்கள் மைசூருக்கு அனுப்பப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. 

இந்த அகழ்வாராய்ச்சிப் பணியில் மத்திய - மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும். சுமார் 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம் பழந்தமிழரின் நாகரீகத்தின் எச்சமாகும். கீழடி உட்பட பல பகுதிகளில் எடுத்த/எடுக்கிற தொல்பொருள் அகழ்வு பொருட்களை அந்தந்த மாநிலங்களிலேயே, இன்னும் சொல்லப்போனால் அந்தந்தப் பகுதிகளில் மையங்கள் அமைத்து பாதுகாப்பதும், அதன் பிரதிகளை ஆய்வு செய்ய பல்கலைக்கழகங்களோடு இணைந்த ஆய்வுமையங்கல் உருவாக்க வேண்டும். அரிதாக கிடைக்கிற வரலாற்றுத் தரவுகளை சாக்கில் கட்டி கொல்லைப்புறத்தில் எறிகிற நிலைமை மாற வேண்டும்.

இதுவரை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட தொல்பொருட்களை கண்டறிந்து அவற்றை மீட்டு தமிழகத்திற்கு கொண்டுவர வேண்டும். எதெற்கெல்லாமோ பணம் விரயம் செய்கிற தமிழக அரசு தனியாக தொல்பொருள் பராமரிப்பு மற்றும் ஆய்வுத்துறையை உருவாக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things that makes you sad.

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things th...